Published:Updated:

`அதெப்படி 4 நாள்ல கொரோனா சரியாகும்?' - வாட்ஸ்அப் புகாரும், மருத்துவக்கல்லூரி டீன் விளக்கமும்!

கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு
கொரோனா சிகிச்சை சிறப்பு வார்டு ( மாதிரி படம் )

``ஓய்வு எடுக்கச் சொல்லி சாப்பாடும், மாத்திரையும் கொடுக்குறாங்க. நாலு நாள் தங்க வெச்சுட்டு வீட்டுக்கு அனுப்புறாங்க. இப்படி செய்தா கொரோனா சரியாகிடுமா?'' என நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் குரல் வாட்ஸ்அப் மூலம் நமக்கு வந்தது.

அவருடைய செல்போன் நம்பரை பெற்று அவரிடம் பேசினோம்.

``என் பெயர் சம்பத். எனக்கு சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் வி.புதுக்குளம் கிராமம். நான் மதுரையில தொழில் செய்றேன். ஆகஸ்ட் 10-ம் தேதி மதுரை கிருஷ்ணாபுரத்தில கொரோனா டெஸ்ட் எடுத்துக்கிட்டேன். 12-ம் தேதி காலையில எட்டரை மணிக்கு, எனக்குக் கொரோனா பாசிட்டிவ்னு சொன்னாங்க. நான் சொந்த ஊருக்குப் பக்கத்துல இருக்கிற சிவகங்கை ஜி.ஹெச்ல சேர்ந்துக்கிறேன்னு சொன்னேன். ஆனா அவங்க, மதுரை ஜி.ஹெச்க்கு வாங்கனு அடமா சொன்னாங்க.

மதுரைக்குப் போயி ரெக்வஸ்ட் பண்ணி சிவகங்கை ஓல்டு ஜி.ஹச் வந்து சேர்ந்துட்டேன். நான் அட்மிஷன் போடுறதுக்குள்ள 50 போன் கால் செஞ்சு பெரும் தொல்லை பண்ணிட்டாங்க. என் வீட்டு முன்னாடி தகரம் அடிச்சு ஸ்டிக்கர் ஒட்டிட்டாங்க. பால்காரர், பூ காரர்னு பயந்துகிட்டு யாருமே வீட்டுப் பக்கம் வரல. மனரீதியா பாதிக்கப்பட்டு சிவகங்கையில சிகிச்சை எடுத்துக்கிட்டேன். சாப்பாடு, கஷாயம், மாத்திரைனு குறையில்லாம கொடுத்தாங்க. ஆனா நாலு நாள் ஆனதும், வீட்டுக்குப் போங்கனு சொல்லி கையெழுத்துக் கேட்டாங்க. அதுல, `கொரோனா சிகிச்சை பெற்று பூரண குணம் அடைந்தேன். தற்போது வீட்டிற்குச் செல்கிறேன்'னு, நானா விரும்பி வீட்டுக்குக் கிளம்புறது மாதிரி போட்டிருந்துச்சு.

ஆனா, எனக்கு பயம். நாலு நாளில் எப்படி நமக்குக் கொரோனா சரியாகும்னு கேள்வி இருந்துச்சு. எந்த டெஸ்ட்டும் எடுத்துப் பார்க்காம, எப்படி எனக்குக் கொரோனா சரியாகிடுச்சுனு சொல்றாங்கனு புரியலை. மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களிடம் கேட்டும், சரியான பதில் கிடைக்கல. அதனால நான் எதிலும் கையெழுத்துப் போடல. நான் ஹாஸ்பிட்டல்ல இருந்து கிளம்பிப்போய் பிறருக்கும் கொரோனாவை பரப்பி விடக்கூடாதுனு நினைச்சேன். நாலு நாள்ல ஏன் என்னை வீட்டுக்குக் கிளம்பச் சொன்னாங்கனு எனக்கு முறையான பதில் வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சருக்கு இதனை புகாராக தெரிவிச்சிருக்கேன்" என்றார்.

இது குறித்து சிவகங்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேலிடம் கேட்டோம். ``நாடு முழுவதும் உள்ள விதிமுறையைத்தான் நாமும் கையாள்கிறோம். குறிப்பிட்ட நாள்களில் கொரோனாவில் இருந்து குணமடைந்து, அறிகுறிகள் இல்லாமல் இருப்பதைத் தொடர்ந்து, அவர்களை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி வீட்டிற்கு அனுப்புகிறோம். இந்தியா முழுவதும் எக்சிட் டெஸ்ட் எடுக்கப்படுவதில்லை" என்றார்.

Corona
Corona

இதுகுறித்து சுகாதாரத்துறையில் விசாரித்தபோது,``காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் உள்ளவர்கள் யாரையும் நிச்சயம் வீட்டுக்கு அனுப்பமாட்டோம். அதே நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு எந்த அறிகுறியும் இல்லாமல், ஆரோக்கியமாக இருப்பவர்களை வீட்டிற்கு அனுப்பி, வீட்டிலேயே அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளித்துள்ளன. அதுவும் அவர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே அனுப்பி வைக்கப்படுகிறார்கள்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு