Published:Updated:

`சார் இந்த எலியை நீங்கதான் காப்பாத்தணும்...’ - ஈரோடு கலெக்டரைப் பதற வைத்த சமூக ஆர்வலர்!

இது அழிஞ்சிக்கிட்டு வர்ற இனமுன்னு சொன்னாங்க. அதை எங்க ஒப்படைக்கிறதுன்னு எனக்குத் தெரியலை. அதனாலதான் அதை ஒரு கூடையில போட்டு தூக்கிட்டு வந்துட்டேன்.

கலெக்டரிடம் எலியைக் காட்டும் சமூக ஆர்வலர்
கலெக்டரிடம் எலியைக் காட்டும் சமூக ஆர்வலர்

திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ‘மக்கள் குறைதீர்க் கூட்டம்’ கோரிக்கை மனுக்களாலும் குமுறல்களாலும் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். அத்தி பூத்தாற்போல எப்போதாவது வெடித்துச் சிரிக்க வைக்கும் காமெடிச் சம்பவங்களும் அரங்கேறும். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அதில் கொஞ்சம் ஸ்பெஷல். ‘சார் இது பெட்ரோல்னு நினைச்சு பயந்துடாதீங்க’ என மாசடைந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்துவந்து நீட்டுவதாகட்டும், ‘பக்கத்து ஊர் ஒயின்ஷாப்புக்குப் போக பஸ் விடுங்க சார்’ என்பதாகட்டும் இப்படியான மனுக்களைக் கொடுத்து கலெக்டரையே கிறுகிறுக்க வைப்பார்கள். இப்படியான டிஸைனில் நேற்றும் ஒரு சம்பவம் நடந்தது.

கலெக்டரிடம் எலியைக் காட்டும் சமூக ஆர்வலர்
கலெக்டரிடம் எலியைக் காட்டும் சமூக ஆர்வலர்

காலையிலிருந்து பொதுமக்களிடம் மனுக்களை வாங்கி களைத்துப் போன ஈரோடு கலெக்டர் கதிரவன், மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்குப் போகலாமென காரில் ஏறிக் கிளம்பினார். அந்தநேரம் பார்த்து கையில் சிறிய கூடையுடன் குறுக்கே வந்தவர், கலெக்டர் காரை தடுத்து நிறுத்தினார். ‘கையில என்னங்க கூடை!’ என கலெக்டர் இறங்கிக் கேட்பதற்கு முன்பாகவே, கூடையைத் திறந்து காட்டினார் அந்த நபர். கிரிக்கெட் பந்தின் மேல் நெருக்கமாக முள் முளைத்தது போல் ஒன்று கூடையினுள் இருந்தது.

‘நேத்து நைட் எதேச்சையா வீட்டுக்கு வெளிய வந்தப்ப இந்த முள் எலி வீட்டுக்கு முன்னாடி இருந்துச்சிங்க. இது அழிஞ்சிக்கிட்டு வர்ற இனமுன்னு சொன்னாங்க. அதை எங்க ஒப்படைக்கிறதுன்னு எனக்கு தெரியலை. அதனாலதான் அதை ஒரு கூடையில போட்டு தூக்கிட்டு வந்துட்டேன். நீங்கதான் சார் இந்த முள் எலியைக் காப்பாத்தணும் சார்’ என கலெக்டரிடம் நீட்ட, ‘ஏங்க கூடையைத் தள்ளிப் புடிங்க, மேல தாவிடப் போவுது!’ என கலெக்டர் கதிரவன் பதறிப்போனார்.

உடனே, அருகிலிருந்த வனத்துறை அதிகாரிகளை அழைத்த கலெக்டர், ‘இந்த எலியை வாங்கிப் பாதுகாப்பா எங்கையாவது விட்டுடுங்கப்பா’ எனச் சொல்லிவிட்டு அங்கிருந்து காரில் ஏரி சர்றெனக் கிளம்பிவிட்டார். அதையடுத்து அந்த எலியைக் கொண்டு வந்த நபரிடம் பேசினோம்.

கூடையில் இருந்த முள் எலி
கூடையில் இருந்த முள் எலி

“என் பேரு பழனிச்சாமிங்க. நான் ஒரு சமூக ஆர்வலர்ங்க. கொடுமுடி தாலுகா அண்ணா நகர்ல இருந்து வர்றேன். முள் எலி அழிஞ்சிக்கிட்டு வர்ற இனமுன்னு பேப்பர்ல படிச்சிருக்கேன். ஒருதடவை இதேமாதிரி ஒருத்தர் ஒரு முள் எலியை அதிகாரிகிட்ட கொண்டு வந்து ஒப்படைச்சிருக்கார். வாயில்லா ஜீவனுங்களை காப்பாத்த நினைச்சு, தப்பான ஆளுங்ககிட்ட அதை ஒப்படைக்கக் கூடாதுல்ல. கலெக்டர் கையில கொடுத்தா அது கண்டிப்பாக காப்பாத்தப்படும்னுதான் கூடையில போட்டு அதைப் பாதுகாப்பா 30 கி.மீ தூக்கிட்டு வந்தேன்” என்றார்.