Published:Updated:

சிவகாசி: தடையால் ரூ.600 கோடி பட்டாசுகள் தேக்கம் - மீண்டும் உற்பத்தியைத் தொடங்கத் தயக்கம்!

பட்டாசு
பட்டாசு

ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டதால், சிவகாசியில் ரூ.600 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்திருக்கின்றன. இதனால், மீண்டும் உற்பத்தியைத் தொடங்கத் தயங்குவதால், பட்டாசுத் தொழில் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறியதும் பெரியதுமாக 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கிவருகின்றன. தொழிற்சாலைகளுக்கு உள்ளே மூன்று லட்சம் தொழிலாளர்களும், பட்டாசு உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருள்கள் உற்பத்தியில் ஐந்து லட்சம் தொழிலாளர்களும் ஈடுபட்டுவருகின்றனர். இந்தியாவின் ஒட்டுமொத்த பட்டாசுத் தேவையில் 95 சதவிகிதத்தை சிவகாசியைச் சுற்றியிருக்கும் பட்டாசு ஆலைகளே பூர்த்தி செய்துவருகின்றன.

பட்டாசு விற்பனை
பட்டாசு விற்பனை

இந்தநிலையில், இந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவல் கட்டுப்பாடுகளால் ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி, சிக்கிம், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய ஏழு மாநிலங்களில் இம்மாதம் 30-ம் தேதி வரை பட்டாசு வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தடை உத்தரவால் பட்டாசு உற்பத்தியாளர்கள் கவலையடைந்தனர். இந்தத் தடையை நீக்கக் கோரி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் அம்மாநில முதல்வர்களுக்குக் கடிதம் அனுப்பியிருந்தனர். ஆனால், அறிவித்தபடியே தடை உத்தரவு கடைபிடிக்கப்பட்டுவருகிறது.

இந்தநிலையில், பட்டாசு வெடிக்க அறிவிக்கப்பட்ட தடையால் சிவகாசியில் ரூ.600 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கம் அடைந்திருப்பதால் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர். அத்துடன், மீண்டும் பட்டாசு உற்பத்தியைத் தொடங்க உற்பத்தியாளர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால், பட்டாசுத் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்துப் பேசிய டான்பாமா சங்கத்தின் (தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்) தலைவர் கணேசன்,``சிவகாசி சுற்றுவட்டாரத்திலுள்ள 1,070 பட்டாசு உற்பத்தி ஆலைகள் மூலம் ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி மதிப்பிலான பட்டாசுகளை உற்பத்தி செஞ்சுட்டு வர்றோம்.

பட்டாசு
பட்டாசு

இந்த வருஷம் கொரோனா ஊரடங்கால் ரூ.2,100 கோடி மதிப்பிலான பட்டாசுகளே உற்பத்தி செய்யப்பட்டன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதமே அந்த ஏழு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்பியிருந்த சுமார் ரூ.200 கோடி மதிப்பிலான பட்டாசுகள் அந்த மாநிலங்களில் விற்பனை செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன.

இந்தநிலையில், தடை உத்தரவால் அம்மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் சிவகாசியில் குடோன்களில் ரூ.600 கோடி மதிப்பிலான பட்டாசுகள் தேக்கமடைந்துள்ளன. இதனால், எங்களுக்குக் கடுமையான பொருளாதார இழப்பு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா பாதிப்புக்கும், பட்டாசு வெடிப்புக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தற்போது தடைவிதிக்கப்பட்டிருக்கும் ஏழு மாநிலங்களிலும் அடுத்து வரும் கிறிஸ்துமஸ், புதுவருடப் பிறப்பு, பொங்கல் பண்டிகை, திருமண விழாக்கள், கோயில் திருவிழாக்கள் மற்றும் அரசியல் கட்களின் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க அனுமதியளிக்க வேண்டும்.

பட்டாசு
பட்டாசு

இல்லாவிட்டால் பட்டாசு உற்பத்தியாளர்கள் மேலும் பாதிக்கப்படுவார்கள். வழக்கமாக, தீபாவளிப் பண்டிகை முடிந்த 10 நாள்களில் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு உற்பத்தியை மீண்டும் தொடங்கிவிடுவோம். ஆனால், தற்போதைய பட்டாசுத் தேக்கம் காரணமாக, உடனடியாக உற்பத்தியைத் தொடங்க உற்பத்தியாளர்கள் தயங்குகிறார்கள். எனவே, உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே மீண்டும் உற்பத்தி தொடங்குவது குறித்து முடிவு செய்ய முடியும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு