Published:Updated:

சிவகங்கை: `வீரம் பேசும் நினைவுக்கல்’ - நடுகல்லை தெய்வமாக வணங்கும் மக்கள்

நடுகல் சிலையுடன்
நடுகல் சிலையுடன்

நடுகல் சிலை என்பது போரில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக் கல். பெருநிரை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டுபோன வீரனுக்காக எடுக்கப்பெறும் நினைவுக் கல்லாகும்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி தாங்கும் பெருமையைப் போல பல இடங்களில் வரலாறுகளும் ஆன்மீகக் கட்டுப்பாடும், பண்டைய விவசாய முறையும் என ஏகப்பட்ட சான்றுகள் மாவட்டம் முழுவதும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் போர் வீரனைப் போற்றும் நடுகல் சிலை ஒன்றைக் காவல் தெய்வமாகக் கிராம மக்கள் வணங்கி கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது.

கீழடி
கீழடி

வீரம் பேசும் நினைவுக்கல்!

சிவகங்கை அடுத்த பில்லூர் கிராமத்தில் 'அழுதாங்கிப் பிள்ளை' எனும் இடம் உள்ளது. இங்கு 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி நடுகல் சிலை ஒன்று உள்ளது. இதை அப்பகுதி கிராம மக்கள் வேண்டுதல் நிறைவேற்றும் தெய்வமாகவும், தங்கள் பகுதி காவல் தெய்வமாகவும் எண்ணி வணங்கி வருகின்றனர்.

நடுகல் குறித்து தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா.காளிராசா, "நடுகல் சிலை என்பது போரில் இறந்தவர்கள் நினைவாக வைக்கப்படும் வீரம் பேசும் நினைவுக் கல். பெருநிரை (பெருந்திரள் வீரர்களை) விலக்கி மாண்டுபோன வீரனுக்காக எடுக்கப்பெறும் நினைவுக் கல்லாகும்.

இந்த நடுகல் பற்றி தொல்காப்பியம் இலக்கணங்களும் வகுத்துள்ளது. சங்க இலக்கிய பாடல்களும் விவரித்துக் கூறுகின்றன. பில்லூரில் உள்ள இந்த நடுகல் வீரர் சிலை அமைப்பு, கையில் வில் அம்பு ஏந்திய நிலையில் ஒரு கை வில்தண்டையும், மறுகை நாணில் அம்பேற்றிய நிலையில் உள்ளது. வீரனின் முதுகுப் பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் காணப்படுகிறது. இடுப்பிலிருந்து முழங்காலுக்கு ஆடையும் கை புயங்களில் வீரக்கழலும் காதில் காதணியும் காணப்படுகிறது.

நடுகல்
நடுகல்

மேலும், தலை முடி கொண்டையாகக் கட்டப் பெற்றுள்ளது. வீரனின் இடது கால் அருகே சிறிய உருவம் ஒன்று காணப்படுகிறது. தலைமுடி கொண்டையிடப்பட்டு கைகளைக் கூப்பிய நிலையில் உள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும்போது பெரிய உருவம் படைத் தளபதியாகவும், சிறிய உருவம் படைவீரனாகவோ, மனைவியாகவோ இருக்க வாய்ப்புள்ளது.

மேலும் சிலையின் மேல் `கல் கரு முத்தப் பணிக்கப்பட்டது’ என்று எழுதப்பட்டுள்ளது. இது 17-ம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 18-ம் நூற்றாண்டின் முற்பகுதி எழுத்தமைதியில் எழுதப்பட்டுள்ளது சிறப்புமிக்கது. இந்தச் சிலையை இப்பகுதி மக்கள் 'கருப்ப சாமியாக' எண்ணிப் பயபக்தியுடன் வணங்குகின்றனர்.

நடுகல் சிலையுடன்
நடுகல் சிலையுடன்

இப்பகுதி மக்களின் கண்களில் துடியான தெய்வமாக இச்சிலை காட்சியளிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் வேறு எங்கேயும் நடுகல் சிலை பார்த்ததில்லை. இது தொல்லியல் ஆர்வலர்களுக்கு ஆச்சர்யம் வழங்கக்கூடிய ஒன்று'' என மகிழ்ச்சி தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டத்தில் கீழடி போல் பல இடங்களில் தொடர்ந்து தொல்லியல் எச்சங்கள் கிடைப்பதால் மற்ற பகுதிகளிலும் விரிவான ஆய்வுகள் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு