Published:Updated:

`மனமுடைந்த எங்களுக்கு இந்த உத்தரவுதான் மருந்து'- சிவகங்கை கலெக்டருக்கு குவியும் லைக்ஸ்!

தனது கடமையை முறையாக செய்த காரணத்தால் கொலை செய்யப்பட்ட கிராம உதவியாளர் குடும்பத்திற்கு கருணை அடிப்படையில் உடனடியாக உதவி செய்ய நடவடிக்கை எடுத்த சிவகங்கை கலெக்டருக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

ஜெயகாந்தன் - ஆட்சியர்
ஜெயகாந்தன் - ஆட்சியர்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை அடுத்த திருவேகம்பத்தூர் பகுதியை சேர்ந்தவர் இராமகிருஷ்ணன். இவர் இப்பகுதியில் வருவாய் கிராம உதவியாளராக பணியாற்றிவருகிறார்.

கொலை செய்யப்பட்ட இராதாகிருஷ்ணன்
கொலை செய்யப்பட்ட இராதாகிருஷ்ணன்

இந்நிலையில் அதிகாரிகளுடன் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய காரணத்திற்காக கடந்த 30ம் தேதி மாலை கொலை செய்யப்பட்டார். தன்னுடைய கடமையை செய்த கிராம உதவியாளர் இராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டது அரசு ஊழியர்களிடமும், அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

இறந்த இராதாகிருஷ்ணன் வீட்டில் அவர் மட்டுமே பணிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இதனால் எந்த வருவாயும் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்ட அவரது குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்தனர்.

ஆளுநர் கலந்து கொண்ட விழா
ஆளுநர் கலந்து கொண்ட விழா

இதனை அறிந்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் உடனடியாக இராதாகிருஷ்ணன் மகள் தாரணிக்கு கிராம நிர்வாக அலுவலர் பணி நியமன ஆணையை வழங்க உத்தரவிட்டார். காரைக்குடியில் ஆளுநர் வருகை இருந்ததால் பல்வேறு பணிகளுக்கும் இடையிலும் மாவட்ட ஆட்சியர் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு பணி நியமன ஆணையை வழங்க உத்தரவிட்டு ஏற்பாடுகளை செய்தார். மாவட்ட ஆட்சியரின் கருணை அடிப்படையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு மிக விரைவாக பணி நியமன ஆணை வழங்கியதை பலரும் சமூக வலைதளங்களில் பாரட்டிவருகின்றனர்.

இது குறித்து சிவகங்கை மாவட்ட அரசு ஊழியர் சங்கத்தினர் வெளியிட்ட அறிக்கையில்...," மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கவர்னர் நிகழ்வில் இருந்தாலும், எங்களின் நியாயமான உணர்வுகளைப் புரிந்து கொண்டு உடனடியாக உயிரிழந்த இராதாகிருஷ்ணன் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை சில மணி நேர அவகாசத்தில் உத்தரவு வழங்கியது, மறக்க முடியாத நிகழ்வாகும்.

கலெக்டர் ஜெயகாந்தன்
கலெக்டர் ஜெயகாந்தன்

இந்நிகழ்வு சிவகங்கை மாவட்ட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக எண்ணுகிறோம். மனமுடைந்த நிலையில் நின்றிருந்த எங்களுக்கு இந்த உத்தரவு மருந்தாக அமைந்தது.

சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மனமுவந்து வரவேற்கிறது. மாவட்ட ஆட்சியரின் மகத்தான, மக்களை நோக்கிய பயணத்தில்., நாங்களும் பக்கபலமாக துணை நிற்போம்" என்று தெரிவித்துள்ளனர்.