Published:Updated:

சாத்தான்குளம்: `ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லம்மா’ -உருகிய ஸ்னோலினின் தாய்

பெனிக்ஸ் - ஜெயராஜ்
பெனிக்ஸ் - ஜெயராஜ்

“ஒத்தப் பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நித்தம் அவளோட நினைவுலயே பைத்தியமாக இருக்குற என்னோட வலி, வேதனையைவிட உங்களோட வேதனை, தவிப்பு பல மடங்கு அதிகம்” என்றார் வனிதா.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கட்சித் தலைவர்கள், சமுதாய அமைப்பினர் எனப் பல தரப்பினரும் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் ஒருவரான 17 வயது ஸ்னோலினின் தாயார் வனிதா, நேரில் சென்று ஆறுதல் கூறினார். ஜெயராஜின் வீட்டிற்குள் நுழையும்போதே கண்களில் நீர் ததும்ப நுழைந்தார் வனிதா. “நான் ஸ்னோலினோட அம்மா வனிதாம்மா… “ என வனிதா தன்னை ஜெயராஜின் மனைவி செல்வராணியிடம் அறிமுகப்படுத்தினார்.

ஆறுதல் சொன்ன வனிதா
ஆறுதல் சொன்ன வனிதா

உடனே, “உங்களை எனக்குத் தெரியும்மா. துப்பாக்கிச்சூட்டுல ஒரே பெண் பிள்ளையைப் பறிகொடுத்துட்டு, இப்போ அந்தப் பாப்பா நினைவுலயே பரிதவிச்சிக்கிட்டு இருங்கீங்களேம்மா” என செல்வராணி கண்ணீருடன் சொன்னார். இருவரும் 13 நிமிடங்கள் கையைப் பற்றிக்கொண்டு கண்ணீருடன் கலங்கினார்கள். பின்னர், ஆசுவாசப்படுத்திக்கொண்டனர். கணவருக்கும் மகனுக்கும் நடந்த கொடூரங்களை ஒவ்வொன்றாக செல்வராணி சொல்ல, `இயேசுவே.. ஆண்டவரே..’ என காதைப் பொத்தியபடி கண்ணீடருன் கேட்டார் வனிதா.

`நினைத்துக்கூட பார்க்க முடியல’

தொடர்ந்து செல்வராணியிடம் பேசிய வனிதா, “தூத்துக்குடியில ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான 100-வது நாள் போராட்டத்துல ஊர் மக்களுடன் கோஷம் எழுப்பியபடியே பதாகைகள் ஏந்தி கம்பீரமா நடந்துபோனா என் மகள். ‘காவல்துறையா ஏவல்துறையா’, ’காப்பர் உனக்கு கேன்சர் எனக்கா’ என போலீஸாருக்கு எதிராகவும் ஆலைக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினா.

வனிதா
வனிதா

போலீஸாரை எதிர்த்தே அதிக கோஷங்களை எழுப்பிய காரணத்தால் குறிவைக்கப்பட்டே, வாயில் சுடப்பட்டு துடிதுடித்து இறந்துபோயிட்டா. என் மகளாவது துப்பாக்கிக் குண்டடிபட்ட சில நிமிடங்களில் இறந்துபோயிட்டா. அவளோட வலி, வேதனை, துடிதுடிப்பு உடனே அடங்கிப்போச்சு. ஆனா, அப்பா மகன் ரெண்டு பேரையும் ராத்திரி முழுக்க வச்சு கொடூரமாத் தாக்கியிருக்காங்க போலீஸ்காரங்க. ஒவ்வொரு அடியும், பூட்ஸ்கால் மிதியும் எவ்வளவு வலிகளைக் கொடுத்திருக்கும்.

நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு ஆசனவாயில லத்திக்கம்பை விட்டு குத்தித் தாக்கியதெல்லாம் கொடூரத்தின் உச்சம். ஒத்த பிள்ளையைப் பறிகொடுத்துட்டு நித்தம் அவளோட நினைவுலயே பைத்தியமாக இருக்குற என்னோட வலி, வேதனையைவிட உங்களோட வேதனை, தவிப்பு பல மடங்கு அதிகம். கட்டுன கணவரையும், பையனையும் ஒரே நேரத்துல பறிகொடுத்த உங்களுக்கு ஆறுதல் சொல்ல எங்கிட்ட வார்த்தை இல்லம்மா. ஒரு குடும்பத்துக்கு ஆணிவேரும், பக்கவேருமா இருந்த ரெண்டு பேரின் இழப்பை ஈடுகட்ட முடியாது.

சாத்தான்குளம் காவல்நிலையம்
சாத்தான்குளம் காவல்நிலையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை தமிழகஅரசு ஒருநபர் விசாரணை ஆணையத்திடம் ஒப்படைச்சிருக்காங்க. அதேபோல, அது சம்மந்தப்பட்ட எல்லா வழக்குகளையும் சிபிஐ-க்கு மாத்திட்டாங்க. இதுல பாதிக்கப்பட்டவர்களை மட்டுமே அழைச்சு ‘என்ன நடந்துது’ன்னு விசாரணை செஞ்சிருக்காங்களே தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்கவே இல்ல. ரெண்டு வருஷத்தைத் தாண்டியும் விசாரணை எந்த நிலையில இருக்குன்னு தெரியல.

அதேமாதிரிதான், இந்த வழக்கை அவசர அவசரமா சிபிஐ-க்கு மாற்றி, சிபிஐ கையில் எடுக்கும் வரை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டிருக்காங்க. ஆனா, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தானாக முன்வந்து, இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கிட்டதுதான் மிகப்பெரிய ஆறுதல். ஆனா, அந்த விசாரணையிலயும் நீதிபதிக்கு சரியா போலீஸ் தரப்பு ஒத்துழைப்பு கொடுக்காததிலேயே, போலீஸ்காரங்க மேலதான் முழுத்தவறும் இருக்குறது நமக்கே தெரியவருது. இருந்தாலும், ‘உங்களுக்கு உரிய நீதி கிடைக்கும்’னு நீதிபதி ஆறுதல் சொன்னதை டி.வி-யில பார்த்தேன்.

ஆறுதல் சொன்ன வனிதா
ஆறுதல் சொன்ன வனிதா

அதுல எனக்கும் நம்பிக்கை வந்துச்சு. ரெண்டு பேரும் சிந்திய ரத்தத்துளிகளுக்கு நிச்சயம் நீதி கிடைச்சே தீரும். கவலைப்படாதீங்கம்மா” என்று சொன்னார். இறுதியில், ஸ்னோலின் எழுதிய கவிதைப் புத்தகத்தை செல்வராணியின் மகள்களிடம் கொடுத்துவிட்டு கிளம்பினார் வனிதா.

அடுத்த கட்டுரைக்கு