Published:Updated:

`ஒரு லட்ச ரூபாய் PUBG போட்டி; ஆன்லைன், ஆஃப்லைன் எதிர்ப்பு!' - பின்வாங்கிய சிவகங்கை ஏற்பாட்டாளர்கள்

PUBG போட்டி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு
PUBG போட்டி திரும்பப் பெறுவதாக அறிவிப்பு

`பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்ததால், பப்ஜி போட்டியை நிறுத்திவிட்டோம். ஆன்லைன் மூலம் முன்பதிவுக்கு வசூல் செய்த பணத்தை ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டோம்'.

சிவகங்கை மாவட்டம் கல்லல் பகுதியில், ஆண்டுதோறும் மாசி மாத திருவிழா நடைபெறும். விழாவில், குதிரைப் பந்தயம், மாட்டு வண்டி பந்தயம், மஞ்சுவிரட்டு, கல்தூக்கும் போட்டி, நீச்சல் போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பர்ய போட்டிகளும் கிராமிய கலை நிகழ்ச்சியும் நடைபெறும்.

`ஒரு லட்ச ரூபாய் PUBG போட்டி; ஆன்லைன்,  ஆஃப்லைன் எதிர்ப்பு!' - பின்வாங்கிய சிவகங்கை ஏற்பாட்டாளர்கள்

இந்நிலையில், இந்த ஆண்டு வர்த்தக சங்கத்துடன் இணைந்து கல்லல் பகுதியில் உள்ள மொபைல் கடை ஒன்று மாநில அளவில் பப்ஜி போட்டி நடத்துவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதில், முதல் பரிசு ரூபாய் ஒரு லட்சம், இரண்டாம் பரிசு ரூ.50000, மூன்றாம் பரிசு ரூ.20,000 என்று விளம்பரம் செய்திருந்தது.

போட்டியில் கலந்துகொள்ளும் அணிகள், ஆன்லைன் மூலம் ரூ.300 கட்டணம் செலுத்த வேண்டும் என விதிகளும் போட்டிருந்தனர். இந்நிலையில், கல்லல் தனியார் மஹால் ஒன்றில் 2,500 நபர்கள் கலந்துகொள்ள உள்ளதாக ஏற்பாடுகளும் செய்தனர்.

`மாசி மாத விழாவை முன்னிட்டு மாநில அளவிலான PUBG; லட்சத்தில் பரிசுத் தொகை!' - சிவகங்கை சர்ச்சை

இந்த விவகாரத்தில், சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் கிளம்பின. இந்நிலையில், இந்தத் தகவலை காவல்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தரப்பில் எடுத்துச் சென்றோம். இதுதொடர்பாக விகடன் இணையதளத்தில், "மாசி மாத விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான PUBG; லட்சத்தில் பரிசுத்தொகை!' - சிவகங்கை சர்ச்சை" என்ற தலைப்பிலும் ஜூனியர் விகடனில், ``திருவிழாவில் பப்ஜி போட்டி... பரிசு ஒரு லட்சம்!" என்ற தலைப்பிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.

பப்ஜி போட்டி
பப்ஜி போட்டி

இந்நிலையில், மாநில அளவில் பப்ஜி போட்டியை நடத்த பல்வேறு இடங்களிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியதால், போட்டியை நிறுத்திக்கொள்கிறோம் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

இந்தப் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்திருந்த தமிழ்நாடு மக்கள் மன்றத் தலைவர் ராஜ்குமாரிடம் பேசினோம். ``சமுதாயத்தைச் சீரழிக்கும் பப்ஜி போட்டி நடக்க உள்ளது தெரியவந்தவுடன், அதன் தீமைகுறித்து ஜூ.வி-க்கு பேட்டி அளித்திருந்தோம். பிறகு, போட்டி நடத்த இருந்த தம்பிகளிடம், `போட்டி நடத்த வேண்டாம். இல்லை என்றால், காவல்துறை அனுமதிபெற்று மிகப்பெரும் போராட்டம் நடத்துவோம்' என்று தெரிவித்தோம்.

வாபஸ் பெற்ற தகவல்
வாபஸ் பெற்ற தகவல்

இந்நிலையில், அனைவரின் கருத்துக்களையும் ஏற்று, நடக்கவிருந்த பப்ஜி போட்டியை நிறுத்திக்கொள்வதாக சம்பந்தப்பட்ட நபர்கள் அறிவிப்பை நம்மிடம் வாட்ஸப் மூலம் தெரிவித்துள்ளனர். இந்தத் தகவலை வரவேற்கிறோம். மேலும், போட்டியை நிறுத்திய தம்பிகளுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

போட்டியை நடந்த இருந்த மொபைல் கடை உரிமையாளர் நாகரத்தினத்திடம் பேசினோம். ``பல்வேறு தரப்பில் எதிர்ப்பு வந்ததால், பப்ஜி போட்டியை நிறுத்திவிட்டோம். ஆன்லைன் மூலம் முன்பதிவுக்கு வசூல் செய்த பணத்தை ஏற்கெனவே ஒப்படைத்துவிட்டோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு