‘‘நறுமணப் பூங்காவுக்கான கட்டடம் கட்டி, ஏழு ஆண்டுகளுக்கு மேல ஆச்சு. இப்போ வரைக்கும் விவசாயிகளுக்கு எந்தப் பலனுமில்லை... இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கலை. திறந்துவிட்டா நாங்க எங்க பொழப்பைப் பார்ப்போம். ஆனா, அரசியல்வாதிங்க தங்களுக்குள்ள சண்டை போட்டுக்கிட்டே திறக்கவிடாம வெச்சுருக்காங்க’’ என்ற ஆதங்கக் குரல் சிவகங்கை மாவட்ட மக்களிடமிருந்து கேட்கிறது.
சிவகங்கையை அடுத்த முத்துப்பட்டியில், மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் 74 ஏக்கர் பரப்பளவில், 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 2013-ம் ஆண்டு நறுமணப் பூங்கா (ஸ்பைசஸ் பார்க்) கட்டி முடிக்கப்பட்டது. வாசனைப் பயிர்களான மிளகாய், மல்லி, மஞ்சள், இஞ்சி, கறிவேப்பிலை, மிளகு முதலியவற்றைப் பொடியாக்கி, மதிப்புக்கூட்டி, நவீன இயந்திரங்கள் மூலம் பேக்கிங் செய்து, வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்காக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டது. இங்கு தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிக் கடனுதவி மற்றும் மத்திய அரசின் 30 சதவிகித மானியம் கிடைக்கும் எனவும் சொல்லப்பட்டது. பூங்கா முழுமையாகச் செயல்படும் நிலையில், ஏற்றுமதி மூலம் 1,500 கோடி ரூபாய் வருவாயும், 3,000 பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நறுமணப் பூங்காவிலுள்ள கட்டடங்கள் உரிய அனுமதியின்றி கட்டப்பட்டிருக்கின்றன என்ற சர்ச்சை எழுந்ததால், திறப்புவிழா தள்ளிப்போனது. மாநில அரசின் நகர் ஊரமைப்பு இயக்குநரகத்தின் அனுமதி, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 ஜூலையில்தான் கிடைத்தது. அதன் பின்னரும் திறப்புவிழா காணப்படாததால், பூங்காவால் பயனடைய வேண்டிய சிவகங்கை உள்ளிட்ட தென்மாவட்ட மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள்.
இது குறித்து காவிரி, வைகை, குண்டாறு இணைப்புக் கால்வாய் விவசாயிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ஜுனன் பேசினார். ‘‘சிவகங்கை மாவட்டத்தில் மிளகாய் உற்பத்தியைப் பெருக்கும் வகையில் இந்தப் பூங்காவை அப்போதைய காங்கிரஸ் அரசு அமைத்தது. இங்குள்ள மஞ்சள், மிளகாய் அரவை இயந்திரம் மூலம் ஒரு மணி நேரத்தில் ஒரு டன் வரைக்கும் பவுடர் ஆக்க முடியும். அதேபோல் வாசனைப் பொருள்களில் தேவையற்ற நுண்ணுயிர்களை ஆவி மூலம் அழிக்கும் வசதியிருக்கிறது. இங்கு 700 டன் மஞ்சள், 500 டன் மிளகாயைத் தேக்கிவைக்க முடியும். இந்தப் பூங்கா திறக்கப்படாமல் கிடந்தால், அதன் நிலை மிகவும் மோசமடைந்து யாருக்கும் பயனில்லாமல் போய்விடும். எனவே, இதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து திறக்க ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்’’ என்றார்.

சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘‘நறுமணப் பூங்கா குறித்து நாடாளுமன்றத்தில் நான் கேள்வி எழுப்பிய பின்னரே, மாநில அரசாங்கம் கொடுக்க வேண்டிய ஒப்புதலையே கொடுத்தது. இந்த விஷயத்தில் மெத்தனமாக இருப்பது மாநில அரசுதான்’’ என்றார்.
சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க செயலாளர் செந்தில் நாதன், ‘‘நறுமணப் பூங்காவின் நடவடிக்கைகள் மத்திய அரசு சார்ந்தவை. இதில், மாநில அரசின் மெத்தனப் போக்கு எங்கே இருக்கிறது? நறுமணப் பூங்காவுக்குத் தேவையான உதவிகளை அப்போதைய மத்திய அரசுக்கு மாநில அரசு செய்து கொடுத்திருக்கிறது. தற்போதைய மத்திய அரசும் திட்டங்களைத் துரிதமாகச் செய்கிறது. இதற்காக கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து வலியுறுத்தினால் போதுமானது. அடுத்தவர்கள் மீது பழிபோட வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது அப்போதைய மத்திய அரசும், காங்கிரஸ் நிர்வாகிகளும் அவசர அவசரமாகச் செயல் பட்டார்கள். அதன் காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால்தான் தடை நீடித்துவருகிறது. எனவே, கார்த்தி சிதம்பரம் எதிர்க்கட்சி எம்.பி-யாக இருந்தாலும், துறைரீதியான அமைச்சர்களைச் சந்தித்து, பூங்காவைத் திறக்க வழிவகை செய்ய வேண்டும். இதற்கு மாநில அரசு எவ்விதத்திலும் தடையாக இருந்ததில்லை’’ என்றார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், ‘‘இது குறித்து முதல்வரிடம் பேசியிருக்கிறோம். மீண்டும் அவரிடம் பேசுகிறேன். நறுமணப் பூங்கா திட்டத்தில் எந்தவொரு திட்டமிடலும் இல்லாமல் வெறும் கட்டடத்தை மட்டும் கட்டிவைத்துவிட்டனர். நகர் ஊரமைப்புத் துறையிடம் முறையாக அனுமதி வாங்காமல் திட்டத்தைச் செயல்படுத்தினார்கள். அதனால்தான், பூங்காவைத் திறக்க தாமதம் ஏற்படுகிறது. ஆனாலும், அ.தி.மு.க அரசு தேவையான உதவிகளைச் செய்துகொண்டுதான் இருக்கிறது’’ என்றார்.
நறுமணப் பூங்கா அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘பூங்காவுக்குக் கடந்த 2019-ல் பல்வேறுகட்ட அனுமதிகளும் பெறப்பட்டு விட்டன. பூங்கா வளாகத்தில் தனியார் நிறுவனங்கள் தொடங்க தற்போது வரை 17 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. பூங்காவில் ஏற்பட்ட பழுதுகள்கூட நீக்கப்பட்டு, திறப்பதற்குத் தயார் நிலையில்தான் இருக்கிறது. விரைவில் திறந்துவிடுவோம்’’ என்றார்கள்.
‘நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?’ என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!