Published:Updated:

சிவகங்கை: `80% பாதிப்பு... 84 நாள்கள் சிகிச்சை!' - மீண்டு வந்த ஊராட்சி மன்றத் தலைவர்

சிகிச்சை பெற்று திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவர்
சிகிச்சை பெற்று திரும்பிய ஊராட்சி மன்றத் தலைவர்

80 சதவிகிதம் கொரோனோ பாதிப்பு ஏற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர், 84 நாள்கள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையையும் அளித்திருக்கிறது!

சிவகங்கை அரசு மருத்துவமனையில் கொரோனா பரவலின் ஆரம்ப காலகட்டத்தில், தொற்று ஏற்பட்ட ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்தனர். தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை முழுமையாகக் குறைந்த பின்னர், வெளி மாவட்டத்திலிருந்து வந்த நபர்களால் மீண்டும் தொற்று வேகமாகப் பரவியது. இதனால் கூடுதல் முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தநிலையில் சிவகங்கை தொகுதி நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டன் ஆகஸ்ட் 6-ம் தேதி காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்ற மணிகண்டன்
சிகிச்சை பெற்ற மணிகண்டன்

பரிசோதனையில் அவருக்கு கொரோனாநோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 80%-க்கும் மேலாக நுரையீரல் பாதிப்பு இருந்ததால், மருத்துவமனை முதல்வர் இரத்தினவேல் தலைமையில் மருத்துவக் குழுவினர் மணிகண்டனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்தார்கள். அரசு வழிகாட்டுதல்படி 20 நாள்கள் செயற்கை சுவாசக் கருவி (சி.பி.ஏ.பி) மூலமும், பின்னர் 40 நாள்கள் உயர் ஓட்ட ஆக்சிஜன் கருவி (High Flow Nasal Oxygen) மூலமாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவந்தார். சுமார் 84 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு மணிகண்டன் பூரண குணமடைந்தார். 80 சதவிகித பாதிப்பு ஏற்பட்ட நபருக்கு தொடர்ந்து சிகிச்சையளித்து பூரண குணமடையவைத்த அரசு மருத்துவமனைக்கு, பாராட்டு குவிந்துவருகிறது.

இது குறித்து நாலுகோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் மணிகண்டனிடம் பேசினோம். ``நான் சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் அசோசியேஷன் தலைவராக இருக்கிறேன். அதனால் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டு தனியார் மருத்துவமனைக்குச் சென்றேன். அவர்கள், `உங்களுக்குச் சாதாரணக் காய்ச்சல்தான்’ என்று கூறி எனக்கு சிகிச்சையளித்தனர். ஆனால், எனக்கு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன் அங்கு கொரோனா சிகிச்சையளித்தனர். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.

சிகிச்சை பெற்று திரும்பிய மணிகண்டன்
சிகிச்சை பெற்று திரும்பிய மணிகண்டன்

தொடர்ந்து மருந்து, மாத்திரை ஆக்சிஜன் கொடுத்து சிகிச்சையளித்தனர். மாவட்ட ஆட்சியரும் டீனும் நம்பிக்கை தெரிவித்தனர். பின்னர் 84 நாள்களுக்கு மேல் சிகிச்சை பெற்று குணமடைந்து வந்திருக்கிறேன். தொடர்ந்து சிகிச்சையளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி" என்றார்.

80 சதவிகிதம் கொரோனோ பாதிப்பு ஏற்பட்ட ஊராட்சி மன்றத் தலைவர் 84 நாள்களுக்குப் பிறகு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியது அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நம்பிக்கையை அளித்திருக்கிறது!

அடுத்த கட்டுரைக்கு