Published:Updated:

90,000 பேருக்கு இலவச காய்கறி; உதவி மையம்! - சிவகங்கை முன்னாள் எம்.பியால் நெகிழும் மக்கள்

காய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி
காய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி

`அந்த சமயத்தில் விவசாயிகள் வாழை மற்றும் இதர விளைபொருட்களை வைத்துக் கொண்டு விற்கமுடியாமல் திண்டாடினர்’.

இந்தியாவில் மே-3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் 20 தேதி முதல் கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்படுகிறது. இருந்த போதிலும் பல்வேறு குடும்பங்கள் பணிக்கு செல்லாமல் வறுமையில் வாடிவருகின்றனர். இந்நிலையில் ஆங்காங்கே சமூக ஆர்வலர்கள் ஏழை, எளிய மக்கள் ஆதரவற்றோர் என தோள் கொடுத்து வருகின்றனர்.

காய்கறிகள்
காய்கறிகள்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் பொதுமக்களின் பசியைப் போக்கும் வகையில் முன்னாள் எம்.பி., செந்தில்நாதன் செயல்பட்டுவருகிறார். 60,000 நபர்களுக்கு 10 வகையான காய்கறிகளை வழங்கப்போவதாக திட்டம் போட்டு தற்போது 90,000 பேருக்கு இலவசமாக காய்கறி வழங்கியுள்ளார்.இதனால் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார மக்கள் நெகிழ்ச்சியடைய பாராட்டிவருகின்றனர்.

இதுகுறித்து செந்தில்நாதனிடம் பேசினோம்.``நான் அ.தி.மு.க., மாவட்ட செயலாளராக இருந்தாலும் என்னுடைய சொந்த மாவட்டத்தில் உள்ள மக்கள் அனைவரையும் உறவுகளாகத்தான் பார்க்கிறேன். கொரோனா அச்சத்தால் மக்கள் முடங்கிக் கிடக்கும் நேரத்தில் கண்டிப்பாக ஏதாவது உதவி செய்ய வேண்டும் என நினைத்தேன். அந்த சமயத்தில் விவசாயிகள் வாழை மற்றும் இதர விளைபொருட்களை வைத்துக் கொண்டு விற்கமுடியாமல் திண்டாடினர்.

காய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி
காய்கறி பை வழங்கும் முன்னாள் எம்.பி

இதனால் உள்ளூர் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை விலைக்கு வாங்கி மக்களுக்கு கொடுக்கலாம் என நினைத்து அதன் 90% சதவீத பணிகள் முடிந்துவிட்டது. மற்ற நலத்திட்டங்கள் கொடுக்கும்போது நேரில் செல்ல முடிந்தது. ஆனால், தற்போது கொரோனா பாதிப்பால் நேரடியாக செல்லாமல் 20 டீம்களை அமைத்து வீடு வீடாக சென்று காய்கறிகளை வழங்க ஏற்பாடு செய்தேன். அமைச்சர் பாஸ்கரன் மற்றும் ஆட்சியர் ஜெயகாந்தன் அவர்களின் முழு ஒத்துழைப்பால் சிவகங்கை மாவட்டத்தில் கொரோனாவிற்கு எதிராக முழுமையாக களமாட முடிந்தது.

வெளியூர் செல்லும் நபர்களுக்கு உதவவும் பல இடங்களில் உதவி மையம்போல் அமைத்து பாஸ் வாங்கிக் கொடுத்தோம். தொடர்ந்து கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் சிவகங்கையில் செயல்படுவேன். கஜா புயல் சமயத்தில் அரிசி, மெழுகுவர்த்தி, கொசுவலை, மரம் அறுக்கும் இயந்திரம் என புதுக்கோட்டை மாவட்டம் ஆலம்பட்டி பகுதியில் கட்சி தொண்டர்களின் உதவியுடன் அளப்பரிய பணியை செய்ய முடிந்தது. அதே போல் 2004 - வெள்ள பாதிப்பின் போது சிவகங்கை மாவட்டம் சருகணியில் மக்களை திரட்டி அவர்களுக்கு உதவி செய்தோம்.

முன்னாள் எம்.பி செந்தில்நாதன்
முன்னாள் எம்.பி செந்தில்நாதன்

இப்படி பல்வேறு பேரிடர் காலத்தில் நான் மக்கள் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. தற்போது கொரோனாவிற்கு அப்படி நேரடியாகச் செயல்பட முடியவில்லை. அதிக கூட்டம் கூடினால் கொரோனா தொற்று பரவிடும் என்ற அச்சத்தால் நான் வீட்டில் இருந்தே தொண்டர்கள் உதவியால் கொண்டு சேர்க்க முடிந்தது. தொடர்ந்து சிவகங்கை மாவட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய காத்திருக்கிறேன். கொரோனா பாதிப்பில் இருந்து உலக நாடுகள் அனைத்தும் மீண்டு வரவேண்டும் என நினைக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு