Published:Updated:

`912 பானைகள்; சிறப்பு பொங்கல்; கிடா வெட்டு!’- நாட்டரசன் கோட்டையில் களைகட்டிய செவ்வாய்ப் பொங்கல்

செவ்வாய்ப் பொங்கல்
செவ்வாய்ப் பொங்கல் ( சாய்தர்மராஜ் )

நாட்டரசன் கோட்டையில் புகழ்பெற்ற செவ்வாய்ப் பொங்கல் 912 பொங்கல் பானை வைக்கப்பட்டு அதிகாலை 3 மணிவரை நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் புகழ்பெற்ற செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சி நேற்று மாலை தொடங்கி இன்று அதிகாலை சுமார் 3 மணி வரை நடைபெற்றது. ஆண்டுதோறும் மாட்டுப்பொங்கல் முடிந்துவரும் முதல் செவ்வாய் அன்று செவ்வாய்ப் பொங்கல் நடைபெறும்.

912 பொங்கல் பானை வைக்கப்பட்டது.
912 பொங்கல் பானை வைக்கப்பட்டது.

நாட்டரசன் கோட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட நகரத்தார்கள், பல்வேறு நபர்கள் தங்கள் பணி தொடர்பாக வெளியூர்களிலும், வெளிநாடுகளில் இருந்தாலும் இந்த செவ்வாய்ப் பொங்கலுக்கு அவசியம் கலந்துகொள்வார்கள்.

ஒரு குடும்பத்தை ஒரு புள்ளி என்று கணக்கில் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு புள்ளிகளின் பெயரைச் சீட்டாக வெள்ளிப் பானையில் போட்டு ஒரு சீட்டை மட்டும் தேர்வு செய்து சிறப்புப் பொங்கல் வைக்க அனுமதிப்பார்கள்.

கண்ணாத்தாள் கோயில் தெப்பம்
கண்ணாத்தாள் கோயில் தெப்பம்

அவர்கள் மட்டும் மண்பானையில் பொங்கலிட்டு கிடாய் வெட்டுவார்கள். மற்ற நபர்கள் வெங்கலப் பானையில் பொங்கல் வைப்பார்கள். விரும்பினால் அவர்களும் கிடா வெட்டலாம். இந்தாண்டு 912 புள்ளிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பொங்கல் வைத்தனர். இதில் திருஞானம் என்பவரது பெயர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டதால் சிறப்பு பொங்கல் வைத்தார். 50-க்கும் மேற்பட்ட கிடாய்கள் கோயிலில் வெட்டப்பட்டது. இந்த நிகழ்வில் இனிப்பு பொங்கல் வைக்கக் கூடாது என்பது ஐதிகம் என்பதால் அனைவரும் வெண் பொங்கல் மட்டும் இடுவார்கள். இந்தாண்டு தைப் பொங்கல் முடிந்து வந்த செவ்வாயான (21.1.2010) நேற்று, மாலை 5 மணிக்கு செவ்வாய்ப் பொங்கல் தொடங்கியது.

தொடர்ந்து அனைவரும் பொங்கல் வைத்து கிடாய் வெட்டிய நிகழ்வு இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் பெற்றோர்கள் இந்த செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சியை தங்களது பிள்ளைகளுக்கு வரன் தேடும் நிகழ்ச்சியாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர் என்கின்றனர்.

தெப்பம்
தெப்பம்

விடிய விடிய நடந்த செவ்வாய்ப் பொங்கல் திருவிழாவால் அந்த பகுதியே வண்ணமயமாக காட்சியளித்தது. கோயில் தெப்பத்தை சுற்றி நூற்றுக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டிருந்ததால் அந்த பகுதியே ஒளிர்ந்தது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த விழாவில் கலந்துகொண்டு புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர்.

சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டை புகழ்பெற்ற செவ்வாய்ப் பொங்கல் நிகழ்ச்சி துவங்கியது. - அருண் சின்னதுரை வீடியோ - ச.சாய்தர்மராஜ்.

Posted by Vikatan EMagazine on Tuesday, January 21, 2020
அடுத்த கட்டுரைக்கு