Published:Updated:

`வீடு தேடிச் செல்லும் இலவச புத்தகம்!” - புதுமையான சேவையில் சிவகங்கை மனிதர்

புத்தகங்கள்
புத்தகங்கள்

கொடுக்கும் புத்தகத்தைப் படித்து முடித்த உடன் என்னிடம் பெற்ற புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வேறொரு புத்தகம் வாங்கிக்கொள்ளலாம். புத்தகவாசிப்பு அறிவை, ஒழுக்கத்தைக் கற்றுத்தருகிறது.

புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என, வீடு வீடாகத் தேடிச் செல்லும் இலவச புத்தகம். சிவகங்கையில் கலக்கும் மாமனிதர்.

’பொதுவாக புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது என்றே சொல்ல வேண்டும். இணையத்தில் தேவையற்ற பொழுதுபோக்கு விஷயங்களில் மூழ்கும்போது நேரம் விரைவாகக் கடந்துவிடுகிறது. இதனால் பலரிடம் இருந்த புத்தக வாசிப்பு பழக்கம் காணமல் போகிவிட்டது.

புத்தகம் வாசிப்பது நல்லது
புத்தகம் வாசிப்பது நல்லது
freepik

இந்நிலையில் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகன் என்பவர் பல்வேறு விழிப்புணர்களையும், நூதன புத்தக விற்பனைகளையும் செய்து வந்தார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் ஒவ்வொரு நபருக்கும் 1 புத்தகம் இலவசமாக கொடுத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தி வருகிறார். இதனால் புத்தகக் கடை முருகனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

முருகன் நம்மிடம், "எனக்கு இயற்கை, தொல்லியல், புத்தக வாசிப்பு உள்ளிட்டவை மீது தனிப் பிரியம். சிவகங்கையில் `தமிழ்க்குடியோன்' என்ற பெயரில் பழைய புத்தகங்களை மலிவான விலைக்கு விற்பனை செய்துவருகிறேன். என்னிடம் அரிதான பல பழைய புத்தகங்கள் உள்ளன. ஆனால், சிவகங்கையில் வாசகர் வட்டம் மிகச் சிறிய அளவில் இருந்ததால் புத்தகங்கள் பெரிதும் மக்களைச் சென்றடையவில்லை.

முருகன்
முருகன்

வியாபரம் மட்டும் நோக்கம் இல்லாது வாசிப்புப் பழக்கத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே என்னுடைய குறிக்கோள். அதனால் 300 ரூபாய்க்கு 30 புத்தகம், புத்தகம் வாங்கினால் மரக்கன்று இலவசம், முதலில் வரும் 10 நபருக்கு 5 புத்தகம் இலவசம் என எண்ணற்ற சலுகைகளுடன் புத்தகங்களை அவ்வப்போது வழங்கி வருகின்றேன். இந்நிலையில் கொரோனா சமயத்தில் சிவகங்கையில் வாசிப்புப் பழகத்தை அதிகப்படுத்த வேண்டும் என ஒரு நபருக்கு 1 புத்தகம் இலவசமாக வழங்குகிறேன்.

கடைக்கு வந்தால் சமூக இடைவெளி இல்லாத சூழல் ஏற்படும் என நானே சிவகங்கையில் உள்ள பல பகுதிகளுக்குச் சென்று புத்தகங்கள் வழங்கி வருகிறேன். நூல் வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வீடு தேடிச் சென்று இலவசமாகப் புத்தகங்கள் வழங்குகிறேன். எனது தமிழ்க்குடியோன் பழைய புத்தக கடை மூலமாக வரலாறு ஆன்மீகம், கதை, தன்னம்பிக்கை, சுயசரிதம், கவிதை, கட்டுரை போன்ற தலைப்புகளில் நூல்களை அவரவர் விருப்பம் போல் தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம். ஆனால், ஒரு புத்தகம்தான் கொடுக்கப்படும். கொடுக்கும் புத்தகத்தைப் படித்து முடித்த உடன் என்னிடம் பெற்ற புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வேறொரு புத்தகம் வாங்கிக்கொள்ளாம். புத்தக வாசிப்பு அறிவை, ஒழுக்கத்தை கற்றுத்தருகிறது.

முருகன் தனது கடையில்
முருகன் தனது கடையில்

சாதனை படைத்த மனிதர்கள் உருவாகக் காரணம் புத்தக வாசிப்பு தான். சிறந்த சமுதாயம் உருவாக புத்தக வாசிப்பு அவசியம் என்பதால் இந்த முயற்சி. இளைஞர்கள் வாசிப்பை மறந்து இன்றைய காலத்தில் செல்போனில் மூழ்கிக் கிடக்கிறார்கள். ஊரடங்கு நேரத்தில் புத்தக வாசிப்பை அவர்களிடத்தில் உருவாக்க வேண்டும் என்பதற்காக இலவசமாகப் புத்தகங்களை வீடு தேடிச் சென்று கொடுத்து வருகிறேன்.

எனது பழைய புத்தகக் கடையில் இருந்த நூற்றுக்கணக்கான நூல்களை நாள்தோறும் இலவசமாக வழங்கிவருகிறேன். வீட்டை விட்டு வெளியே வரத் தயங்கும் பெண்கள், பெரியவர்களுக்கு வீடு தேடிச் சென்று இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு