Published:Updated:

பசியால் வாடிய குடும்பத்துக்கு உதவி! -கொரோனா காலத்தில் தோள் கொடுத்த சமூக ஆர்வலர்கள்

சுரேஷ் குடும்பத்துடன்
சுரேஷ் குடும்பத்துடன்

உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கிக் கிடந்த சிவகங்கை குடும்பத்துக்கு, சமூக ஆர்வலர்கள் உதவி செய்த விஷயம் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் அரளிப்பட்டியைச் சேர்ந்தவர் சுரேஷ். எலெக்ட்ரிஷியனாக பணி செய்து வந்தவர். சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விபத்தில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துவிட்டார். உடல் நிலை பாதித்து இடுப்புக்கு கீழே எதுவும் செயல்படாமல் போக வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

நிவாரண பொருட்கள்
நிவாரண பொருட்கள்

சிறுநீர் கழிப்பதில் கூட சிரமம் அடைந்துள்ள சுரேஷையும் அவர்களுடைய 4 குழந்தைகளையும் சுரேஷின் மனைவி கூலி வேலைக்குச் சென்று காப்பாற்றிவந்தார். இந்த நிலையில், கொரோனா நேரத்தில் அவரின் மனைவியும் வேலைக்குச் செல்ல முடியாத சூழலில் சிரமம் அடைந்தனர். இதை விகடன் இணையத்தில் - `வேலையில்லை... ரேஷன் பொருள்களும் பத்தவில்லை!' - ஊரடங்கால் கண்ணீர்விடும் குடும்பம்" என்ற தலைப்பில் செய்தியாக வெளியிட்டோம். இந்த நிலையில், இந்தச் செய்தியைத் தொடர்ந்து சுரேஷுக்கு பல்வேறு நபர்கள் நிவாரணப் பொருள்கள் மற்றும் பண உதவிகளைச் செய்துவருகின்றனர்.

இது குறித்து சுரேஷ் நம்மிடம், ``விகடனில் செய்தி வெளிவந்ததைத் தொடர்ந்து பலரும் எனக்கு போன் செய்து ஆறுதல் தெரிவித்தனர். கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள் அமைப்பும், ஒன் ஸ்டெப் டிரெஸ்ட்டும்" இணைந்து 5,000 ரூபாய் மதிப்புள்ள மளிகைப் பொருள்களும் 5,000 ரொக்கப் பணமும் வழங்கினர்.

மருத்துவர் குமரேசன்
மருத்துவர் குமரேசன்

மேலும், கர்த்தாரில் வசிக்கும் வந்தவாசியைச் சேர்ந்த மலர்விழி - பிரகாஷ் குடும்பத்தினர் 10,000 பணத்தை பேங்க் அக்கவுன்ட்டுக்கு அனுப்பியுள்ளனர்.

மேலும், சிவகங்கை மாவட்ட தி.மு.க மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் குமரேசன் என் உடல்நிலையை பரிசோதனை செய்துவிட்டு மருத்துவ உதவிகள் செய்வதாகவும், என்னுடைய குழந்தைகளுக்கு கல்விக்குத் தேவையான உதவிகளை ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

திவ்யாபிரபு
திவ்யாபிரபு

மேலும், நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையர் சரவணன், சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சத்யா, சிங்கம்புணரி அ.தி.மு.க., ஒன்றியத்தை சேர்ந்த திவ்யா பிரபு, தி.மு.க-வைச் சேர்ந்த கதிர்காமு உள்ளிட்டோர்களும் எனக்கு உதவிகள் செய்தனர். கொரோனா காலத்தில் பசியால் வாடிய என் குடும்பத்துக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு