Published:Updated:

`சிவகங்கையில் உள்ள பறவையினங்கள் எத்தனை தெரியுமா?'-மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஆர்வலர்கள்

அருண் சின்னதுரை
சாய் தர்மராஜ்.ச

பறவை காணுதல் தொடர்பாக சிவகங்கை பள்ளி மாணவர்களிடையே ஆர்வலர்கள் இருவர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

பறவை காணுதல்
பறவை காணுதல்

இதுபற்றிய விழிப்புணர்வு பயிற்சி வகுப்புகளை பறவைகள் நல ஆர்வலரும், மங்களூர் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவருமான அருண் குமார் திலீபன் மற்றும் சிங்கப்பூர் பறவைகள் குழு உறுப்பினரான அந்தோனி பிரான்சிஸ் ஆகியோரால், சிவகங்கையைச் சுற்றிய அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடத்தப்பட்டது.

பள்ளியில் விழிப்புணர்வு
பள்ளியில் விழிப்புணர்வு

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் அந்தோனி பிரான்சிஸ் இருவரும் விடுமுறைக்கு ஊருக்கு வரும் போது சிவகங்கையில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பறவைகள் காணுதல் குறித்து விழிப்புணர்வு செய்துவருகின்றனர்.

இதுகுறித்து அவர்களிடம் பேசினோம்.`` பறவைகள் காணுதல் தற்போது நம் நாட்டிலும் அதிகரித்துள்ளது. இப்பொழுதுபோக்கு முறையின் மூலம் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் வாழ்வியல் முறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ளமுடிகிறது.

பறவைகள் காணுதல்
பறவைகள் காணுதல்

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் கவனிக்கும் திறன் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கிறது. சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து வசிக்கும் பறவைகள் மற்றும் வலசைப் பறவைகளைச் சேர்த்து மொத்தம் 187 பறவை இனங்கள் உள்ளன.

இதில் மஞ்சள்மூக்குநாரை (Painted Stork) உயரமான நாரை இனத்தைச் சேர்ந்தது. இளஞ்சிவப்பு நிற நீளக் கால்களைக் கொண்டது. பொதுவாக ஈரநிலங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் பரவலாகக் காணப்படும்

மஞ்சள் மூக்குநாரை
மஞ்சள் மூக்குநாரை
பிரான்சிஸ்

இந்த மஞ்சள் மூக்கு நாரை பறக்கும் பொழுது தலை குனிந்த நிலையில் இருக்குமாறே பறக்கின்றன. சமீபகாலமாக சிவகங்கையைச் சுற்றிய பகுதிகளில் இதன் வரத்து அதிகரித்துள்ளது.

அதே போல் பனங்காடை (Indian Roller) என்பது ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களின் மாநிலப் பறவையாகும். நீலம் மற்றும் ஆலிவ் நிறத்தில் இருக்கும் இந்தப் பறவை சிவகங்கை மாவட்டத்தில் பரவலாகக் காணலாம்.

பனங்காடை
பனங்காடை
பிரான்சிஸ்

கிளி, மைனா போன்ற பறவைகளைப் போல் இவையும் பனைமரத்தை இருப்பிடமாகக் கொண்டுள்ளன. பொதுவாக மிகவும் அமைதியாக வலம் வரும். இனப்பெருக்கக் காலத்தில் அதிக கூச்சலை எழுப்பும். அதிகமாக வயல்வெளிகளிலும், மின் கம்பங்களிலும் அமர்ந்திருப்பதைக் காணலாம். இப்படிப் பல்வேறு பறவைகள் பற்றி மாணவர்களிடம் பேசுகிறோம். இதனால் மாணவர்களுக்கு பறவை மீது காதல் ஏற்படும் அப்போது பறவைகளை பாதுக்கவேண்டும் என சமூக நோக்கம் தோன்றும்’ என்றனர்.