Published:Updated:

சிவகங்கை: `பிள்ளைங்க கண்டுக்கல; தனியா தவிக்குறேன்!’ - கலங்கும் சந்திரகிரி பாட்டி

சந்திரகிரி பாட்டி
சந்திரகிரி பாட்டி

`எனக்கு பிள்ளைங்க இருக்காங்க. ஆனா, அவங்களுக்கு அவங்க பிள்ளைங்கல பார்த்துக்கிறதுக்கே நேரம் இல்ல. எனக்கு உடம்பு சரியில்ல. ஆனா, எனக்கு இப்ப மருத்துவ தேவையவிட, உணவுத் தேவைதான் அதிகமாக இருக்கு’ என்று கலங்குகிறார் சந்திரகிரி பாட்டி.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரகிரி பாட்டி. 72 வயதான இவர் தமிழ், மலையாளம் உட்பட 25 படங்களுக்கு மேல் துணை நடிகையாக நடித்துள்ளார். பெரிய அளவு பிரபலம் ஆகவில்லை என்றாலும் முதிய வயதிலும் பன்முகத்தன்மை கொண்ட கலைஞராக விளங்குகிறார். விஸ்வாசம், இருடியம், பட்டம், அஞ்சலை, தொப்பி உள்ளிட்ட பல்வேறு தமிழ்த் திரைப்படங்களில் அம்மா மற்றும் பாட்டி கேரக்டர்களில் திரையில் நடித்துள்ளார்.

சந்திரகிரி பாட்டி
சந்திரகிரி பாட்டி

முக்கிய கதாபாத்திரங்கள் கிடைக்கும் நேரத்தில் வீட்டின் அருகே தவறி விழுந்து, தற்போது வீட்டிலேயே முடங்கியுள்ளார். வருமானம் இல்லாத சூழலில் உணவுக்கே சிரமப்படுவதாக வேதனை தெரிவித்தார்.

நம்மிடம் பேசிய சந்திரகிரி பாட்டி,``எனக்கு சிறுவயதில் இருந்தே கவிதை, பாட்டு எழுதுவதில் ஆர்வம் ஜாஸ்தி. எங்க ஊர் நாட்டரசன்கோட்டை கண்ணாத்தா குடியிருக்கிற ஊரு. இதனால எனக்கு சாமி பக்தி அதிகம். தேவாரம், திருவாசகம்னு எல்லாம் பாடுவேன். அதுபோக கிராமத்துப் பாட்டு, தெம்மாங்கு பாட்டு, குத்துப் பாட்டுனு, இடத்துக்கு தகுந்தமாதிரி திறமைய வெளிப்படுத்துவேன்.

கணவர் இறந்தபின், வாழ்க்கை வெறுமை ஆகிடுச்சு. ஆனாலும், வாழ்க்க இன்னும் முடியலைன்னு மனச தேத்திக்கிட்டு, சினிமா பாட்டு எழுதலாம்னு சென்னைக்கு கிளம்புனேன். 2012-ல் எல்லாரும் மாதிரி நானும் ஏவி.எம் ஸ்டுடியோ வாசலுக்கு போய் வாய்ப்பு கேட்டு அலஞ்சேன். எங்கிட்ட இருந்த பேப்பர பார்த்துட்டு. அங்கிருந்தவங்க,`பாட்டெல்லாம் வேணாம். சினிமால நடிக்கிறவங்க பின்னாடி நிக்கிற வேலை வேணா தர்றேன் செய்றியானு?’ கேட்டாங்க. சரி இதுவும் வாய்ப்புதானேனு ஒத்துக்கிட்டேன். `பாவி' என்ற சிங்கமுத்து படத்துல வாய்ப்பு குடுத்தாங்க. பல படங்களின் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் நடிச்சிருக்கேன்.

சுந்தரபாண்டியன் படத்தில்
சுந்தரபாண்டியன் படத்தில்

சசிக்குமார் சுந்தரபாண்டியன் இன்ட்ரோ சாங்கில் கூட பாட்டிகளுடன், பாட்டியா என்னையும் காமிப்பாங்க. இப்படி எனக்கு கிடைச்ச சின்னச் சின்ன வாய்ப்பக் கூட சந்தோசமா செய்வேன். நிறைய படத்தில் வாய்ப்பு கிடைச்சது. ஓரளவு என் வருமானமும் மனசும் நிறைஞ்சது. இந்த நிலைமைலதான் ஒன்றரை வருசத்துக்கு முன்னாடி வீட்டுக்கிட்ட விழுந்துட்டேன்.

கரூர்: `இனி நல்ல சாப்பாடு சாப்பிடுவோம்!’ - உதவிகளால் நெகிழும் சுந்தர்ராஜ்

இதனால, என் கால்ல பலமா அடிபட்டு மதுரை பெரியாஸ்பத்திரில சிகிச்சை எடுத்துக்கிட்டேன். எனக்கு தைராய்டு இருப்பதால ஆப்ரேஷன் கூட லேட்டாதான் பண்ணாங்க. இப்ப ஓரளவு உடம்பு சரியாகி வீட்டில்தான் முடங்கி இருக்கேன். நிறைய சினிமா பட வாய்ப்பு கிடைச்ச சமயத்தில்தான் கீழ விழுந்தேன்.

சந்திரகிரி பாட்டி
சந்திரகிரி பாட்டி

எங்க ஊர்ல தனியா இருக்க பிடிக்கல. இப்ப சிவகங்கை, ஒக்கூர்லையே 500 ரூவா வாடைக்கு இருக்கேன். என்கிட்ட இருந்த பணம் எல்லாம் நிறைய செலவாயிடுச்சு. இப்ப ரொம்ப கஷ்டப்பட்டுகிட்டுதான் இருக்கேன். எனக்கு பிள்ளைங்க இருக்காங்க. ஆனா, அவங்களுக்கு அவங்க பிள்ளைங்கல பார்த்துக்கிறதுக்கே நேரம் இல்ல. எனக்கு உடம்பு சரியில்ல. ஆனா எனக்கு இப்ப மருத்துவ தேவையவிட, உணவுத் தேவை தான் அதிகமாக இருக்கு. யாராவது உதவி கிடைச்சா நல்லா இருக்கும்" என்றார் தழுதழுத்த குரலில்.

பாட்டியின் வீட்டருகே விசாரித்தோம்.``பாட்டிக்கு மகன், மகள் இருக்காங்க. ஆனா, யாரும் கண்டுகிறதில்லை. அவங்க மகன் எப்பயாச்சும் வந்து போவார். ஆனா, எந்த பயனும் இல்லை. பாட்டி பயங்கர திறமசாலி. பாட்டு, நகைச்சுவைனு அசத்துவாங்க. அவங்க நேரம்தான் இப்ப கஷ்டப்படுறாங்க” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு