Published:Updated:

'வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்' - சாதக, பாதகங்கள் என்னென்ன?!

மின்வாரியம்
News
மின்வாரியம்

தமிழகத்தில் 'ஸ்மார்ட் மீட்டர்’ மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டம் வேகமெடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்ற கேள்விகள் எழுகிறது.

'வேகமெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்' - சாதக, பாதகங்கள் என்னென்ன?!

தமிழகத்தில் 'ஸ்மார்ட் மீட்டர்’ மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டம் வேகமெடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்கள் என்னென்ன என்ற கேள்விகள் எழுகிறது.

Published:Updated:
மின்வாரியம்
News
மின்வாரியம்

'ஸ்டேடிக்' மீட்டர்:

தமிழகம் முழுவதும் 3 கோடிக்கும் அதிகமான மின் இணைப்புகள் உள்ளன. விவசாயத்துக்கு முழுவதும் இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. வீடுகளைப் பொறுத்தவரை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்படும். உயர் அழுத்த மின்சாரம் மாதம்தோறும் கணக்கீடு செய்யப்படும். தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தைக் கணக்கீடு செய்ய 'ஸ்டேடிக்' என்ற மீட்டர் பொருத்தப்பட்டிருக்கிறது.

இதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் மின்சாரம் துல்லியமாகப் பதிவு செய்யப்படும். இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வீடுகளுக்குச் செல்லும் மின்வாரிய ஊழியர்கள், அதைக் கணக்கீடு செய்து நுகர்வோர்களுக்குத் தெரிவிப்பார்கள். இவ்வாறு கணக்கெடுத்த பிறகு நுகர்வோர், கட்டணம் செலுத்திவருகின்றனர்.

மின்சாரம்
மின்சாரம்

'ஸ்மார்ட்' மீட்டர்:

இந்த நிலையில் முறைகேடுகளைத் தடுக்கும் வகையிலும், மின்வாரியத்துக்குக் கிடைக்கும் வருவாயை அதிகரிக்கும் வகையிலும் 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தைச் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டிருக்கிறது. அதாவது, இந்தத் திட்டத்தின் கீழ் மீட்டரில் மின் பயன்பாடு தேதி மென்பொருள் வடிவில் பதிவேற்றம் செய்யப்படும். பிறகு தொலைத்தொடர்பு வசதியுடன் அலுவலக 'சர்வர்' உடன் இணைக்கப்படும்.

இதனால் மின் பயன்பாட்டை தானாகவே 'ஸ்மார்ட்' மீட்டர் கணக்கெடுத்துவிடும். அதற்கான கட்டண விவரம் எஸ்.எம்.எஸ் மூலம் நுகர்வோருக்கு அனுப்பப்படும். ஒருவேளை கடைசி தேதிக்குள் மின்கட்டணத்தை நுகர்வோர் செலுத்தவில்லையென்றால், மின் விநியோகம் தானாகவே துண்டிக்கப்பட்டுவிடும். பிறகு நுகர்வோர் கட்டணம் செலுத்தியதும் மீண்டும் இணைப்பு வழங்கப்படும்.

மின்சாரம்
மின்சாரம்

உயர்த்தப்பட்ட மின்கட்டணம்:

இதனால் ஊழியர்கள் வீடுகளுக்குச் சென்று கணக்கு எடுக்கப்பட வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், துல்லியமாக மின் பயன்பாடு கணக்கு எடுக்கப்படும் என்று மின்சார வாரியம் கூறுகிறது. ஆனால், தற்போது 'போஸ்ட்பெய்டு' திட்டமாக இது அறிமுகம் செய்யப்பட்டாலும், வரும் காலங்களில் 'ப்ரீபெய்டாக’ மாறக்கூடும் எனப் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர். முன்னதாக தமிழக மின்சார வாரியம் கடனில் இருப்பதாகக் கூறி, கடந்த செப்டம்பர் 10-ம் தேதி முதல் அனைத்துத் துறைகளுக்கும் மின்கட்டணத்தை உயர்த்தியது.

வீட்டு மின் விநியோகப் பிரிவில், நுகர்வோருக்கான யூனிட் அடிப்படை விலை ரூ.2.50-லிருந்து ரூ.4.50-ஆக உயர்த்தப்பட்டது. மேலும் 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தினால் 500 யூனிட் வரையில் யூனிட் ஒன்றுக்கு ரூ.6-ஆக அதிகரித்தது. இவ்வாறு ஒவ்வொரு 100 யூனிட் முதல் 1,000 யூனிட் வரையில் மின்சாரத்தின் விலை உயர்த்தப்பட்டது. இதற்கு, பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், 'ஸ்மார்ட்' மீட்டர் மூலம் மின் பயன்பாடு கணக்கெடுக்கும் திட்டம் வேகமெடுத்திருக்கிறது. இது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

மின்கட்டணம்
மின்கட்டணம்

தானாக இணைப்பு துண்டிப்பு:

இது குறித்து நம்மிடம் பேசிய பெயர் சொல்ல விரும்பாத மின்வாரிய அதிகாரி ஒருவர், "ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி வேகமாக நடந்துவருகிறது. வீடு, விவசாயம் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தச் சொல்லிவிட்டார்கள். இந்தப் பணியை 2025-ம் ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிட்டால், தற்போது மொபைலுக்கு எப்படிக் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி எஸ்.எம்.எஸ் வருகிறதோ, அப்படி மின்கட்டணத்துக்கும் எஸ்.எம்.எஸ் வரும். அந்தக் குறிப்பிட்ட நாளில் செலுத்தவில்லையென்றால் இணைப்பு தானாக துண்டிக்கப்பட்டுவிடும். விடுமுறை தினங்கள், இரவு நேரங்களில் இணைப்பு துண்டிப்பு இருக்காது. தற்போது 'போஸ்ட்பெய்டு' திட்டமாகத்தான் செயல்படுத்தச் சொல்கிறார்கள்" என்றார்.

மின்சாரம் (Representational Image)
மின்சாரம் (Representational Image)

கருத்துக்கேட்பு கூட்டம் நடத்த வேண்டும்:

இது குறித்து நம்மிடம் பேசிய மக்கள் விழிப்புணர்வு மையத்தின் செயலாளர் வி.ராமராவ், "தற்போது இந்தத் திட்டத்தை தி.நகரில் செயல்படுத்தியிருக்கிறார்கள். அதன் செயல்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கவில்லை. இதன் மூலம் மின்வாரியத்துக்குப் பணியாளர்கள் எண்ணிக்கை குறையும். ஆனால் பொதுமக்களுக்கு என்ன பயன் என்று தெரிவிக்க வேண்டும். இந்த மீட்டருக்கு ஆகும் செலவை பொதுமக்களிடமிருந்துதான் மறைமுகமாக வசூல் செய்வார்கள். எனவே, பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய பிறகுதான் மற்ற இடங்களில் செயல்படுத்த வேண்டும். பொதுமக்களிடம் அவர்கள் கலந்தாலோசிக்கவில்லை.

தன்னிச்சையாகச் செயல்படுத்துவது சரியில்லை. தமிழகத்தில் இருக்கக்கூடிய ஏழை மக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டால், அவர்களால் பணம் உடனடியாக செலுத்த முடியாது. நமது பொருளாதாரம் திட்டமிட்டு வரக்கூடியது இல்லை. கொரோனா வந்த பிறகு நிலைமை மேலும் மோசமாக இருக்கிறது. இன்னும் பொருளாதாரம் நல்ல நிலைக்கு வரவில்லை. இந்த நிலையில் இது பொதுமக்களுக்கு மேலும் பிரச்னையாகத்தான் இருக்கும். எனவே, இதையெல்லாம் கருத்தில்கொண்டு பொதுமக்கள் மத்தியில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்திய பிறகு செயல்படுத்த வேண்டும்" என்றார்.

சுப்பிரமணி
சுப்பிரமணி

பணியாளர்களின் எண்ணிக்கை குறையும்:

இது குறித்து நம்மிடம் பேசிய மின்வாரியத் தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.சுப்பிரமணி, "தற்போது வீடுகளுக்கு நேரடியாகச் சென்றுதான், மின்சாரப் பயன்பாட்டை ஊழியர்கள் கணக்கெடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் தற்போது 'ஸ்மார்ட்' மீட்டர் முழுமையாகப் பொருத்தப்பட்டுவிட்டால் தானியங்கி முறையில் மின்சாரப் பயன்பாடு கணக்கெடுக்கப்பட்டுவிடும். இதனால் அந்தப் பணியை செய்துவரும் பணியாளர்களுக்குச் சிக்கல் ஏற்படும்.

மேலும், மின்வாரியம் ஏற்கெனவே கடனில் இருப்பதாக சொல்லித்தான் கட்டணத்தை உயர்த்தினார்கள். தற்போது இவ்வாறு 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்படுவதால், அதை வாங்குவதற்கு மின்வாரியத்துக்குக் கூடுதல் செலவு ஏற்பட்டிருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதன் மூலம் எவ்வளவு வருவாய் கிடைக்கும் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். ஒரு புதிய திட்டத்தால் வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். நாடு வளர்ச்சியடைய வேண்டும். எனவே, இந்தத் திட்டத்தால் என்ன பயன் என்பதையும் விளக்க வேண்டும்" என்றார்.

ராஜேஷ் லக்கானி
ராஜேஷ் லக்கானி

ஏராளமான நன்மைகள் இருக்கின்றன:

இது குறித்து நம்மிடம் பேசிய மின்வாரியத் தலைவர் ராஜேஷ் லக்கானி, "தி.நகரைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 'ஸ்மார்ட்' மீட்டர் பொருத்தப்போகிறோம். இது அரசின் கொள்கை முடிவு. இதன் மூலம் பொதுமக்களுக்கு ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. குறிப்பாக, பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தின் அளவைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

கட்டணம் செலுத்துவதற்கு 15 நாள்கள் கால அவகாசம் தருகிறோம். அதன் பிறகு செலுத்தவில்லை என்றால்தான் இணைப்பு துண்டிக்கப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் தானியங்கி முறையில் மின் பயன்பாடு கணக்கெடுக்கப்படும். இதனால் கணக்கெடுப்பின்போது தவறு ஏற்படுவது குறையும். தற்போது 'ப்ரீபெய்டு' மீட்டருக்குத் திட்டமிடவில்லை" என்றார்.