Published:Updated:

`குண்டு வைத்துத் தகர்த்துவிடுவோம்'னு மிரட்டுறாங்க! - மணல் கொள்ளைக்கு எதிராகக் கொந்தளிக்கும் மக்கள்

சிவகங்கை அருகே, அனுமதியின்றி லாரி லாரியாக மணல் கடத்தப்படுவதாகவும், அதைத் தட்டிக்கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

Sand Theft
Sand Theft

சிவகங்கை மாவட்டம் பூவந்தி அருகே, அனுமதியின்றி மணல் கடத்தல் நடப்பதாகக் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், மணல் கொள்ளை நிறுத்திவைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Vehicles
Vehicles

இந்நிலையில், இன்று மீண்டும் லாரிகளில் மணல் கொள்ளையில் இறங்கியதாக, அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தண்டியப்பனிடம் பேசினோம்.``சிவகங்கை மாவட்டம் கீழப்பூவந்தி கிராமத்திற்கு அருகே மடப்புரம் செல்லும் வழியில், பாபுசாகிப் என்பவருக்குச் சொந்தமான இடம் உள்ளது. இங்கு, அரசிடம் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் மணல் குவாரி அமைக்கத் திட்டமிட்டு, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி மணல் அள்ளியுள்ளனர்.

`ஆட்சி எடப்பாடி கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா?'- ஸ்டாலின் ட்வீட்டின் பின்னணி

சுமார் 50-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகளில் மணல் அள்ளிக்கொண்டு விரைந்துசென்றுள்ளனர். 4 லாரிகளுக்கு 10 நபர்கள் பைக்கில் பாதுகாப்பும் சென்றுள்ளனர். மணலை அள்ளிக்கொண்டு விரைவாகச் சென்ற லாரிகள், சாலையில் சென்ற குமரேசன் உள்ளிட்ட சிலரின் வாகனத்தில் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

Protest
Protest

இதனால், அப்பகுதி மக்கள் திரண்டு லாரி ஓட்டுநர்களை சத்தம்போட்டுள்ளனர். லாரியை சுற்றிவந்த குண்டர்கள், `எங்களுக்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர் உதயகுமார், பாஸ்கரன் உள்ளிட்டவர்களைத் தெரியும்' என்று கூறி எச்சரித்துள்ளனர். மேலும், `இதை யாராவது கேட்டால் கிராமத்தோடு குண்டுவைத்துத் தகர்த்துவிடுவோம்' எனத் தெரிவித்து மிரட்டியுள்ளனர்.

`உங்களால் முடிந்தால் நிறுத்துங்கள்'- மணல் கொள்ளைக்கு எதிராகப் போராடிய மக்களுக்கு மிரட்டல்?

இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் மணல் அள்ளுவதற்காக 14-க்கும் மேற்பட்ட லாரிகள் வந்து மணல் அள்ளியதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சார்பாகப் போராட்டம் நடத்தினோம்.

Protest
Protest

சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், பேச்சுவார்த்தை நடத்தி மணல் அள்ளுவதைத் தடுப்பதாகத் தெரிவித்தனர். மேலும், திருப்புவனம் தாசில்தார் கடிதம் எழுதிக்கொடுத்தார். அதில் எனது பெயர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அய்யம்பாண்டி, விவசாய சங்கத்தைச் சேர்ந்த ஜெயராமன், கரும்பு விவசாய சங்கத்தைச் சேர்ந்த சந்திரவேல் மற்றும் முனீஸ்வரன், பூவந்தி கிராம இளைஞர்கள் எனப் பெயர்கள் குறிப்பிட்டு, `இவர்கள் போராட்டம் நடத்தியதன் பெயரில் மணல் அள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

`ஆட்சி எடப்பாடி கையிலா... மணல் கொள்ளையர்கள் கையிலா?'- ஸ்டாலின் ட்வீட்டின் பின்னணி

ஆனாலும், மணல் குவாரி அமைத்த பகுதியில் தற்போதும் சொகுசுக் கார்கள் சுற்றிவருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்'' என்றார்.

இதுகுறித்து திருப்புவனம் தாசில்தார் ராஜாவிடம் பேசினோம். ``சட்டவிரோதமாக மண் அள்ளியவர்கள் மீதும் லாரி உரிமையாளர்கள் மீதும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கிறோம்'' என்பதோடு முடித்துக்கொண்டார்.

Letter
Letter

பூவந்தி காவல்நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி கூறுகையில், ``தற்போது மணல் அள்ளியவர்கள் மீதும் அதில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்துவருகிறோம். லாரிகளையும் பிடித்துள்ளோம். வழக்குப்பதிவு செய்த பின் முழு தகவல் தருகிறேன்" என்றார்.