திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே நஞ்சராயன் குளம் உள்ளது. சுமார் 440 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் இந்தக் குளம் பறவைகளின் சொர்க்கம் ஆகும். சுமார் 180 -க்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு காணப்படும். வலசை காலகட்டத்தில் மிக மிக அரிதான பறவை இனங்கள் வந்து செல்லுகின்றன.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதன் காரணமாக தமிழ்நாடு அரசு நஞ்சராயன் குளத்தை பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. ஆனால் நஞ்சராயன் குளம் சுகாதார சீர்கேடு, ஆக்கிரமிப்பு என்று பல்வேறு பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறது.
குளத்தில் கட்டப்பட்ட சுத்திகரிப்பு மையம் கூட முறையாக செயல்படுவதில்லை. இதுகுறித்து பசுமை விகடன் இதழில் விரிவான கட்டுரை வெளியிட்டிருந்தோம். இதையடுத்து, பல்வேறு தன்னார்வலர்கள், விவசாயிகள், சுற்றுசூழல் ஆர்வலர்கள் இணைந்து, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம் என்று ஓர் அமைப்பைத் தொடங்கியுள்ளனர்.

நஞ்சராயன் குளத்தை மீட்டெடுக்கும் வகையில் செயல்பட உள்ள இந்த இயக்கத்தின், முதல் ஆலோசனைக் கூட்டத்தை நாளை நடத்த உள்ளனர்.
இதுகுறித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈசன், “181 பறவை இனங்கள், 40 வகை பட்டாம்பூச்சிகள், 76 வகை தாவரங்கள், 11 வகை நீர்வாழ் உயிரினங்கள், மற்றும் 16 வகை பூச்சி இனங்களுக்கு வாழிடமாகவும், வெளிநாட்டு பறவைகள் வலசை வந்து செல்லும் இடமாகவும் அந்தக் குளம் உள்ளது.

800 ஆண்டுகளுக்கு மேலாக இந்த குளம் இயங்கி வருகிறது, 40 ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பகுதி மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மிகப்பெரிய நீராதாரமாகவும் இந்த குளம் விளங்கி வந்தது.
குளக்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளி, கரையிலிருந்து சாலை வரை நீர்வழிப் பாதைகளை மறித்து கட்டுமான பணிகளை செய்து வருகிறது. தனியார் கல்வி நிறுவனத்துக்கு விற்கப்பட்ட நில விற்பனையை தமிழ்நாடு அரசு ரத்து செய்து, அந்த இடத்தை ஓடை புறம்போக்கு ஆக வகைப்பாடு செய்ய வேண்டும்.

பறவைகளும், பட்டாம்பூச்சிகளும், நீர்நிலை உயிரினங்களும் வாழ்வதற்கான இடமாக இதை உருவாக்க வேண்டும். இதுதொடர்பாக சட்டப் போராட்டங்கள் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம் “என்றார்.