Published:Updated:

70 கி.மீ தூரம் பயணித்து உதவி செய்த சிவகங்கை கலெக்டர்! -ஆனந்த கண்ணீர்விட்ட பார்வையற்ற மாற்றுத்திறனாளி

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி கறிக்கடை ஜாகிர் உசேனை நேரில் சந்தித்த கலெக்டர்.

உதவி செய்த கலெக்டர்
உதவி செய்த கலெக்டர் ( சாய்தர்மராஜ் )

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட கிராமம் புழுதிப்பட்டி. இங்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஜாகிர் உசேன் கறிக்கடை ஒன்றை நடத்திவருகிறார்.

ஜாகிர் உசேன்
ஜாகிர் உசேன்
சாய்தர்மராஜ்

இந்நிலையில் இவரின் சவாலான பணியையும் திறமையையும் கஷ்டங்களையும் தெரியப்படுத்தும் விதமாகத் தற்போது வெளிவந்துள்ள ஆனந்த விகடனில் `விழிகளிலா இருக்கிறது வெளிச்சம்' என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டோம்.

ஆனந்த விகடன் புத்தகத்தை இணையம் வழியாகப் படித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், ஜாகிர் உசேன் கண் பார்வையில்லாமல் கறிக்கடை நடத்தும் விதத்தை இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜாகிர் உசேனை சந்தித்த கலெக்டர்
ஜாகிர் உசேனை சந்தித்த கலெக்டர்
சாய்தர்மராஜ்

அதைக் கண்டு நெகிழ்ந்த மாவட்ட ஆட்சியர், 'ஜாகிர் உசேன் போன்று அனைவரும் தன்னம்பிக்கையோடு உழைக்க வேண்டும்' என்று வாழ்த்திப் பேசினார். மேலும், ஜாகிர் உசேனுக்கு 1 லட்ச ரூபாய் கடன் உதவியும், பசுமை வீடு வழங்கவும் மேலும் அவர் குழந்தைகளின் படிப்புக்கு உதவ வேண்டும் எனச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் அழைத்து உத்தரவிட்டார்.

அப்போது அப்பகுதி மக்கள், கலெக்டர் தங்கள் ஊருக்கு வந்ததை நினைத்து மகிழ்ச்சி அடைந்தனர். சாலை வசதி, பேருந்து வசதி, தொழில் கடன் தொடர்பாக மனு அளித்தனர். அனைத்தையும் பெற்றுக்கொண்ட கலெக்டர் விரைவில் அனைத்தையும் சரி செய்வதாக உறுதி அளித்த பின் காரில் புறப்பட்டார்.

சால்வை அணிவிக்கும் கலெக்டர்
சால்வை அணிவிக்கும் கலெக்டர்
சாய்தர்மராஜ்

கறிக்கடை ஜாகிர் உசேன், "கண்ணு தெரியாத என்னைப் பார்க்க கலெக்டர் ஐயா 70 கி.மீட்டர் பயணம் செய்து வந்து, எனது கறிக்கடையைப் பார்வையிட்டது சந்தோஷமான தருணம். எனக்கு அவர் கையால் சால்வையும் அணிவித்து பெருமைப்படுத்தினார். என்னுடைய கஷ்டங்களையும் தன்னம்பிக்கையும் அவரிடம் எடுத்துக் கூறினேன். என்னுடைய வார்த்தைகளைக் கேட்டு மிகவும் ஆச்சர்யப்பட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைய வாழ்த்துகள் தெரிவித்தார்" என ஆனந்த கண்ணீர் வடித்து நெகிழ்ந்தார்.