Published:Updated:

`சிரமத்தைக் கடந்து உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது!" - கொரோனா பாதிப்பில் மிளிர்ந்த உள்ளங்கள்

அரிசி மூடைகள்
அரிசி மூடைகள்

``உதவி செய்வதில் சிரமம் இருந்தது. ஆனால், அதைக் கடந்து உதவி செய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.''

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருந்து சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த ஒத்துழைக்குமாறு மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளன.

வாகனத்தில் விநியோகம்
வாகனத்தில் விநியோகம்

அரசு நிகழ்வுகள் உட்பட பல்வேறு முக்கிய நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவால் பலரும் பணிக்குச் செல்லாமல் வறுமையில் வாடுகின்றன. அரசு சார்பாக ஒரு பக்கம் உதவி ஏற்பாடு செய்தாலும் சமூக ஆர்வலர்கள் மற்றொரு பக்கம் கைகோத்து உதவி செய்துவருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களும் காவல்துறையினரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 கிராமங்களுக்கு இப்பகுதியைச் சேர்ந்த நகரத்தார்கள் அரிசி மற்றும் பருப்பு வழங்கி தேவையை உணர்ந்து உதவி செய்துள்ளனர். இதனால் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.

இது குறித்து டாக்டர் குமரப்பன் நம்மிடம், ``கண்டவராயன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 5 கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு ரேஷன் கார்டு அடிப்படையில் 5 கிலோ அரிசி மற்றும் அரைக் கிலோ துவரம் பருப்பு வழங்கினோம்.

வீடுகளுக்கு சென்று
வீடுகளுக்கு சென்று

கண்டவராயன்பட்டியைச் சேர்ந்த நகரத்தார் நண்பர்கள் காலத்தின் அவசியம் கருதி இந்த உதவியைச் செய்தோம். உதவி செய்யலாம் என்று நினைத்தது எளிமையாக இருந்தது. ஆனால், அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பல்வேறு சிக்கல் இருந்தது. அரிசி, பருப்பு கொண்டுவரும் வாகனங்களுக்கு அனுமதி வாங்க 2 நாள்கள் அலைய வேண்டியதாகிவிட்டது.

டிரைவருக்கு ஆர்.சி. புக் இன்ஷூரன்ஸ், லைசென்ஸ் ஜெராக்ஸ் என்று எல்லாத்தையும் ஒப்படைக்கச் சென்ற நேரத்தில் சிவகங்கை மாவட்டத்தில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாக தகவல் வந்ததைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த வேலையில் பிசியாகிவிட்டார்கள். பிறகு அவர்கள் வரும்வரை காத்திருந்து அனுமதிச் சீட்டு வாங்கினோம். அரிசி மற்றும் பருப்புகள் விலை கூடுதலாக இருந்தாலும் மொத்தமாக கொள்முதல் செய்வதால் பொருள்களையும் சிரமப்பட்டுதான் வாங்கினோம். இப்படி தொட்டதெல்லாம் குட்டி, குட்டி பிரச்னைகளாக மாறியது.

முதல் நபருக்கு கொடுத்தபோது
முதல் நபருக்கு கொடுத்தபோது

ஒருவழியாக பொருள்களை வாங்கி சுமார் 1000 நபர்களுக்கு அரிசி மற்றும் பருப்புகளை வழங்கினோம். எங்களிடம் இருந்த குறிப்பிட்ட அளவு மாஸ்க்கையும் வழங்கினோம். அப்போது சிலரிடம் பேசியபோது. ``வேலைக்குச் செல்லவில்லை என்பதால் வீட்டில் உள்ள பானைகளை அடகு வைத்து குடும்பத்தை நடத்துகிறோம். இந்த உதவி எங்களுக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது" என்று எங்களை நெகிழ்ச்சியடையச் செய்தனர். பல்வேறு பிரச்னைகளைக் கடந்து உதவி செய்தாலும், அவர்களை மனநிறைவு செய்தது ஆத்மார்த்தமான பணி என்று தோன்றியது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு