Published:Updated:

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்... பஸ்ஸை நிறுத்தி காவல் நிலையம் சென்ற டிரைவர் - என்ன நடந்தது?

பேருந்து

"மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. படிக்கட்டில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொன்னாலும்கூட மாணவர்கள் எங்களை ஏளனமாகப் பேசுகிறார்கள்." - அரசுப் பேருந்து பணியாளர்கள்.

படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம்... பஸ்ஸை நிறுத்தி காவல் நிலையம் சென்ற டிரைவர் - என்ன நடந்தது?

"மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. படிக்கட்டில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொன்னாலும்கூட மாணவர்கள் எங்களை ஏளனமாகப் பேசுகிறார்கள்." - அரசுப் பேருந்து பணியாளர்கள்.

Published:Updated:
பேருந்து

விருதுநகர் மாவட்டம், ஆமத்தூரில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில், திருத்தங்கல், மத்தியசேனை, வீர செல்லையாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தின் பல பகுதிகளிலிருந்து வரும் 300-க்கும் மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்த நிலையில், அருகேயுள்ள கிராமங்களிலிருந்து ஆமத்தூர் பள்ளிக்கு வரும் மாணவர்கள் காலையிலும் மாலையிலும் அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துவந்துள்ளனர். இதைப் பேருந்து ஓட்டுநர், நடத்துனர் கண்டித்தும் தொடர்கதையாக நடந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று மாலை, பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக ஆமத்தூர் பஸ் நிறுத்தத்தில் 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் காத்திருந்தனர்.

ஆபத்து பயணம்
ஆபத்து பயணம்

அப்போது விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் வழியாக சிவகாசி நோக்கி வந்த டவுன் பஸ்ஸில் மாணவர்கள் முண்டியடித்து ஏறியுள்ளனர். கூட்ட நெரிசலின்‌ காரணமாக பஸ் புறப்பட்ட பின்னரும்கூட, சில மாணவர்கள் ஓடிவந்து பஸ்ஸின் படிக்கட்டுகளில் ஏறி நின்று தொங்கியபடி பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, படிக்கட்டில் நின்று பயணம் செய்வதைக் கண்டித்து பஸ் ஓட்டுநரும், நடத்துனரும் மாணவர்களைச் சத்தம் போட்டுள்ளனர்.

இதனால், பள்ளி மாணவர்களுக்கும், அரசுப் பேருந்து பணியாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம்‌ எழுந்திருக்கிறது. இதனால் கோபமடைந்த பஸ் ஓட்டுநரும், நடத்துனரும் விருதுநகர்-சிவகாசி சாலையில் பஸ்ஸை நடுவழியில் நிறுத்திவிட்டு ஆமத்தூர் காவல் நிலையத்துக்கு நடந்து சென்று புகார் அளித்தனர்.

அறிவுரை
அறிவுரை

புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை சத்தம்போட்டு கீழிறக்கினர். இதைத் தொடர்ந்து பஸ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து, அந்த வழியே வந்த மற்றொரு பேருந்தின் மூலமாக கீழிறக்கி விடப்பட்ட மாணவர்களை போலீஸார் அனுப்பிவைத்தனர்.

பேருந்து
பேருந்து

முன்னதாக, அரசுப் பேருந்து பணியாளர்கள் பேசுகையில், "இந்த வழித்தடத்தில், மாணவர்களின் அட்டகாசம் தொடர்ந்து நடக்கிறது. படிக்கட்டில் பயணம் செய்வது எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொன்னாலும்கூட மாணவர்கள் எங்களை ஏளனமாகப் பேசுகிறார்கள். இன்றும், மாணவர்கள் வரம்புமீறிப் பேசியதன் விளைவாக பஸ்ஸை நிறுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது. நானே, 5-வது முறையாக இந்த வழித்தடத்தில் பஸ்ஸை நடுவழியில் நிறுத்திவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். அப்படியிருந்தும்கூட மாணவர்கள் தங்களின் உயிருக்கும், சட்டத்துக்கும், காவல்துறைக்கும்கூட பயப்படாமல் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது" என்றனர். இந்தச் சம்பவத்தால் விருதுநகர்- சிவகாசி சாலையில் பேருந்து 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்பட்டது.