Published:Updated:

`கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருக்கிறது'- தீபாவளி கொண்டாடாத கிராம மக்களை நெகிழவைத்த கலெக்டர்!

தீபாவளிக்கு வெடி வெடித்துக் கொண்டாடாத கிராமத்திற்கு மாவட்ட ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

கலெக்டர் ஜெயகாந்தன்
கலெக்டர் ஜெயகாந்தன்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது, வேட்டங்குடி பறவைகள் சரணாலயம். மேலூர் டு திருப்பத்தூர் சாலையில் உள்ள இந்தச் சரணாலயத்துக்கு அருகே உள்ளது வேட்டங்குடி, கொள்ளுக்குடிபட்டி கிராமம்.

பறவைகள்
பறவைகள்

இந்தக் கிராமத்தில் உள்ள பொதுமக்கள், தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவுக்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள். அதேபோல், பறவைகளுக்குத் தொந்தரவு செய்யும் விதமாக மேள தாளங்களோ, ஒலிபெருக்கியோ வைப்பதில்லை.

இதனால் வேட்டங்குடி சரணாலயத்தில் தொந்தரவு இல்லாமல் பறவைகள் வந்துசெல்கின்றன. இப்பகுதி மக்கள் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்காமல் அமைதியான முறையில் புத்தாடைகள் உடுத்தியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது வழக்கம். இதைப் பாராட்டும் விதமாக, சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் இப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

white eyed buzzard
white eyed buzzard
அருண்குமார் திலீபன்

இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன், வனச்சரக அலுவலர் மதிவாணன் மற்றும் வன அலுவலர்களும் திட்ட அலுவலர்களும், பொதுப்பணித்துறை அலுவலர்களும் கலந்துகொண்டனர். அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி, மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

மேலும், பறவைகள் சரணாலயத்தில் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். அப்போது, அப்பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் கோரி மனு அளித்தனர். அதனை உடனடியாக நிறைவேற்ற ஆட்சியர் உத்தரவிட்டார். வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 217 வகையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டுப் பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்லும். செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து பறவைகள் கூடுகட்டிக் குஞ்சு பொரித்துச் செல்லும்.

painted stork
painted stork
அந்தோனி பிரான்சிஸ்

உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தைக் கொத்தி உள்ளிட்ட பறவைகளை அதிக அளவு வேட்டங்குடியில் காண முடியும். சுமார் 40 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காட்டுக்கருவைகளும் இங்குள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடம் கூறுகையில், "வேட்டங்குடி சரணாலயத்தைத் தேடி எண்ணற்ற பறவைகள் வந்து செல்கின்றன. இது, சிவகங்கை மாவட்டத்திற்கே பெருமையான விஷயம். இங்கு வரும் பல்வேறு பறவைகள் கண்களுக்கு விருந்தளித்தன. பல்வேறு இடங்களிலிருந்து வலசைவரும் பறவையைப் பாதுகாக்கும் விதமாக, இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் பட்டாசு வெடிக்காமல் பசுமைத் தீபாவளி கொண்டாடுவது கூடுதல் மகிழ்ச்சியாக உள்ளது. இதேபோல் ஆண்டு முழுவதும் பறவைகளைப் பாதுகாக்கும் நோக்கில் நடந்துகொள்ள வேண்டும்" என கோரிக்கை விடுத்து, இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துகள்'' கூறினார்.