Election bannerElection banner
Published:Updated:

மது பாட்டிலில் கிடந்த பாம்பு: அரசின் அலட்சியமா.. மகளின் பாசமா?! - அதிகாரிகள் சொல்வது என்ன?

பாட்டிலில் கிடந்த பாம்பு
பாட்டிலில் கிடந்த பாம்பு

`உயர்ந்த சரக்குகளில் இதுபோல் நடந்திருந்தால் அவர்கள் எப்படியும் அந்த கம்பெனியின் மீது வழக்குத் தொடுத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் அடித்தட்டு மக்கள். அதனை செய்ய பயப்படுவார்கள் என்பதனால் அதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்கின்றனர்’

மது பாட்டிலில் பாம்புக்குட்டி கிடந்த மதுவைக் குடித்த விவசாயி ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் அரியலூரில் பெரும் அதிர்வலைகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சரக்கு பாட்டில்
சரக்கு பாட்டில்

அரியலூரில், இது போன்று சம்பவம் நடப்பது ஒன்றும் புதிதல்ல.. கடந்த ஆண்டு அரசு மதுபான கடையில் வாங்கிய மது பாட்டிலில் 'அரணை' ஒன்று இறந்து கிடந்தது. அதற்கு முந்தைய ஆண்டு 'நத்தை ஓடு' கிடந்தது என தொடர்ந்து கொண்டிருக்கிறது என்றும், அதுவும் தினக்கூலிகள் குடிக்கும் ரூ.145 மதிப்பிலான பாட்டில்களிலும் கிராமப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மட்டுமே இப்படித் தொடர்ந்து நடப்பது எப்படி என்று சந்தேகத்தை எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

என்ன நடந்தது என விசாரித்தோம்...

மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வீட்டிற்கு வந்த சுரேஷிடம் பேசினோம், "அரியலூர் அருகேயுள்ள இரும்புலிக்குறிச்சி தான் என்னோட சொந்த ஊரு. சுத்தமல்லியில உள்ள எனது மாமனார் வீட்டுல தங்கி, நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செஞ்சிட்டு வர்றேன். நான் வழக்கமா மது குடிக்கிறது இல்லீங்க. கொஞ்ச நாளா குடிக்காம இருந்துட்டு புதுவருஷத்து அன்னைக்கு மத்தியான சாப்பாட்டுக்காக எங்க வீட்டுல ஆட்டுக்கறி எடுத்திருந்தோம். "இன்னைக்கு ஒரு நாள் மட்டும் குடிச்சுக்கிறேம்மா"ன்னு பொண்ணாட்டிகிட்ட அனுமதி வாங்கிட்டு என்னோட நண்பர்ககுடன் சுத்தமல்லி கிராமத்துல உள்ள அரசு டாஸ்மாக் கடையில 145 ரூபாய் கொடுத்து ஒரு பாட்டிலும், வேறு மதுவகைகளையும் வாங்கிட்டு வீட்டுக்கு போயிட்டேன்.

மது பாட்டிலில் கிடந்த பாம்பு:  அரசின் அலட்சியமா.. மகளின் பாசமா?! - அதிகாரிகள் சொல்வது என்ன?

முதல் முறை குடிச்சி முடிச்சதுமே ஒரு போன் வந்துருச்சி. போனைப் பேசி முடிச்சிட்டு வந்து ரெண்டாவது முறை ஊத்துனப்போ பாட்டிலுக்குள்ள ஏதோ கிடக்குற மாதிரி இருந்துச்சு. பாட்டிலைத் தூக்கிட்டு நல்லா உத்துப் பார்த்தேன். குட்டிப் பாம்பு ஒன்னு கிடந்துச்சு. அந்த நேரத்துல என் பக்கத்துல வந்த என்னோட மகள், "அப்பா...நீ பாம்புகிடந்த மதுவை குடிச்சிட்டேப்பா"ன்னு சொல்லி அழ ஆரம்பிச்சா. கொஞ்ச நேரத்துல எனக்கும் பதட்டம் அதிகமாயிடுச்சி. அப்புறம் அந்த பாட்டிலை எடுத்துட்டு போயி, அதே டாஸ்மாக் கடையில போயி கேட்டதற்கு "பாட்டிலுக்குள்ள நீ எதையாவது போட்டுட்டு எங்க மேல சொல்றீயா"ன்னு என்மேல திருப்ப பாத்தாங்க.

பாம்பு கிடந்த சரக்கு
பாம்பு கிடந்த சரக்கு

பாம்பு இருந்த மதுவை குடிச்சதால பதட்டமே பாதி படபடப்பு ஆக்கிடுச்சி. பக்கத்திலிருக்குற அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் முதலுதவி எடுத்துகிட்டு மேல் சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்புனாங்க. இப்ப எந்த பிரச்னையில்லாமல் வீட்டுக்கு வந்துருக்கேன். என்ன நடந்ததுன்னா அந்த பாட்டில் ரொம்ப பழைய சரக்கா இருந்துருக்கும் போல. அதுவும் பாட்டிலில் உள்ளே ஸ்டிக்கருக்கு பின்புறத்தில் பாம்பு செத்துமக்கிப் போய் ஒட்டியிருந்திருக்கிறது. இதனைக் கடைக்காரரும் கவனிக்காமல் அப்படியே கொடுத்துவிட்டார். இதனை நானும் கவனிக்காமல் வாங்கிட்டுவந்துட்டேன். இதனை முழுமையாகக் குடித்திருந்தால் என்னையும், எனது குடும்பத்தை யார் காப்பாற்றுவது. நண்பர்கள் எல்லோரும் புகார் கொடுக்கச் சொல்கிறார்கள். இவங்கள எதிர்த்துகிட்டு எப்புடிங்க என்னால இருக்கமுடியும்" என்றார் பரிதாபமாக.

சமூக ஆர்வலர் இளையராஜாவிடம் பேசினோம், “மது பாட்டிலில் பாம்பு கிடப்பது ஒன்றும் அரியலூரில் புதிதல்ல. கடந்த 2019-ம் வருசம் மணலேரி கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர், அரியலூர் பேருந்து நிலையம் அருகில் (உள்ள கடை எண் 6301 என்ற) அரசு மதுபான கடையில் (அப்போதைய விலை) ரூ.115 கொடுத்து மது வாங்கியதில் அந்தப்பாட்டிலில் அரணை கிடந்தது.

சமூக ஆரவலர் இளையராஜா
சமூக ஆரவலர் இளையராஜா

அதனைத்தொடர்ந்து, 2018ம் ஆண்டு அய்யப்பன் என்பவர் கள்ளங்குறிச்சி பகுதியில் உள்ள அரசு மதுபான கடையில் மது வாங்கியதில் அந்த பாட்டிலில் நத்தை ஓடு கிடந்தது. இது போல் தொடர்ந்து இங்கு நடந்துகொண்டிருக்கிறது. வேலைசெய்துவிட்டு உடல் அலுப்புக்காகக் குடிக்கும் தினக்கூலிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளிகள் வாங்கும் ரூ.140 சரக்கு பாட்டிலில் மட்டுமே இது போல் நடக்கிறது.

2019ம் ஆண்டு அரசுமதுபானத்தில் கிடந்த அரணை
2019ம் ஆண்டு அரசுமதுபானத்தில் கிடந்த அரணை
தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக அவரது மகள் செய்ததாக அதிகாரிகள் சொல்கிறார்களே. அப்படி என்றால் இதற்கு முன்பு நான்கைந்து சம்பவங்கள் நடந்துள்ளதே, அதுவும் அவர்களது மகள்கள் தான் செய்தார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன்.

போதைக்காக கள்ளமது வகைகளை வாங்கி அரசு மதுபானகடையில் விற்கிறார்களா என்று தெரியவில்லை. படித்தவர்கள் மற்றும் விஷயவாதிகள் குடிக்கும் விலை உயர்ந்த சரக்குகளில் இதுபோல் நடந்திருந்தால் அவர்கள் எப்படியும் அந்த கம்பெனியின் மீதோ, கவனக்குறைவாகச் செயல்பட்ட சேல்ஸ்மேன் மற்றும் அதிகாரிகளின் மீது வழக்குத் தொடுத்திருப்பார்கள். ஆனால் இவர்கள் கிராமத்து அடித்தட்டு மக்கள் என்பதால் புகார் கொடுக்க அஞ்சுகிறார்கள்.

மதுபானத்தில் கிடந்த நத்தை ஓடு
மதுபானத்தில் கிடந்த நத்தை ஓடு

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோதமா பெரம்பலூரில் போலி மதுபான ஆலை கண்டுபிடிக்கப்பட்டது. அத்தோடு, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் போலி மதுபானம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனை அதிகாரிகள் தடுக்கவேண்டும் அப்படி இல்லையென்றால் பலர் சாவிற்குக் காரணமாகிவிடுவார்கள்" என்றார் காட்டமாக.

தமிழ்நாடு மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் தலைவர் செல்லப்பாண்டியனிடம் பேசினோம், ”தமிழக அரசு புதுப்பிரியர்களின் வாழ்க்கையில் மெத்தனமாகச் செயல்படுவது தொடர்கதையாக உள்ளது. அரியலூரில் மட்டும் இது போல் நடக்கவில்லை, ஊட்டியில் வாங்கிய சரக்கு பாட்டிலில் பல்லி கிடந்தது.

மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன்
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்கத் தலைவர் செல்லப்பாண்டியன்

சென்னையில் வாங்கிய சரக்கில் தவளை கிடந்தது, இது போல் தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்காக அவரது மகள் செய்ததாக அதிகாரிகள் சொல்கிறார்களே. அப்படி என்றால் இதற்கு முன்பு நான்கைந்து சம்பவங்கள் நடந்துள்ளதே, அதுவும் அவர்களது மகள்கள் தான் செய்தார்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா?

மதுபானம்
மதுபானம்

நீங்கள் தப்பித்துக் கொள்வதற்காக இதுபோன்ற சொத்தை காரணங்களைச் சொல்லாதீர்கள். மது பாட்டிலில் பாம்பு எப்படி வந்தது? இது அரசு சரக்கு தானா, இல்லை அதிகாரிகளுடன் துணையுடன் பாரின் உரிமையாளர் டூப்ளிகேட் சரக்கை விற்கிறாரா என்ற சந்தேகம் எங்களுக்குள் எழுகிறது. சரக்கை சுரேஷ் குடித்ததில் ஏதாவது ஒன்று ஆனால் அவரது குடும்பத்தை யார் பார்ப்பது.? தமிழக அரசாங்கத்துடைய பட்ஜெட்ல ஐந்தில் ஒரு பங்கு நாங்க கொடுக்கிறோம். அதனால் குடியால் இறப்பவர்களுக்கு அரசு தான் பொறுப்பேற்கவேண்டும். எங்களுக்கு இந்த அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அத்தோடு இது போல் நடக்காமல் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் கடுமையான பின்விளைவுகளைச் சந்திக்கவேண்டியிருக்கும்" என்றார் ஆவேசமாக

எஸ்.என்.ஜே கம்பெனியின் ஏ.ஜே.எம் இளங்கோவனிடம் பேசினோம், "கண்டிப்பாக எங்கள் தரப்பில் தவறு நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பெரிய கம்பெனியில் வரிசை வரிசையாகப் பாட்டில் வரும் அதுவும் மிஷின் தான் லிக்கைரை பாட்டிலில் பிடிக்கும். அதில் சிறிய தூசியோ அல்லது இலையே கிடந்தால் மிஷினே கண்டுபிடித்துவிடும். அத்தோடு, மிஸ்டேக் கண்டுபிடிக்க ஒரு டீம்மே இருக்கிறது. இந்நிலையில்,பாம்பு குறித்த தகவல் எனக்கு வந்ததும் விசாரித்ததில் தந்தை குடிக்ககூடாதுன்னு அவரை மிரட்டுவதற்காக அவரது மகள் செய்ததாகத் தகவல் சொன்னார்கள்” என்றார்.

மதுபானம்
மதுபானம்

இதுகுறித்து கலால் துறை மாவட்ட மேலாளர் செல்வராஜ்ஜிடம் பேசினோம், "அந்த குடும்பத்தை நானே நேரில் சந்தித்துப் பேசினேன். பின்பு, அந்த லாட்டில் வந்த எஸ்.என்.ஜே ப்ராண்டை வேறுயாருக்கும் விற்கக்கூடாது என்று உத்தரவைப் போட்டிருக்கிறேன். இந்நிலையில், அந்த கம்பெனியின் அதிகாரிகள் மற்றும் டாஸ்மார்க் ஊழியர்கள் எனப் பலரிடம் விசாரணை முடிந்த பிறகு யார் மீது தவறு இருக்கிறது என்று விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறேன். அதே போல் இதற்கு முன்பு இரண்டு மூன்று சம்பவங்கள் நடந்ததாகச் சொல்கிறீர்கள் அதுகுறித்து விசாரிக்கிறேன். யார் மீது தவறு இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பேன்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு