Published:Updated:

`கடுமையான எதிர்ப்பிலும் என்னை மணந்தார்!' -உயரம் குறைவான கரூர் இளைஞரைக் கரம்பிடித்த சிவகங்கை பெண்

மணமக்கள்
மணமக்கள்

பொதுவாக, காதலுக்கு எதிராக ஜாதி, மதம், அந்தஸ்து என பல்வேறு பிச்னைகள் குறுக்கே தடைக்கல்லாக நிற்கும். ஆனால், இவர்களின் காதலுக்கு இடையூறாக நின்றது, விக்னேஷின் உருவம்தான்.

காதலுக்கு சாதி, மதம் மட்டுமல்ல உருவமும் இடைஞ்சலாக நிற்க முடியாது என்பதை நிரூபித்திருக்கிறது கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்தக் காதல் ஜோடி.

விக்னேஷ், பவித்ரா ஜோடி
விக்னேஷ், பவித்ரா ஜோடி

கரூர் மாவட்டம், சோமூரைச் சேர்ந்தவர், விக்னேஷ். 24 வயதான இவர், 4 அடிக்கும் குறைவான உயரம் கொண்டவர். உயரம் குறைவாக இருந்தாலும் தகவல் தொழில்நுட்பத்தில் பி.எஸ்ஸி., படித்துவிட்டு ஆன்லைன் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். திறமையாகச் செயல்பட்டு இளம் தொழிலபதிபராகவும் பரிமளித்து வருகிறார்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பவித்ரா. 24 வயதான இவர் பார்மசி படித்துள்ளார். அங்கு வேலையும் பார்த்து வருகிறார். இருவருக்கும் முன்பின் எந்தத் தொடர்பும் இல்லை; அறிமுகமும் இல்லை. ஆனால், இருவரும் முகநூல் மூலம் நட்பாகி உள்ளனர். முதலில் சாதாரணமான உரையாடல், நட்பு என்ற அடிப்படையில் தொடங்கிய இவர்களது உரையாடல், அதன்பிறகு காதலாக மலர்ந்திருக்கிறது. உயரம் குறைவான விக்னேஷும் இயல்பான உயரமுள்ள பவித்ராவும் கடந்த மூன்று ஆண்டுகளாகத் காதலித்து வந்துள்ளனர்.

`அந்தப் பொண்ணே நீதான்னு அசடு வழிஞ்சேன்!’ -காதல் திருமணம் குறித்து வினோத் பாபு

பொதுவாக, காதலுக்கு எதிராக ஜாதி, மதம், அந்தஸ்து என பல்வேறு பிச்னைகள்தான் குறுக்கே தடைக்கல்லாக நிற்கும். ஆனால், இவர்களின் காதலுக்கு குறுக்கே நின்றது, விக்னேஷின் உருவம்தான். விக்னேஷ் வீட்டில் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டினாலும், பவித்ரா வீட்டில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. உயரம் குறைவாக உள்ள விக்னேஷைத் திருமணம் செய்துகொள்ள பவித்ராவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்

ஆனால், விக்னேஷ் மீதான காதலைக் கைவிட நினைக்காத பவித்ரா, தனது வீட்டின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்ய முடிவெடுத்தார். இதனால் கரூர் வந்த பவித்ரா, நண்பர்கள் உதவியுடன் விக்னேஷைக் கோயிலில் வைத்து திருமணம்செய்து கொண்டார். எதிர்ப்புகளை மீறி உயரம் குறைவான விக்னேஷைத் திருமணம் செய்துகொண்டதால் பவித்ராவின் பெற்றோர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

விக்னேஷ், பவித்ரா திருமணம்
விக்னேஷ், பவித்ரா திருமணம்

இதையடுத்து, இருவரையும் அழைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இருவரும் தங்களின் காதலில் உறுதியாக நின்றாலும், தொடர்ந்து பெற்றோரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டனர். பவித்ராவின் பெற்றோர் எவ்வளவோ பேசியும், பவித்ரா, `விக்னேஷ்தான் என் கணவர்' என்பதில் உறுதியாக இருந்தார். பவித்ரா மேஜர் என்பதால், விக்னேஷுடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.

திருமணம் குறித்து நம்மிடம் பேசிய விக்னேஷ், ``எனது மனதைப் பார்த்து காதலித்து திருமணம் செய்துகொண்ட பவித்ராவை ராணி மாதிரி வாழவைப்பேன். அவரது வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தும், என்னை மணந்தது என்னை நெகிழ வைத்துவிட்டது. இந்த உலகத்தில் நான் பிறந்ததற்கான பயனை அடைந்துவிட்டதாக உணர்ந்தேன்.

விக்னேஷ், பவித்ரா ஜோடி
விக்னேஷ், பவித்ரா ஜோடி

பவித்ராவை எந்தச் சூழலிலும் கண்கலங்க வைக்கமாட்டேன். அவரை நான் கவலையில்லாமல் வாழவைக்கும் ஒவ்வொரு நொடியும்தான், நான் பவித்ராவுக்கு செய்யப்போகும் நன்றிக்கடன்" என்றார், உணர்ச்சிப்பெருக்கோடு!

அடுத்த கட்டுரைக்கு