Published:Updated:

`அடுத்தவர் பணம் நமக்கெதுக்கு?' - வாட்ஸப் துணையுடன் இளைஞரைத் தேடி பணத்தை ஒப்படைத்த சாந்தி அம்மா

சாந்தி
சாந்தி

``அந்த பர்ஸைப் பார்த்த தம்பி, என்னைப் பார்த்து கும்பிட்டது, இன்னும் கண்ணுல நிக்கிது''.

சிவகங்கையைச் சேர்ந்த மணிகண்டன் என்ற இளைஞர், தனியார் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணி செய்கிறார். வேலை காரணமாகச் சென்ற இடத்தில், 21,000 ரூபாய் பணம் மற்றும் ஆதார் கார்டு, எ.டி.எம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பர்ஸுடன் தொலைத்துவிட்டார்.

தொலைந்த பணம்
தொலைந்த பணம்

இந்நிலையில், இவற்றைக் கண்டெடுத்த சாந்தி என்ற பெண், உடனடியாக அவரை தேடிப்போய், தொலைத்த நபரிடம் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்திருக்கிறார். இதனால், சாந்திக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இதுகுறித்து மணிகண்டனிடம் பேசினோம்.``நான் ஃபைனான்ஸ் கம்பெனியில் வேலை செய்வதால், பல இடங்களுக்கும் சென்றுவருவேன். 2 நாள்களுக்கு முன், குறிச்சிப்பட்டியில் உள்ள ஏழைகாத்தம்மன் கோயிலுக்குச் சென்றேன். அப்போது, கோயிலுக்கு காணிக்கை எடுக்கும்போது என் மணிஃபர்ஸைக் காணவில்லை.

என்ன செய்வதென்று தெரியாமல், சாமியிடம் வேண்டிக் கொண்டேன். என்னுடைய ஃபர்ஸில் ரூ. 21,000 பணம் மற்றும் ஆவணங்கள் இருந்தன. அது, என்னுடைய கம்பெனி காசு. அதனால் இதை எப்படி ஈடுசெய்வதென்று நினைத்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு போன் வந்தது. `தம்பி, உங்க பர்ஸ் என்கிட்ட இருக்கு. வந்து வாங்கிக்கோக' என்று ஒரு பெண் பேசினார். உடனே சென்று பர்ஸை வாங்கிவிட்டேன். ஒரு ரூபாய்கூட குறையாமல், பணம் மற்றும் ஆவணங்கள் அப்படியே இருந்தன. அவர் பெயர் சாந்தி என்றார் நேரில் பார்த்தபோது.

ஆட்டோவில் தொலைத்த 74,000 ரூபாய்! - முதியவரிடம் ஒப்படைத்த தேனி ஆட்டோ டிரைவர்

பர்ஸை பத்திரமாக திரும்ப ஒப்படைத்த அவரிடம், செலவுக்குப் பணம் கொடுத்தேன். ``அதெல்லாம் வேண்டாம், போங்க தம்பி'' என்று பெருந்தன்மையோடு மறுத்துவிட்டார். அப்போது, சாந்தி அம்மா எனக்கு கடவுளாகத் தெரிந்தார். நான் 13 ஆயிரம் தான் சம்பளம் வாங்குகிறேன். அது முழுமையாக இ.எம்.ஐ வீட்டுக் கடன் என்று செலவாகிவிடும். இப்படி இருக்கும் எனக்கு, சாந்தி அம்மா செய்த உதவி ஈடு செய்ய முடியாதது" என்றார்.

சாந்தியிடம் பேசினோம். ``என் ஊரு சிவல்பட்டி. முருகம்பட்டியில் என் மகள் வீட்டு பால் காச்சு விழாவிற்குச் சென்றேன். அங்கே, சாலை ஓரத்துல, விதைச்சுக் கிடந்தது போல பணம் சிதறிக்கிடந்தது. பக்கத்தில் மணி பர்ஸும் கிடந்தது. எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு ஒரு கடைக்குப் போனேன். அங்கிருந்தவங்ககிட்ட சொன்னப்போ, வாட்ஸப்புல எல்லாருக்கும் செய்தி அனுப்புறதா சொன்னாங்க. அதோட, என் மகன்கிட்டயும் சொல்லி எல்லாத்தையும் வாட்ஸப்பில் அனுப்பி, என் நம்பரையும் போடச் சொன்னேன்.

சாந்தி
சாந்தி

அந்தப் பணம் மணிகண்டன் தம்பியோடதுனு தெரிஞ்சது. அவர் வந்து பர்ஸை வாங்கிட்டு போயிட்டாரு. எனக்கு, அடுத்தவங்க பணம் மேல எப்போதும் ஆசை வந்ததில்லை. அடுத்தவர் பணம் நமக்கெதுக்கு? அந்தப் பாவத்தை ஏன் நாம சுமக்கணும். அதனாலதான் கொடுத்துட்டேன். அந்த பர்ஸை பார்த்த தம்பி, என்னைப் பார்த்து கும்பிட்டது இன்னும் கண்ணுல நிக்கிது. அந்தப் பணத்தை வச்சி செலவு செஞ்சிருக்கலாம். அது நிலைக்காது. ஆனா, அன்பும் கண்ணியமும்தான் நிலைக்கும்" என்றார்.

பின் செல்ல