Published:Updated:

கண்மாய்க்குள் பாய்ந்த கார்; தத்தளித்த குடும்பம்; உடனே இறங்கி காப்பாற்றிய சிவகங்கை இளைஞர்!

காருக்குள் இருந்து, `காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்!' என்று கதறல் சத்தம் கேட்கவே, எதைப்பற்றியும் யோசிக்காமல், கண்மாய்க்குள் இறங்கி காரிலிருந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெரியவருடன் இருந்த தம்பதி என 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் பாய்ந்த காரில் இருந்த 5 பேரை இளைஞர் ஒருவர் காப்பாற்றி கரை சேர்த்த சம்பவம், தற்போது தெரியவந்து அனைவரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

கண்மாய்க்குள் கார்
கண்மாய்க்குள் கார்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மதுரையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி மாலை நிறுவனத்தின் வேலைக்காக காரில் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தவர், திருப்புவனம் தாண்டி சாலையை ஒட்டியுள்ள மாரநாடு கண்மாய்க்குள் ஒரு கார் மூழ்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியானார். உடனே காரை நிறுத்தி அருகில் சென்று பார்த்தார்.

காருக்குள் இருந்து, `காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்!' என்று கதறல் சத்தம் கேட்கவே, எதைப்பற்றியும் யோசிக்காமல், கண்மாய்க்குள் இறங்கி காரிலிருந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெரியவருடன் இருந்த தம்பதி என 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

கண்மாய்க்குள் மூழ்கிய கார்
கண்மாய்க்குள் மூழ்கிய கார்
`இனி உயிர் பிழைக்க மாட்டோம்னு நினைச்சேன்!’ - ஆனைவாரி நீர்வீழ்ச்சியின் திக்... திக்... நிமிடங்கள்!

அதன் பின்பு அவர்களை வேறு வாகனத்தில் மானாமதுரைக்கு அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தை அவருடன் சென்றவர் போட்டோ எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்த பின்புதான் எல்லோரும் இதை அறிந்து முத்துகிருஷ்ணனை பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாமும் வாழ்த்தி விட்டு, முத்து கிருஷ்ணனிடம் பேசினோம். ``அலுவலக வேலையா அன்னைக்கு ராம்நாட்டுக்கு கார்ல போய்க்கிட்டிருக்கும்போது தூரத்துல ஒரு வண்டி டிவைடரைத் தாண்டி எதிர்ல வர்ற மாதிரி தெரிஞ்சது. அப்புறம் கொஞ்ச நேரத்துல அந்த கார் கண்மய்க்குள் பாஞ்சிருச்சு. பிஸியான அந்த ரோட்டுல இதை யாரும் கவனிக்கல. பதறிப்போய் உடனே வண்டிய நிறுத்திட்டேன். அவங்க காப்பாத்தச் சொல்லி சத்தம் போட்டாங்க. நல்ல வேளை, ரோட்டுல இருந்து அந்த கண்மாய் பக்கம். கரைக்கும் காருக்கும் கொஞ்ச தூரம்தான் டிஸ்டன்ஸ் இருந்ததால உடனே நான் போய் ஒவ்வொருத்தரா கீழே இறக்கி கரைக்கு கொண்டு வந்துட்டேன். பாவம் அவங்க ரொம்ப பதற்றமா இருந்தாங்க.

முத்துகிருஷ்ணன்
முத்துகிருஷ்ணன்

காருல வந்தது ரயில்வே ஸ்டாஃபோட குடும்பம். மானாமதுரையிலிருந்து மதுரைக்கு வரும்போது இப்படி ஆயிடுச்சு. உடனே அவங்களை பஸ்ஸுல ஏத்தி மானாமதுரைக்கு அனுப்பிட்டேன். அவங்க யார் என்னன்கிற விவரம் ஏதும் கேட்கல. என் போன் நம்பரை வாங்கிட்டு போனாங்க. அவங்க குழந்தைங்க போன் பண்ணி நன்றி சொன்னாங்க.

மின்சாரம் தாக்கி உயிருக்குப் போராடிய இளைஞர்; முதலுதவி செய்து காப்பாற்றிய காவலர்!

பரபரப்பா இருக்குற ரோடுங்கிறதால காருல போறவங்க யாரும் சைடுல சரியா கவனிக்க மாட்டாங்க. நான் அந்த பகுதியை சேர்ந்தவங்கிறதால எல்லா பக்கமும் உன்னிப்பா கவனிப்பேன். நல்லவேளை அவங்க காரு கண்மாயில மூழ்கினது என் கண்ணுல பட்டுச்சு. அவங்க குடும்பம் இந்த சம்பவத்தை மறந்துட்டு நல்லா இருக்கணும்" என்றார்.

விபத்தைக் கண்டதும் தயங்காமல் கண்மாயில் இறங்கி குடும்பத்தினரைக் காப்பாற்றிய முத்துகிருஷ்ணனின் செயலை கேள்விப்பட்டு அனைவரும் பாராட்டுகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு