Published:Updated:

சிவகங்கை: `குடிக்கக்கூட தண்ணீர் இல்ல’ - கலங்கிய மக்களுக்கு கைகொடுத்த `வைகை பட்டாளம்'

இராணுவ வீரர்களுடன்
இராணுவ வீரர்களுடன்

ராணுவ வீரர்கள் எங்களுக்கு காய்கறி, அரிசி, சாப்பாடுனு நிவராணம் கொடுத்தாங்க. குடிக்க தண்ணி இல்லேனு கேட்டப்ப லாரில தண்ணி கொண்டு வந்தாங்க. இப்ப எங்களுக்கு டேங்கு வச்சு கொடுத்துருக்காங்க.

`கொரோனா ஊரடங்கு பலரையும் செயல் இழக்க வைத்தது. ஆனால், எங்களை கொரோனாதான் மனதளவில் ஒன்றிணைய வைத்து செயல்பட வைத்துள்ளது’ எனப் பெருமையாகத் தெரிவித்தனர், இந்திய ராணுவ வீரர்கள். கொரோனா சமயத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப் மூலம் ஒன்றிணைந்து தங்களிடம் இருக்கும் பணத்தைத் திரட்டி உதவி செய்ய ஆரம்பித்தனர்.

ராணுவ வீரர்கள் அமைத்துக் கொடுத்த டேங்
ராணுவ வீரர்கள் அமைத்துக் கொடுத்த டேங்

சிறிய அமைப்பாக இருந்த 'வைகை பட்டாளம்' தற்போது மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த ராணுவ வீரர்களையும் இணைய வைத்து நூற்றுக்கணக்கான உதவிகளைச் செய்துள்ளனர். இந்நிலையில் மானாமதுரை சந்நிதி புதுக்குளம் கிராமத்தின் நீண்ட நாள் கோரிக்கையான தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்யும் திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர்.

இது குறித்து ராணுவ வீரர் அன்பரசன் நம்மிடம், ``சாதி, மதங்களைக் கடந்ததுதான் எங்கள் 'வைகைப் பட்டாளம்' அமைப்பு. சிவகங்கை மாவட்டத்தில் எல்லா பகுதிக்கும் உதவிகளைக் கொண்டு சேர்த்துக்கொண்டிருக்கிறோம்.

கடந்த மார்ச் 5-ம் தேதி, கொரோனா நிவாரண பணிகளைத் தொடங்கி தற்போதுவரை செய்து வருகிறோம். நாட்டின் 74-வது சுதந்திர தின நிகழ்ச்சியை முன்னிட்டு மாவட்டம் முழுதும் 1,200 நாட்டு மரக்கன்றுகளை வழங்கினோம். மானாமதுரை அருகே உள்ள சந்நிதி புதுக்குளம் பகுதியில் நாடோடி இனமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பட்டா வசதி இல்லாததால் 7 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை.

ராணுவ வீரர்கள்
ராணுவ வீரர்கள்

எனவே, குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் கண்மாயில் நீரை எடுத்து குடித்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கு குடி தண்ணீர் கொண்டுவர குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்துள்ளோம். சுமார் 10,000 செலவில் மேடை மற்றும் டேங் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டேங்க் பல ஆண்டுகளுக்கு பாசம் பிடிக்காத அளவுக்கு செயல்படும் பிரத்தியேக டேங்க். இதில் தற்காலிகமாக டேங்கில் தண்ணீர் நிரம்பி கொடுக்க உள்ளோம்.

தொடர்ந்து அவர்களுக்கு அந்த டேங்கில் தண்ணீர் நிரப்பிக் கொடுக்க அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். இதனால் அவர்களின் குடிநீர் தேவை பூர்த்தியடையும்” என்றார்.

ராணுவ  வீரர் மரக்கன்று வழங்குதல்
ராணுவ வீரர் மரக்கன்று வழங்குதல்

சந்நிதி புதுக்குளத்தைச் சேர்ந்த மாணிக்கம், ``கொரோனா தீவிரமாக இருந்தபோது ராணுவ வீரர்கள் எங்களுக்கு காய்கறி, அரிசி, சாப்பாடுனு நிவராணம் கொடுத்தாங்க. குடிக்கத் தண்ணி இல்லேனு கேட்டப்ப லாரில தண்ணி கொண்டு வந்தாங்க. இப்ப எங்களுக்கு டேங்கு வச்சு கொடுத்துருக்காங்க. வாரம் இரு முறையாவது இந்த டேங்கில் அரசு தண்ணி கொடுக்கணும்" என்று கோரிக்கை வைத்து முடித்தார்.

அடுத்த கட்டுரைக்கு