Published:Updated:

`10 ஆய்வாளர்கள் உட்பட 270 பேர்; 4 இடங்கள்!' - கீழடியில் தொடங்கிய ஆறாம் கட்ட அகழாய்வு

கீழடி
கீழடி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணியினை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

மதுரை அருகே சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட கீழடியில் இன்று 6-ம் கட்ட அகழாய்வுப் பணி தொடங்கியது. இதைத் தலைமைச் செயலகத்திலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அகழாய்வு தொடக்க விழா
அகழாய்வு தொடக்க விழா

தமிழகத் தொல்லியல் துறை சார்பாக, கீழடியில் கதிரேசன் என்பவரின் நிலத்தில் அகழாய்வுப் பணி தொடங்கப்பட்டது. கீழடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கீழடி கண்காட்சியகம்! - இது மக்களின் வெற்றி!

5-ம் கட்ட அகழாய்வுப் பணி முடிவில் மொத்தம் 12,000-த்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கிடைத்தன. அந்தப் பொருள்கள் அனைத்தும் மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 6-ம் கட்ட அகழாய்வுப் பணி இன்று முதல் வரும் செப்டம்பர் மாதம் வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீழடி
கீழடி

6-ம் கட்ட அகழாய்வுப் பணி கதிரேசன் என்பவரது நிலத்திலும் கீழடியைச் சுற்றியுள்ள கொந்தகை, அகரம், மணலூர் உள்ளிட்ட 4 இடங்களில் நடைபெறவுள்ளது. இந்த அகழாய்வில் 10 தொல்லியல் ஆய்வாளர்கள் உட்பட 270 பேர் ஈடுபட உள்ளனர்.

இதற்கிடையில், `கீழடி தொடர்பான தொல்லியல் ஆய்வை பார்வையிட வரும் பார்வையாளர்களுக்குச் சிறப்புப் பேருந்து வசதி, கழிப்பறை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்' என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு