Published:Updated:

`நீரோட்டம் பார்க்க வேப்பங்குச்சி போதும்!'- 85 வயதில் நிலத்தடி நீரைக் கணிக்கும் கலெக்டரின் தந்தை

அபிநய சௌந்தர்யா

`வேம்புக்கு சக்தி அதிகம். அதனால்தான் எளிதில் என்னால் நீரோட்டத்தை அறியமுடிகிறது’

ஜெகதீஸ்வரன்
ஜெகதீஸ்வரன்

தமிழகம் முழுக்கவே பல இடங்களில் தண்ணீர் பஞ்சம் நிலவி வருகிறது. கோடைக்காலம் மட்டுமின்றி வருடம் முழுவதுமே சில மாவட்டங்களில் தண்ணீர் பிரச்னை இருந்துவருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஆழ்துளைக் கிணறு அமைக்க நீரோட்டம் பார்க்க கலெக்டருடைய தந்தை ஜெகதீஸ்வரனும் களமிறங்கியிருப்பதைச் சிவகங்கை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்க்கின்றனர்.

ஆழ்துளைக் கிணறு
ஆழ்துளைக் கிணறு

ஜெகதீஸ்வரனுக்கு வயது 85. இந்த வயதிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசு, தனியார் என யார் ஆழ்துளைக் கிணறு தோண்டினாலும் அவர்தான் நீரோட்டம் பார்க்கிறார். அவரிடம் பேசினேன். ``வேலூரை அடுத்த திருவலம் கிராமம்தான் என் பூர்வீகம். எட்டாம் வகுப்பு வரை படிச்சிருக்கேன். ரயில்வே டிபார்ட்மென்ட்ல வேலை பார்த்து 1992–ல ரிடையர்டு ஆனேன். எனக்கு ஒரு பொண்ணு, ரெண்டு பசங்க. சென்னை ஆவடியில் இருந்தப்போ நான் இருந்த வீட்டுக்கு ஆழ்துளைக் கிணறு போட வேண்டியிருந்தது. என் நண்பர் ஒருவர் நீரோட்டம் பார்ப்பார். அவரைக் கூப்பிட்டுருந்தேன்.

வீடு ரொம்ப தூரமா இருந்ததால அவரால வர முடியலை. மறுநாள் என்னைக் கூப்பிட்டு வேப்பங் குச்சியைக் கையில் கொடுத்து நீரோட்டம் பார்க்கக் கற்றுக்கொடுத்தார். எங்க வீட்டில் நானே நீரோட்டம் பார்த்து ஆழ்துளைக் கிணறும் போட்டோம். தண்ணியும் நல்லபடியா வந்தது. அதுக்கப்புறம், தெரிஞ்சவங்க சிலருக்கு நீரோட்டம் பார்த்துக் கொடுத்தேன். சென்னையில இருந்தவரைக்கும் அதிகமாக நீரோட்டம் பார்க்க வாய்ப்பு கிடைக்கல. சிவகங்கை வந்தபிறகுதான் பக்கத்துல இருக்குற பல ஊருக்கு நீரோட்டம் பார்க்கப் போறேன்.

தனது உதவியாளருடன் ஜெகதீஸ்வரன்
தனது உதவியாளருடன் ஜெகதீஸ்வரன்

ஒரு மனதிருப்தி கிடைக்குது. வீட்டில் எனக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லை. நீரோட்டம் பார்க்க என் மகன் எந்தத் தடையும் சொல்றதில்லை. இரண்டு வருஷத்துக்கு முன்னாடிவரைக்கும் தனியா போயிட்டு வருவேன். இப்போ ஒரு உதவியாளரும் கூட வர்றார். வேம்புக்கு சக்தி அதிகம். அதனால்தான் எளிதில் என்னால் நீரோட்டத்தை அறியமுடிகிறது. பூவந்தி, திருப்புவனம், காளையார்கோவில், தெப்பக்குளம் எனப் பல இடங்களில் நான் நீரோட்டம் பார்த்துக் கொடுத்து, தண்ணீரும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்குது.

அங்குள்ள மக்கள் வந்து நன்றி சொல்றப்போ சந்தோஷமா இருக்கும். ரோடு அதிகமானதால மழைநீரை பூமியால் உள்வாங்க முடியவில்லை. அதனாலதான் நிலத்தடிநீர் வத்திப் போயிருது. மழைநீர் சேமிப்புல நம்ம ஆர்வம் காட்டணும்" என அறிவுரை சொல்கிறார் ஜெகதீஸ்வரன்.

மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்
மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன்

இதுபற்றி ஜெகதீஸ்வரனின் மகனும் சிவகங்கை மாவட்ட ஆட்சியருமான ஜெயகாந்தனிடம் பேசினோம். ``அவருக்குப் பிடித்து இந்த வேலையைச் செய்கிறார். நீர்நிலைகள் மேம்படுத்தவே பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் ஆழ்துளைக்கிணறு அமைத்துத் தருவதும் ஒன்று. அதில் என் அப்பா பங்குவகிப்பது எனக்குப் பெருமையே" என்றார்.