Published:Updated:

இளைஞரால் கண்காணிப்புக்குள் சிக்கிய கிராமம்.. வருங்கால மனைவியைச் சந்திக்கச் சென்றதால் நேர்ந்த சோகம்!

கொரோனா
கொரோனா

வருங்கால மனைவியைச் சந்திக்க கொரோனா முகாமலிருந்து தப்பித்துச் சென்றதால் நிகழ்ந்த விபரீதம்....

இளைஞர் ஒருவரின் செயலால், அவர் திருமணம் செய்யவிருந்த பெண் உட்பட அவர் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் அனைவரும் கொரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

மதுரை கொரோனா சிறப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்ட இளைஞர் ஒருவர், யாருக்கும் தெரியாமல் தன் வருங்கால மனைவியைச் சந்திக்கச் சென்றது மதுரை, சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை விமான நிலையம் அருகே சின்ன உடைப்பு கிராமத்தில் கொரோனா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து வருகிறவர்கள் இங்கு அனுமதிக்கப்பட்டு சில நாள்கள் கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் சாதகமாக வந்தால் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள். இல்லையென்றால் இங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டு

இந்தச் சூழலில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர், துபாயிலிருந்து கடந்த 21-ம் தேதி மதுரை வந்தார். அவரை சோதனை செய்தபோது கொரோனா அறிகுறிகள் இருப்பது தெரிந்தது. அதனால் அவரை சின்ன உடைப்பு சிறப்பு முகாமில் வைத்துக் கண்காணித்து வந்தார்கள்.

இந்த நிலையில் நேற்று அங்கிருந்து அவர் எஸ்கேப்பானார். போக்குவரத்து வசதி இல்லாத நேரத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்களில் லிப்ட் கேட்டு ஊருக்குச் சென்றதாகச் சொல்லப்படுகிறது. உடனே காவல்துறையினரிடம் புகார் செய்யப்பட்டது. காவல்துறையின் தேடுதல் வேட்டையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தன் வருங்கால மனைவியைச் சந்திக்கச் சென்றது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா
கொரோனா

காவல்துறையினர் அவரை மீட்டு மீண்டும் சின்ன உடைப்பு கொரோனா சிறப்பு முகாமுக்குக் கொண்டு வந்தார்கள். இத்தகவல் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட பெண் உட்பட அவர் குடும்பத்தினரும் கிராம மக்களும் கொரோனா கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். வேறு யாரையும் அந்த இளைஞர் சந்தித்தாரா என்பதையும் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே அந்த இளைஞர் அப்பெண்ணைத் திருமணம் செய்து விட்டதாகவும் சொல்லப்படும் நிலையில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு