Published:Updated:

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி: மருத்துவ அதிகாரியின் சர்ச்சை ஆடியோவும்; டீனின் விளக்கமும்!

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

``நமக்கு என்ன கவலை, அவங்க பார்த்து பண்ணிக்குவாங்கம்மா. நமக்கு ஒண்ணும் இல்லை. நம்ம ஜி.ஆர்.ஹெச்சுக்குத்தான் எழுதிக் கொடுக்கணும்" என மருத்துவ அதிகாரி ஆடியோவில் பேசுகிறார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே வடக்கு கீரனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் கார்த்திக். இவருக்குக் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்தபோது இதயத்தில் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், அங்கு பணியிலிருந்த பயிற்சி மருத்துவர், நோயாளியின் உறவினர்களிடம், "கார்த்திக்குக்கு நெஞ்சுவலி எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். எனவே, தனியார் மருத்துவமனைக்கு கார்த்திக்கைக் கூட்டிச் செல்லுங்கள்" என்று கூறியிருக்கிறார். உடனே நோயாளியின் உறவினர்கள் நிலைய மருத்துவ அதிகாரி மீனாவிடம் இது பற்றிக்கூறி புகார் செய்தனர். உடனே சம்பந்தப்பட்ட பயிற்சி மருத்துவரை போனில் தொடர்புகொண்ட நிலைய அதிகாரி மீனா இது பற்றி விசாரித்தார். அப்போது, ``நோயாளி இருந்தால் என்ன, செத்தால் நமக்கென்ன?" என்பது போன்று பேசியிருப்பது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.

மருத்துவமனை
மருத்துவமனை

அந்த ஆடியோவில், ``அந்த கேஸ் என்ன கேஸ்ம்மா?’’ என்று பயிற்சி மருத்துவரிடம் மீனா கேட்கிறார். ``கார்டியாலஜி கேஸ் மேடம். இப்போதைக்கு வலி வராது. ஆனாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். தனியார் மருத்துவமனையில் போய் பாருங்கன்னு சொன்னேன் மேம்’’ என்கிறார். உடனே மருத்துவ அதிகாரி, ``நீங்க ஏன் பிரைவேட்டுக்கு அனுப்புறீங்க... நோயாளி உயிரோட இருந்தால் என்ன... செத்தால் நமக்கென்ன? நான் சொல்றதை மட்டும் காதுல நல்லா வாங்குங்க" என்று கூறியவர், ``போன ஸ்பீக்கர்ல போடலேயே...’’ என்பதை உறுதி செய்துகொள்கிறார். தொடர்ந்து, ``நம்ம ஜி.ஆர்.ஹெச்சுக்குத்தான் அனுப்பணும். அவங்க எங்கே வேணாலும் போகலாம். நாம சொன்னதை அவங்க பாசிட்டிவ்வாக எடுத்துக்கலையே, இங்கே வந்து கம்ப்ளெயின்ட் பண்றாங்க... பாரும்மா... நோயாளியோட நல்லது, கெட்டது பத்தியெல்லாம் யோசிக்காதீங்கம்மா. நமக்கு என்ன கவலை... அவங்க பார்த்து பண்ணிக்குவாங்கம்மா. நமக்கு ஒண்ணும் இல்லை. நம்ம ஜி.ஆர்.ஹெச்சுக்குத்தான் எழுதிக்கொடுக்கணும். மருத்துவர்கிட்ட ஜி.ஆர்.ஹெச்சுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதிக்கொடுக்கச் சொல்லுங்க. நானும் கூப்பிட்டுச் சொல்றேன்" என்று கூறியவர், நோயாளியின் விவரங்களைக் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசியவர், ``எதையுமே நோயாளிகளிடம் சொல்லக் கூடாது. நாங்க பாக்குறோம். எங்களால முடியலைன்னா ஜி.ஆர்.ஹெச்சுக்கு அனுப்புறோம்னு சொல்லணும்" என்று கறாராகக் கூறுகிறார். இதற்கிடையே சம்பந்தப்பட்ட மருத்துவ அதிகாரி மீனா, தற்போது நிலைய மருத்துவ அதிகாரியாக இல்லாமல் மருத்துவராக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பணிபுரிந்துவருகிறார். ஓய்வு பெறப்போகும் நிலையில் இருக்கிறாராம். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்குக் காலாவதியான மருந்துகளைக் கொடுத்ததால் இறப்பு ஏற்பட்டதாகக் கூறி அந்த நோயாளியின் குடும்பத்தினர் சுகாதாரத்துறை அமைச்சரிடம் புகார் கொடுத்துள்ளனர். இந்தநிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கிவருகிறது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி

இது பற்றி மருத்துவமனையில் பணிபுரியும் சிலரிடம் பேசினோம். ``நோயாளியின் தரப்பினர் எங்களை ஏன் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப் பார்க்கிறீர்கள் என்று மருத்துவ அதிகாரியிடம் புகார் கொடுத்ததோடு விளக்கம் கேட்டு நெருக்கடி கொடுக்க, சந்தர்ப்ப சூழ்நிலையால்தான் அவர் அப்படிப் பேசியிருக்கிறார். ஆனால், உண்மையில் அவர் நோயாளிகளின் மேல் மிகுந்த அக்கறை காட்டக்கூடியவர். கொரோனா காலத்தில் பம்பரமாகச் சுற்றிச் சுழன்று சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். `நோயாளிகளை மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியதுதானே... ஏன் தனியார் மருத்துவமனைக்குப் போகச் சொல்றீங்க...’ என்று பயிற்சி மருத்துவரிடம் சற்று உரிமையுடன் பேசியிருக்கிறார். `தனியார் மருத்துவமனைக்குப் போகச் சொல்லாதீங்க. ஜி.ஆர்.ஹெச்சுக்கு அனுப்புங்க’ன்னு சொல்றது சரிதான். ஆனாலும், `நோயாளி இருந்தால் என்ன... செத்தால் என்ன?’ என்ற வார்த்தையைக் கண்டிப்பா அவர் பேசியிருக்கக் கூடாது. அது தவறுதான். அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மற்றும் அதற்குத் தேவையான வசதிகளைக் கேட்டுத் தொடர்ந்து அரசை வலியுறுத்திவருகிறோம். அப்படிக் கிடைத்தால், யாரையுமே அனுப்பவேண்டிய நிலை வராது. அதேநேரத்தில் தற்போது, கொரோனா பெருந்தொற்று நேரத்தில் மருத்துவர்கள் செவிலியர்கள் ஒவ்வொருவரும் மக்களைக் காப்பாற்றப் போராடிவருகிறோம்" என்கின்றனர்.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரேவதியிடம் கேட்டபோது, ``ஆடியோ விவகாரத்தைப் பொறுத்தவரை டாக்டர் மீனா பேசியவிதம் எல்லோருடைய மனசையும் கஷ்டப்படுத்திருச்சு. எனக்குமே அந்தப் பேச்சைக் கேட்டதும் ஷாக் ஆகிருச்சு. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கட்டமைப்பு அனைத்தும் ரொம்ப நல்லா இருக்கு. நாங்க எல்லாரும் ஓடி ஓடி வேலை பார்த்துக்கிட்டு இருக்கிறோம். டாக்டராக இருந்துக்கிட்டு அவங்க அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. அதுதான் எங்களுக்கு வருத்தமும் வேதனையும் அளிக்கிறது. இதேபோல், கடந்த வருஷமும் ஒரு வீடியோவில் தவறுதலாகப் பேசி சுகாதாரத்துறைச் செயலாளர் வரையிலும் போய் திட்டு வாங்கியிருக்காங்க. ஆனாலும், திருந்தாமல் இது போன்ற தவற்றை மறுபடியும் செஞ்சுருக்காங்க. கொரோனா நேரத்தில் நாங்க எல்லாரும் நல்லா பர்ஃபார்ம் செஞ்சும் இதனால அனைவருக்கும் கெட்ட பெயர் வருகிறது. தேவையில்லாத மன உளைச்சல் ஏற்படுகிறது. இந்த ஆடியோ விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களிடன் விசாரணை நடத்தி அறிக்கை தயார் செய்து அந்த அறிக்கையை டி.எம்.இ-க்கு அனுப்பியிருக்கிறோம். மேல் நடவடிக்கை குறித்து அவர்கள்தான் தெரிவிப்பார்கள்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு