இன்று, தேசிய பெண் குழந்தைகள் தினம். பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்தி, அவர்களுக்கு ஆதரவு மற்றும் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் நோக்கில், இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளின் சுகாதாரத்தை பேணிக்காக்க வலியுறுத்தும் விதமாக வேலூரில் சமூக சேவகர் தினேஷ் சரவணன், பெற்றோர் மூலம் பெண் பிள்ளைகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ஒவ்வொரு பகுதியாகச் சென்று அங்கு சில பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் மூலமாக 600 பெண் பிள்ளைகளுக்கு நாப்கின் வழங்கினார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சத்துவாச்சாரியை அடுத்துள்ள ரங்காபுரத்தைச் சேர்ந்த தினேஷ் சரவணன், ஐடி நிறுவன ஊழியர்.
மாற்றுத்திறனாளிகள், முதியவர்களைத் தேடிச் சென்று மூன்று மாதங்களுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வழங்குவது, சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு, உடை, போர்வை போன்ற அத்தியாவசியத் தேவைகளைக் கொடுத்து அரவணைப்பது என தன்னால் இயன்ற சேவைகளை செய்து வருகிறார்.
சத்துவாச்சாரியை அடுத்துள்ள பெருமுகை அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவிகளின் சுகாதார நலனுக்காக ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறையைக் கட்டிக் கொடுத்து, பலரது பாராட்டுகளையும் பெற்றவர் தினேஷ் சரவணன் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேசிய தினேஷ் சரவணன், ``பெண் பிள்ளைகளின் சுகாதாரம் பற்றி பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே சானிட்டரி நாப்கின் வழங்குகிறேன். இந்த வாரம் முழுவதும் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வழங்க உள்ளேன். கிராமப்புறங்களில் இன்னமும் மாதவிடாயின்போது பழைய துணி போன்றவற்றைப் பயன்படுத்தும் சுகாதாரமற்ற நிலையில்தான் பெண்கள் இருக்கிறார்கள். அதனால், நோய்த் தொற்றுகூட ஏற்படுகிறது. பெண் பிள்ளைகள் பாதுகாப்பில் தாய்க்கு மட்டுமே அக்கறை இருக்க வேண்டும் என்பதல்ல... தந்தையும் அக்கறை கொள்ள வேண்டும். அதனையும் சேர்த்து வலியுறுத்தியே கிராமந்தோறும் நாப்கின் வழங்குகிறேன்’’ என்றார்.