Published:Updated:

அரசு அலுவலக பிரின்டருக்குள் பாம்பு - பீதியில் திருவள்ளூர் ஊழியர்கள்!

பிரின்டருக்குள் இருந்த பாம்பு
பிரின்டருக்குள் இருந்த பாம்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் உள்ள மின்வாரிய பிரின்டருக்குள் பாம்பு புகுந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்களில் சிலர் பாம்பை அடித்துக் கொன்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியை அடுத்த வேண்பாக்கத்தில் துணைமின் நிலைய அலுவலகம் செயல்பட்டுவருகிறது. இந்த அலுவலகத்தில் மின் உற்பத்தி மற்றும் மின் பகிா்மானக் கழகத்தின் செயற்பொறியாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதே வளாகத்தில் உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா், துணை மின் நிலையம், மின் வாரியத்தின் மின் உபகரணங்கள் சேமிப்புக் கிடங்கு ஆகியவை உள்ளன.

பாம்பு இருந்த பிரின்டர்
பாம்பு இருந்த பிரின்டர்

இந்த அலுவலகத்தில் பொன்னேரி-மீஞ்சூா் சாலையில் அடா்ந்த செடி, கொடிகள் நிறைந்து முட்புதா்கள் போல காணப்படுகின்றன. இப்பகுதியில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துகள் உள்ளன. இங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் சம்பவத்தன்று ஊழியா்கள் வழக்கம்போல் தங்கள் இருக்கைகளில் அமர்ந்து பணிகளைத் தொடங்கினர்.

இந்தநிலையில் உதவிப் பொறியாளா் அலுவலகத்தில் ஊழியா்கள் பணியைத் தொடங்கியபோது பிரின்டா் இயந்திரத்திலிருந்து சத்தம் வருவதைப் போல தெரிந்தது. மேலும் இயந்திரத்துக்குள் ஏதோ ஒன்று நெளிவதை ஊழியர்கள் பார்த்தனர். அதை உற்றுப் பார்க்கும் போது பிரின்டருக்குள் பாம்பு ஒன்று இருப்பதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்தப் பிரின்டரிலிருந்த பாம்பை வெளியேற்ற ஊழியர்கள் நீண்ட நேரம் போராடினர்.

பாம்பு
பாம்பு

இதையடுத்து ஒருவழியாக பிரின்டரில் இருந்த பாம்பு வெளியில் வந்தது. அதைச் சிலர் அடித்துக் கொன்றனர். பின்னர் இதுகுறித்து உயரதிகாரிகளுக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் கூறுகையில், ``இந்த அலுவலகத்துக்குள் அடிக்கடி விஷ பாம்புகள், விஷ ஜந்துக்கள் வருவது வாடிக்கையாக உள்ளது. உள்ளே நுழையும் பாம்புகள் அலுவலக அறையில் உள்ள பிரின்டர் என ஏதாவது ஒரு இடங்களில் பதுங்கியிருக்கின்றன. காலையில் அலுவலகத்துக்கு வரும்போது பாம்புகள், விஷ ஜந்துக்களால் தினமும் பல்வேறு சிரமங்களைச் சந்தித்துவருகிறோம். உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றனர்.

பின் செல்ல