Published:Updated:

'எல்லையில மட்டுமல்ல ஊருக்குள்ளேயும் மக்களைப் பாதுகாக்க முடியும்" -நெகிழவைத்த இராணுவ வீரர்கள்!

வைகை பட்டாளம்
வைகை பட்டாளம்

சிவகங்கையைச் சேர்ந்த ராணுவ வீரர்கள், கொரோனா லாக்டெளன் காலத்தில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உணவுப்பொருள்கள் இன்றித் தவிக்கும் மக்களுக்கு உதவிசெய்து வருகின்றனர்.

'கொரோனாவின் கோரத் தாண்டவம் கடுமையாக வஞ்சித்தாலும் அதேசமயம், பல்வேறு இடங்களில் மனித நேயமும் மலர்ந்தது. இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள், "எங்களால் ஊருக்குள்ளேயும் மக்களைப் பாதுகாக்க முடியும்" என்று நிரூபித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்

அரசு, தங்களால் முடிந்த உதவிகளைச் செய்தாலும் உதவி முழுமையடையவில்லை. இதனால் சமூக ஆர்வலர்கள் களத்தில் இறங்கி உதவி செய்துவருகின்றனர் . இந்நிலையில், இந்திய எல்லையில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள், வாட்ஸ்அப் குழுவால் இணைந்து ஏழை, எளிய மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளனர். இந்த இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்யும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிந்துவருகிறது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய இராணுவ வீரர் அன்பரசன் " கொரோனா காலத்தில் நாங்கள் பல்வேறு இடங்களில் பாதுகாப்புப் பணியில் இருந்தாலும், சொந்த ஊரில் பொதுமக்கள் வறுமையில் வாடுவதைப் பார்க்க முடிந்தது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இராணுவ வீரர்கள் அனைவரும் வாட்ஸ்அப் மூலம் ஒன்றிணைந்து செயல்பட்டு, நிவாரண உதவிகளைச் செய்யலாம் எனத் திட்டமிட்டோம். 'வைகைப் பட்டாளம்' என்று பெயர் சூட்டி, வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தொடங்கி பணிகளைச் செய்ய ஆரம்பித்தோம்.

நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நதிகள் பாய்ந்தாலும் சொல்லும்படியாக வைகை நதிதான் அவ்வப்போது உதவுகிறது. அதனால் வைகையின் பெயரை குழுவிற்கு வைத்து சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்கள் அனைவரும் ஜாதி, மதங்களைக் கடந்து செயல்படுகிறோம். குழுவில், ரூ1000, 2 ஆயிரம் என பணத்தைத் திரட்டினோம். தற்போது வரை குழுவில் 183 நபர்கள் வரை உள்ளோம். முதல் கட்டமாக கங்கை அமரன் குடியிருப்புப் பகுதியில் 116 குடும்பங்களுக்கு காய்கறி, அரிசி, பிஸ்கட் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கினோம்.

அதில், மானாமதுரை டிஎஸ்பி கலந்துகொண்டு நிவாரணப் பொருளை வழங்கினார். அதற்குப் பின் சந்நிதி புதுக்குளத்தில் பொதுமக்களுக்கு உதவிசெய்தோம். அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்று தெரிவித்ததால், 6-க்கும் மேற்பட்ட பெரிய அளவு டிரம்களில் தண்ணீர் வழங்கினோம். அப்போது டாக்டர்.ஜீவரத்தினம், செவிலியர் மல்லிகா, மணிமேகலை அவர்களின் கையால் நிவாரணப் பொருட்களை வழங்கி அவர்களை கௌரவப்படுத்தினோம்.

தண்ணீர்  உதவி
தண்ணீர் உதவி

விண்ட்சட் நகர், நல்லான்புரம் அதைச் சுற்றியுள்ள 5-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏழை, எளிய மக்கள் சிரமப்படும் நபர்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினோம். தற்போது, மானாமதுரை தாலுகாவில் பல இடங்களில் நிவாரணப் பொருட்களை வழங்கி முடித்துவிட்டோம்.

அடுத்து, சிவகங்கை தாலுகாவிற்கு வழங்க உள்ளோம். தற்போது வரை 1 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருள்கள் வழங்கியுள்ளோம். தொடர்ந்து சிவகங்கை முழுவதும் எங்கள் களப்பணிகள் தொடர உள்ளது. விடுமுறைக்கு ஊருக்கு வரும் வீரர்கள், இதுபோன்ற செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட உள்ளோம். எங்கள் குழுவில் உள்ள ஒவ்வொரு வீரருக்கும் வரவு, செலவு கணக்குகள் வெளிப்படையாக இருப்பதால் ஆரோக்கியமாகச் செயல்பட முடிகிறது.

இராணுவ வீரர்கள்
இராணுவ வீரர்கள்

சிவகங்கை மாவட்ட இராணுவ வீரர்களின் செயலைப் பாராட்டி, தற்போது இராமநாதபுரத்தில் உள்ள இராணுவ வீரர்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றனர். இதுபோன்று பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எல்லையில் மட்டும் அல்ல, ஊருக்குள்ளேயும் எங்களால் பணி செய்ய முடிகிறது என்பது பெருமையாக உள்ளது” என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு