Published:Updated:

`கொள்ளை போகும் கனிம வளம்; கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள்' - குவாரியால் கொதிக்கும் சிவகங்கை மக்கள்

குவாரிப் பகுதி
குவாரிப் பகுதி

`குவாரியைப் பற்றிப் பேசினாலே லாரிய விட்டு ஏத்திவிடுவோம்’ என்று மிரட்டுறாங்க, குவாரியை மூட சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மல்லாக்கோட்டை பகுதியில் சட்ட விரோதமாகக் கல்குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் செயல்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. குவாரியில் அரசு குறிப்பிட்ட விதியைப் பின்பற்றாமல் இரவு, பகலாகக் கனிம வளங்கள் கொள்ளை போவதாகப் புகார்கள் எழுகிறது. இது குறித்து மல்லாக்கோட்டையைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்பவர், "சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மேகா புளு மெட்டல்ஸ் என்ற தனியார் நிறுவனம் பல வருடங்களாகச் செயல்பட்டு வருகிறது.

குவாரி
குவாரி

இங்கு கல் குவாரி மற்றும் எம்.சாண்ட் நிறுவனம் நடத்தப்படுகிறது. சட்ட விரோதமாகப் பல்வேறு குற்றச் செயல்களை இந்த நிறுவனம் அரங்கேற்றுகிறது. தினமும் டிப்பர் லாரியில் 50 நடை ஜல்லியும், 250 நடைக்கு மேல் எம்.சாண்டுகளையும் கொண்டு செல்கின்றனர். அரசு குறிப்பிட்ட எந்த விதிகளையும் பின் பற்றாமல் இரவு, பகலாக வளங்களைத் திருடுகின்றனர். இதனால் அருகே உள்ள கட்டாணிபட்டி ஊராட்சி மற்றும் மல்லாகோட்டை ஊராட்சிகளில் உள்ள குடியிருப்புப் பகுதிகள் பாதிப்படையும் நிலையில் உள்ளது.

இதனால் கர்ப்பிணிப் பெண்கள், முதியவர், குழந்தைகள் இருக்கும் வீடுகளில் அச்சப்படும் சூழல் நிலவுகிறது. மேலும், குவாரியைச் சுற்றி 9 கண்மாய், 2 ஏரியும் உள்ளது. இதன் நீர் வளங்களையும் இவர்கள் பாதிப்படையச் செய்துவிட்டனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம்கூட 600 அடிக்கு கீழே சென்றுவிட்டது. குவாரியில் இவர்கள் தோண்டும் பள்ளங்களை வேலை முழுமையாக முடிந்த பின்னர்கூட மூடுவதில்லை. இதனால் ஆடு, மாடு எனப் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. குவாரியால் முல்லைப் பெரியார் பாசனப்பகுதி, சிறுமலைப் பகுதி என இயற்கை வளங்கள் முழுமையாக அழிந்துவருகின்றன.

குவாரிப் பகுதி
குவாரிப் பகுதி

குவாரி ஆக்கிரமிப்பு காரணமாக விவசாயம் சார்ந்த உப தொழில்களான ஆடு, மாடு மேய்ப்புகூட பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் நிறுவனத்துக்கு எதிராகப் பல போராட்டம் செய்துவிட்டோம். எந்தப் பயனும் இல்லை. அதே போல் அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த புரோஜனமும் இல்லை.

மேலும் சட்ட விரோதமாகச் செயல்படும் புளுமெட்டல்ஸ் நிர்வாகத்துக்கு எதிராக யாரும் குரல் கொடுத்தால் லாரியை விட்டு ஏற்றிக் கொலை செய்துவிடுவோம் எனக் கொலை மிரட்டல் விடுகின்றனர். எனவே, இது குறித்து அரசு கவனத்தில் கொண்டு குவாரியை ஆய்வு செய்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்றார்.

கால் நடைகள் குவாரிக்குள் இறப்பு
கால் நடைகள் குவாரிக்குள் இறப்பு

இது குறித்து குற்றம்சாட்டப்படும் மேகா புளுமெட்டல்ஸ் உரிமையாளர் மேகவர்ணம், ``என் மீது பழி சுமத்த வேண்டும் எனப் பொய் குற்றச்சாட்டுகளைச் சொல்கின்றனர். தேர்தல் சமயத்தில் வேறு கட்சியில் வேலை செய்தேன் என்பதற்காகக் குற்றச்சாட்டுகளைத் தெரிவிக்கின்றனர். வேறு எதுவும் இல்லை. நான் முறையாக அரசிடம் அனுமதி பெற்றுதான் குவாரி நடத்தி வருகிறேன்" என்றார்.

மேலும் இது குறித்து கனிம வளத்துறை அதிகாரி விஜயராகவன், ``குறிப்பிட்ட புளுமெட்டல்ஸ் குவாரி அனுமதி பெற்று செயல்படுகிறது. கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக அந்தக் குவாரி செயல்படுகிறது. தற்போது குவாரியில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. ஆய்வு முடிவில் இது குறித்து தகவல் அளிக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு