Published:Updated:

தூய்மைக்குப் பாராட்டு; மக்களுக்கு காய்கறி, கபசுரக்குடிநீர்!- அசத்தும் சிங்கம்புணரி ஒன்றியம்

தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு
தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு

கொரோனோ நேரத்தில் செய்யும் பணிகளால், சிங்கம்புணரி பெண் ஒன்றிய தலைவருக்கும் இளைஞர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்துவருகிறது.

உலக அளவில் கொரோனாவின் தீவிரம் அதிகரித்துவருவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை மற்றும் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றன.

வீடுகளுக்கே சென்ற காய்கறிகள்
வீடுகளுக்கே சென்ற காய்கறிகள்

இந்தியாவில், 21 நாள்கள் ஊரடங்கு அமலில் இருக்கிறது. தமிழகத்தில் பாதிப்புகள் அதிகரித்துவரும் நிலையில், `சமூகப் பரவல் எனும் மூன்றாவது கட்டத்தை அடையலாம்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் எச்சரித்திருக்கிறார்.

போலீஸாரும் சுகாதாரத்துறையினரும் மக்களை வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்திவருகிறார்கள். இதனால், பலர் வருமானமின்றி உணவிற்காகப் பசியால் வாடும் சூழல் உருவாகியிருக்கிறது. இதனைக் கடக்கும் வகையில், அரசும் தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியைச் செய்துவருகின்றனர்.

காய்கறி தொகுப்பு
காய்கறி தொகுப்பு

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி ஒன்றியத் தலைவர் திவ்யா பிரபு, 1500 குடும்பங்களுக்கு 3 கிலோ காய்கறி, கபசுரக் குடிநீர், தூய்மைப் பணியாளர்களுக்கு பாராட்டு விழா என கஷ்டமான காலத்தில் உதவி செய்து அசத்திவருகிறார்.

இதுதொடர்பாக திவ்யா பிரபு நம்மிடம், "கஷ்டத்தில் உதவி செய்வதுதான் ஆகச்சிறந்து. ஒரு பக்கம் கொரோனா அனைவரிடமும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. மறுபக்கம் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.

கபசுர குடிநீர்
கபசுர குடிநீர்

இந்த இக்கட்டான நேரத்தில் முதல்கட்டமாக அரளிக்கோட்டை, ஏரியூர், மாம்பட்டி ஆகிய மூன்று ஊராட்சிக்கு உட்பட்ட 1,500 நபர்களுக்கு தலா 3 கிலோ அடங்கிய காய்கறிகளை வழங்கி வருகிறோம்.

பொதுமக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டும் என கபசுரக் குடிநீரும் வழங்கியுள்ளோம். எங்கள் பகுதியில் பணியாற்றும் அனைத்து தூய்மைப் பணியாளர்களைக் கெளரவ படுத்த வேண்டும் என சால்வை அணிவித்து பாராட்டுவிழா நடத்தினோம்.

காய்களை பேக்கிங் செய்யும் ஒன்றிய தலைவர்
காய்களை பேக்கிங் செய்யும் ஒன்றிய தலைவர்

எங்களுடன் இணைந்து ஆபத்தாரணபட்டியைச் சேர்ந்த இளைஞர்களும் களப்பணி செய்கின்றனர். எங்களுடைய உதவி, சிங்கம்புணரி ஒன்றியம் முழுதும் சென்றடைய வேண்டும் என அடுத்தகட்ட திட்டங்களைத் தீட்டிவருகிறோம்" என்றார். பொதுமக்களுக்கு பல்வேறு உதவிகளை இந்த கொரோனோ நேரத்தில் செய்யும் பெண் ஒன்றிய தலைவருக்கும் இளைஞர்களுக்கும் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

அடுத்த கட்டுரைக்கு