Published:Updated:

`திருச்சி சந்தைக்குள் நுழைந்த கோயம்பேடு நபர்!' - கூட்ட நெரிசலால் பதறும் சமூக ஆர்வலர்கள்

திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தை
திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தை

கொரோனா பரவுவதைத் தடுத்திடும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் கோயம்பேடு வியாபாரிகள் படும் அவஸ்தைகளைப் பார்த்தும்கூட திருச்சி வியாபாரிகள் திருந்தவில்லை என்கிற வேதனைக் குரல் எழுகிறது.

ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி வணிக வளாகம் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட். இங்கு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் காற்றில் பறக்கவிட்டதால், பலருக்கும் கொரோனா பரவியது. இதன் காரணமாக தற்போது கோயம்பேடு வணிக வளாகம் மூடப்பட்டுள்ளது. தொடர்ந்து, அங்கு பணியாற்றிய தொழிலாளர்கள், சொந்த ஊர் திரும்பியதால், அவர்கள்மூலம் நோய்த்தொற்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பரவி வருகிறது. இதனால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது. நிலைமை இப்படியிருக்கத் திருச்சி காய்கறி மார்க்கெட்டில் தனிமனித இடைவெளியைத் துளியும் கடைப்பிடிக்கப்படுவதில்லை எனும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயம்பேடு கற்பிக்கும் பாடம்..!

தமிழகத்தின் முக்கிய காய்கறிச் சந்தையாகத் திருச்சி காந்தி மார்க்கெட் விளங்குகிறது. இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள சூழலில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருச்சி காந்தி மார்க்கெட் மூடப்பட்டது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தை
திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தை

தொடர்ந்து, காய்கறி மொத்த விற்பனைக்காக இரவு நேரங்களில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையிலுள்ள பால்பண்ணை பகுதியில் தற்காலிகச் சந்தை செயல்பட்டுவந்தது. இங்கேயும் மொத்த வியாபாரிகளுடன், சில்லறை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் படையெடுத்ததால் கூட்டம் களைகட்டியது. அதையடுத்து, மாவட்ட நிர்வாகம் அதை மூடியது.

பிறகு கடந்த 26-ம் தேதி முதல் திருச்சியில் மொத்த காய்கறி சந்தை பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் செயல்பட்டு வருகிறது. முன்னதாக திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் ஜி கார்னர் காய்கறிச் சந்தையில் பொதுமக்களுக்கு காய்கறி வழங்குவதை நிறுத்துவது என்றும் சில்லறை வியாபாரிகள் என அடையாளம் காட்டப்பட்டவர்களுக்கு மட்டுமே காய்கறிகளை விற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

தொடர்ந்து, இந்த முடிவுகளை மீறிச் செயல்படும் மொத்த காய்கறி வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் காய்கறி சந்தையை இழுத்து மூடுவோம் என மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஜி கார்னர் காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் மட்டும்தான் காய்கறிகளை வாங்கி, மாநகரில் 8 இடங்களில் செயல்படும் தற்காலிக காய்கறிச் சந்தையில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இப்படியிருக்க, ஆலோசனைக் கூட்ட முடிவுகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டு மீண்டும் திருச்சி ஜி.கார்னர் சந்தைக்கு சில்லறை வியாபாரிகள் மட்டுமல்லாமல், பொதுமக்கள் மற்றும் திடீர் வியாபாரிகளால் கூட்டம் அதிகரித்துள்ளது. இவர்கள் யாரும் தனிமனித இடைவெளியைத் துளியும் கடைப்பிடிப்பதில்லை. முகக்கவசம் கூட அணியாமல் ஹாயாக வலம் வருகிறார்கள். இங்கு அரசின் உத்தரவுகளைத் துளியும் மதிக்கவில்லை.

மருத்துவப் பரிசோதனை!

தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரிந்த பலருக்கும் கொரோனா தொற்று பரவியுள்ளது. அதேபோல் திருச்சி கார்னர் காய்கறி மார்க்கெட்களிலும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என அச்சம் நிலவுகிறது.

திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தையில்  மருத்துவ பரிசோதனை
திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தையில் மருத்துவ பரிசோதனை
DIXITH

இப்படியிருக்க, திருச்சி பொன்மலை ஜி கார்னர் சந்தைக்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்றவர் வந்திருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மூன்று மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொண்ட மருத்துவக் குழுவினர் திருச்சி ஜி கார்னர் காய்கறிச் சந்தைக்கு வருகிறவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை நடத்தி வருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்படுகிறது. சுழற்சி முறையில் இப்படி மருத்துவப் பரிசோதனை நடத்துவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு