Published:Updated:

சிவகங்கை: மாணவியின் புகைப்படத்தோடு தபால் தலை வெளியீடு... கௌரவப்படுத்திய மாவட்ட ஆட்சியர்!

அரசுப் பள்ளி  மாணவி சத்யபிரியா
அரசுப் பள்ளி மாணவி சத்யபிரியா

''அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் இதுபோன்ற ஒவ்வோர் அங்கீகாரமும், அரசுப் பள்ளியின் நிலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல ஊக்கமாகவும் உதவியாகவும் இருக்கும்.''

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த சேவினிப்பட்டியைச் சேர்ந்த தம்பதி முருகேசன் - ராதிகா. கூலித் தொழில் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அரசுப் பள்ளியில் படித்துவரும் இவர்களின் மகள் சத்யபிரியாவின் புகைப்படத்துடன்கூடிய தபால்தலையை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு பெருமைப்படுத்தியுள்ளது, சிறப்புச் செய்தி. இதைத் தொடர்ந்து மாணவிக்கு பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

அரசுப் பள்ளி  மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

இதுகுறித்து, சத்யபிரியா படிக்கும் திருப்பத்தூர், சேவினிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். "தேசிய வருவாய் வழி மற்றும் திறனாய்வுத் தேர்வில் (NMMS The National Means Cum Merit Scholarship) எங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் ஒவ்வோர் ஆண்டும் தேர்வு எழுதி தொடர்ந்து 7 ஆண்டுகளாகத் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அப்படி இதுவரை எங்கள் பள்ளியில் பயின்ற மாணவர்ளில் மொத்தம் 30 பேர், இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு ஐந்து மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.

இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.12,000 வீதம், நான்கு ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48,000 வழங்கப்படும். இந்தத் தேர்வு எழுத, எட்டாம் வகுப்பு மாணவ, மாணவிகளில் 60%க்கு மேல் மதிப்பெண்கள் பெறக்கூடிய மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

அரசுப் பள்ளி  மாணவி சத்யபிரியா ஒளிப்படத்தோடு கூடிய தபால் தலை
அரசுப் பள்ளி மாணவி சத்யபிரியா ஒளிப்படத்தோடு கூடிய தபால் தலை

தமிழ்நாட்டில் மொத்தம் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர். அவர்களில், இந்த வருடம் தமிழகத்தில் மொத்தம் 6,695 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 129 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

எங்கள் பள்ளி மாணவி சத்யபிரியா, மாநில அளவில் மூன்றாமிடமும் சிவகங்கை மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று, சிவகங்கை மாவட்டத்துக்கும் எங்கள் பள்ளிக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்.

சத்யபிரியா பெற்ற மதிப்பெண்கள் 138/180. இதனால் மாணவியின் புகைப்படத்துடன்கூடிய அஞ்சல் தலையை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வெளியிட்டு மாணவியைக் கெளரவப்படுத்தியுள்ளார். இது அரசுப் பள்ளி மாணவர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாவட்ட ஆட்சியர் தந்த ஊக்கத்துக்கு மிக்க நன்றி” என்றனர்.

அரசுப் பள்ளி  மாணவர்களை பாராட்டும் ஆட்சியர்
அரசுப் பள்ளி மாணவர்களை பாராட்டும் ஆட்சியர்

பள்ளி ஆசிரியர்கள் மட்டும் அல்லாது கிராம மக்களும் சத்யபிரியாவை பாராட்டி வருகின்றனர். சத்யபிரியாவிடம் பேசினோம்.

``தேசத் தலைவர்கள் புகைப்படம் உடைய தபால்தலையை பயன்படுத்தியிருக்கேன். இப்போ என் படம் உள்ள தபால்தலையைப் பார்க்கும்போது ஆச்சர்யமாவும் பெருமையாவும் இருக்கு. என் படிப்புக்கும் முயற்சிக்கும் கூடுதல் ஊக்கம் கிடைச்சிருக்கு” என்றார் மகிழ்ச்சியுடன்.

''அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் இதைப் போன்ற ஒவ்வோர் அங்கீகாரமும், அரசுப் பள்ளியின் நிலையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்ல உதவியாக இருக்கும்'' எனச் சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு