Published:Updated:

சிவகங்கை: லட்சக்கணக்கில் மதிப்பு! - வெட்டிக் கடத்தப்படும் மரங்கள்... துணை போகும் அதிகாரிகள்?

வெட்டி வீசப்படும் மரங்கள்
வெட்டி வீசப்படும் மரங்கள்

தலையாரி முதல் தாசில்தார் வரை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

சிவகங்கை மாவட்டத்தில் பல இடங்களில் மணல் கொள்ளை நடைபெற்றுவருகிறது. `நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாக மணல் கொள்ளை நடைபெறுகிறது’ என சமூக ஆர்வலர்கள் ஆதங்கப்பட்டனர். மணல் கொள்ளைக்கு அடுத்தபடியாக, மரங்களை வெட்டிக் கடத்தல் செய்வதாக பொதுமக்களும் விவசாயிகளும் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

வெட்டப்படும்  மரங்கள்
வெட்டப்படும் மரங்கள்

இந்தநிலையில் மதகுபட்டி அருகேயுள்ள அம்மன் பட்டி, சொக்கநாதபுரம் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல இடங்களில் தொடர்ந்து பல வருடங்களாக மரம் வெட்டப்படுவதாகவும், குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அதிகாரிகள் துணை போவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த நடராஜனிடம் பேசினோம். ``சொக்கநாதபுரம், அம்மன்பட்டி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நாட்டு இன மரங்கள் அடியோடு சாய்க்கப்படுகின்றன. குளத்தைத் தூர்வாருவதாக பழைமையான மரங்களை வெட்டிச்சாய்க்கின்றனர். சாலையோரங்களில் நம்பர் போட்டு குறித்த மரங்கள்கூட வெட்டிச் சாய்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது வீரபாண்டி ஊரணியில் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 80 வருட பாரம்பர்ய மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன.

கண்மாயில் மரங்கள் வெட்டப்பட்டு தடயம் அழிக்கப்பட்டிருக்கிறது.
கண்மாயில் மரங்கள் வெட்டப்பட்டு தடயம் அழிக்கப்பட்டிருக்கிறது.

லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மரங்களைக் கடத்துபவர்களுக்கு, சில ஆயிரங்களில் அபராதம் விதிப்பதால் யாரோ ஒரு கூலியின் பேரில் தண்டத் தொகை வசூலிக்கப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் தப்பவிடப்படுகிறார்கள். உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்படும் வரை தண்டத் தொகை வசூலிப்பது என்பது குற்றவாளிகளைக் காப்பாற்றும் வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே நடைபெறுகிறது.

தலையாரி முதல் தாசில்தார் வரை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தும் எந்த நடவடிக்கையு,ம் இல்லை. அதனால் தொடர்ந்து மரங்களை வெட்டும் பணி நடைபெறுகிறது. இது தொடர்பாக பல்வேறு துறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் பயன் இல்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள் மீதும், அவர்களுக்குத் துணையாக செயல்பட்ட அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.

இது குறித்து சொக்கநாதபுரம் பகுதி வி.ஏ.ஓ விவேக்கிடம் பேசினோம். ``கடந்த வாரம் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டிலுள்ள மரங்கள் வெட்டப்பட்டிருக்கின்றன. `பட்ட மரங்கள்’ என ரசீது போட்டு, பச்சை மரங்களை வெட்டியிருக்கிறார்கள். இது குறித்து ஆர்.ஐ-யிடம் புகார் தெரிவித்தபோது, அவர் மேலிடத்துக்கு ஃபார்வேட் செய்திருக்கிறார். மேலும், இது நெடுஞ்சாலைத்துறை கீழ் வருவதால், இந்த விஷயத்தில் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள். நான் பணிக்குச் சேர்ந்து இரண்டு மாதங்கள்தான் ஆகின்றன. எனவே, வீரபாண்டி ஊரணி மரங்கள் குறித்து எனக்குத் தெரியவில்லை” என்றார்.

மரங்கள்
மரங்கள்

இது குறித்து காளையார்கோவில் பகுதி பி.டி.ஓ-விடம் பேசியபோது ``வீரபாண்டி ஊரணியில் மரம் வெட்டியது குறித்து ஆவணங்களைப் பார்த்தால்தான் சொல்ல முடியும். அங்குள்ள மரங்களை வெட்ட வி.ஏ.ஓ-வும் ஆர்.ஐ-யும்தான் அனுமத்தித்திருக்கிறார்கள். இருந்தாலும், ஆவணங்களைப் பார்த்த பிறகு விரிவான தகவல் தருகிறேன்” என்றார்.

அடுத்து, சிவகங்கை தாசில்தாரிடம் பேசினோம். ``சொக்கநாதபுரம் அம்மன்பட்டி பகுதியில் மரங்கள் வெட்டுவது குறித்து அந்தப் பகுதி ஆர்.ஐ-யை கண்காணிக்கச் சொல்லியிருக்கிறேன். பச்சை மரங்கள் வெட்டுவது தெரியவந்தால் உடனே காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

அம்மன்பட்டி, சொக்கநாதபுரம் பகுதியில் தொடர்ந்து மரம் வெட்டப்படுவதாகக் குற்றச்சாட்டு இருக்கிறது. எனவே, அதிகாரிகள் விசாரணை ஒருபக்கம் இருந்தாலும், நீதிமன்றம் தலையிட்டு ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அடுத்த கட்டுரைக்கு