Published:Updated:

சிவகங்கை: ஆதிதிராவிடர் மாணவிகளின் ஊக்கத்தொகை நிறுத்தம் - அலட்சிய அதிகாரிகளால் மாணவிகள் தவிப்பு?!

ஊக்கத்தொகை நிறுத்தம் ( சித்தரிப்புப் படம் )

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

சிவகங்கை: ஆதிதிராவிடர் மாணவிகளின் ஊக்கத்தொகை நிறுத்தம் - அலட்சிய அதிகாரிகளால் மாணவிகள் தவிப்பு?!

சிவகங்கை மாவட்டத்தில் ஆதிதிராவிட மாணவிகளுக்கு வழங்கப்படும் கல்வி ஊக்கத்தொகை திட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே பல்வேறு குளறுபடிகள் நடைபெற்றிருக்கின்றன என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Published:Updated:
ஊக்கத்தொகை நிறுத்தம் ( சித்தரிப்புப் படம் )

பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் கடந்த 15 வருடங்களாக அனைத்துப் பள்ளிகளிலும் படிக்கும் ஆதிதிராவிட மாணவிகளுக்கு அரசு சார்பில் ஊக்கத்தொகை கொடுக்கப்பட்டுவருகிறது. 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ரூ.500, 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,000, 7, 8-ம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.1,500 என ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் அரசு வழங்கிவருகிறது. இதற்காக, ஒவ்வொரு கல்வி ஆண்டு தொடக்கத்திலும், மாணவிகளுக்கு ஒரு விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

அதில், மாணவி பள்ளியில் படிப்பதற்கான தலைமையாசிரியரின் ஒப்பதல், சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரின் ஒப்புதலுடன், மாணவியின் வங்கிக் கணக்கு மற்றும் ஆதாரையும் இணைத்து மாவட்ட கல்வி அதிகாரி மூலம் ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அனுப்பப்படுகிறது. ஆதிதிராவிடர் நலத்துறையினர், அந்தத் தொகையை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிடுகின்றனர்.

ஆனால், சிவகங்கை மாவட்டத்தில், கடந்த 2020-21, 2021-22 ஆகிய இரண்டு கல்வியாண்டிலும் இந்தத் திட்டத்தில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருக்கின்றன என்கிறார்கள்.

அரசுப் பள்ளி மாணவர்கள்
அரசுப் பள்ளி மாணவர்கள்

குறிப்பாக, 2021-22 கல்வியாண்டில் மட்டும் 80 சதவிகிதம் மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை. மாறாக, இந்தத் திட்டத்துக்காக, அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட பணத்தைத் திரும்ப அரசிடமே ஆதிதிராவிடர் நலத்துறை ஒப்படைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி, ஆதிதிராவிட மாணவிகளின் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி தலைமையாசிரியர்கள் சிலரிடம் பேசினோம், ``வழக்கமாக ஒவ்வோர் ஆண்டும், பூர்த்தி செய்யப்பட்ட மாணவிகளின் விண்ணப்பங்களை, ஆகஸ்ட் இறுதிக்குள், எங்கள் கல்வி அதிகாரி மூலம் ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒப்படைத்துவிடுவோம். செப்டம்பர் இறுதிக்குள்ளேயே மாணவிகளின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்திவிடுவார்கள்.

முன்பெல்லாம், இது போன்ற பிரச்னைகள் வந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாகத்தான் இது போன்ற பிரச்னை ஏற்படுகின்றன. பல பெற்றோர்கள் இதுப ற்றி எங்களிடம் முறையிடுகின்றனர். `எங்களுடைய தரப்பிலிருந்து அனைத்து வேலைகளையும் முடித்துக் கொடுத்துவிட்டோம். விரைவிலேயே அக்கவுன்ட்டில் பணம் ஏறிவிடும்’ என்று கூறி அவர்களை அனுப்புகிறோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது பற்றி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டால், `மாணவியின் வங்கிக் கணக்குக் கம்யூட்டரில் தெளிவாக இல்லை’ என்பது போன்ற சில சாக்குபோக்குகளைச் சொல்லி சமாளித்து அனுப்புகின்றனர். என்ன ஆனாலும் மாணவிகளுக்கு பணம் வந்தபாடில்லை. அதேநேரத்தில் இதேபோல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. அந்தத் தொகை ஒவ்வொரு தலைமையாசிரியரின் அதிகாரபூர்வ வங்கிக் கணக்குக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. அதை நாங்கள் பிரித்து மாணவிகளின் வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைக்கிறோம். எளிதாகவே வேலை முடிந்துவிடுகிறது. ஆடிட்டிங் செய்வதற்கு வசதியாக மாணவியின் வங்கிக் கணக்கு நகலையும் வாங்கி வைப்பதோடு, அதை எங்கள் கல்வி அதிகாரிக்கும் அனுப்புகிறோம்.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் இந்தத் தொகையையும் தலைமையாசிரியர்களின் அதிகாரப்பூர்வ வங்கிக் கணக்கிலேயே ஏற்றிவிட்டால், எளிதாக வேலையை நாங்களே முடித்துக் கொடுத்துவிடுவோம். இதைத் துறை அதிகாரிகளிடமும் வலியுறுத்திவருகிறோம். இதில், அரசுதான் முடிவெடுக்கணும்" என்றார்கள்.

ஆதிதிராவிட மாணவிகளுக்குப் பணம் வராத சம்பவம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுத்திருக்கிறது. தொடர்ந்து, மாணவிகளுக்குப் பணம் கிடைக்காவிட்டால் போராட்டத்தை முன்னெடுக்கவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது

வீரையா
வீரையா

இது குறித்து, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வீரையாவிடம் பேசினோம். "ஒவ்வொரு மாணவியும்ம் ரூ.500 கொடுத்து வங்கிக் கணக்கு திறந்திருக்கின்றனர். தங்களின் வேலைகளுக்கும் மத்தியில் பல பெற்றோர்கள் பிள்ளைகளை வி.ஏ.ஓ ஆபீஸுக்கு கூட்டிச் சென்று அங்கு காத்திருந்து விண்ணப்பத்தை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். சிலர் இரண்டு, மூன்று முறைகூட வாங்கிக் கொடுத்திருக்கின்றனர். சிறு தொகைதான் என்றாலும், பேனா, பென்சில் என ஏதோ ஒரு வகையில் மாணவிகளுக்கு அந்தப் பணம் உதவியாக இருக்கும். ஆனால், துறை அதிகாரிகள், இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டுகின்றனர். அனைத்து ஆதிதிராவிட மாணவிகளுக்கும் விரைவிலேயே பணம் கிடைக்க ஆதிதிராவிடர் நலத்துறை வழிவகை செய்ய வேண்டும். மேலும், ஆதிதிராவிட மாணவிகளுக்காகக் கடந்த கல்வியாண்டில் அரசு ஒதுக்கிய பணத்தை, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் திரும்ப வழங்கியதாக எங்களுக்கு தகவல் வருகிறது. அந்தப் பணத்தை மீண்டும் அரசிடமிருந்து பெற்று மாணவிகளுக்கு வழங்க வேண்டும். அரசிடமிருந்து பெற முடியாத பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளின் சம்பளத்தைப் பிடித்தம் செய்தாவது, பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கணும். மாணவிகளுக்கு அந்தப் பணம் கிடைக்காவிட்டால், தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்" என்கிறார்.


மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் மங்களநாதனைத் தொடர்புகொண்டு இது பற்றிக் கேட்டபோது, இதுதொடர்பாக பிறகு பேசுவதாக தெரிவித்து அழைப்பைத் துண்டித்தார். தொடர்ந்து நாம், பலமுறை செல்போனில் அழைத்தோம். அழைப்பை அவர் ஏற்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் அளிக்கும் பட்சத்தில் அதை உரிய பரிசீலனைக்குப் பின்னர் பதிவுசெய்வதற்குத் தயாராக இருக்கிறோம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism