Published:Updated:

`வேலையில்லை... ரேஷன் பொருள்களும் பத்தவில்லை!' - ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம்

சுரேஷ் குடும்பத்துடன்
சுரேஷ் குடும்பத்துடன்

`எலெக்ட்ரிஷியனாக இருந்த நான் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன். பல்வேறு மருத்துவம் பார்த்து கடன் ஆனதுதான் மிச்சம்'

கொரோனா வைரஸால் பெரும்பான்மையான நாடுகளில் தேசிய அளவிலான ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதில் பலர் பணிக்குச் செல்லாத சூழலால் வறுமையில் வாடுகின்றனர்.

சுரேஷ் தனது வீட்டில்
சுரேஷ் தனது வீட்டில்

ஆங்காங்கே தொண்டு நிறுவனங்களும், சமூக ஆர்வலர்களும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். ஆனாலும் உதவிகள் எல்லா இடங்களுக்கும் செல்லாததால் பலரும் கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.

இதேபோல் அரளிப்பட்டியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் 4 குழந்தைகளுடன் கஷ்டத்தை அனுபவித்துவருதாக தெரிவித்தார். இது குறித்து சுரேஷ் நம்மிடம், ``சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டிதான் என்னுடைய சொந்த ஊர்.

சுரேஷ்  குடும்பத்துடன்
சுரேஷ் குடும்பத்துடன்

எலெக்ட்ரிஷியனாக இருந்த நான் சில ஆண்டுகளுக்கு முன் விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டேன். பல்வேறு மருத்துவம் பார்த்து கடன் ஆனதுதான் மிச்சம். அதற்குப்பின் போதும் என்று வீட்டில்தான் கிடக்கிறேன். இடுப்புக்குக் கீழ் எனக்கு எதுவும் செயல்படாது.

சுரேஷ்
சுரேஷ்

3 பெண் குழந்தை, 1 பையனையும் அவர்களுடன் என்னையும் என் மனைவி பிள்ளைபோல் பாதுகாக்கிறார். இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் என் மனைவி வேலைக்குச் செல்ல முடியவில்லை. இதனால் குடும்பத்தில் ஏகப்பட்ட கஷ்டம் நிலவுகிறது. முழுமையான வீடு இல்லாத சூழலில் எல்லா கஷ்டங்களை அனுபவிக்கிறோம். அரசு சார்பாக ரேஷன் பொருள்கள் கொடுத்தாலும் எங்களுக்குப் போதவில்லை. வீட்டில் 6 நபர்கள் இருக்கிறோம். ரேஷன் பொருள்கள் பாதிநாள்கள் கூட வருவதில்லை. எனவே, உணவுக்கு மிகவும் சிரமப்படுகிறோம். எங்கள் வீட்டில் மீன், கறிகள் எடுத்ததில்லை. தற்போது காய்கறி கூட வாங்க முடியவில்லை. எனவே, இந்த இக்கட்டான சூழலில் எங்களுக்கு உதவி தேவைப்படுகிறது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு