Published:Updated:

`கரூர் காவிரியில் குளிக்க நினைப்பவர்களா நீங்கள்?' -அதிர்ச்சி கொடுக்கும் அபாயக் குழிகள்

காவிரியில் மணல் அள்ளப்பட்ட பள்ளம்
காவிரியில் மணல் அள்ளப்பட்ட பள்ளம்

காவிரியில் ஓடும் தண்ணீருக்கு அடியில் இருக்கும் மணல் அள்ளிவிடப்பட்ட குழிகள் அபாயத்தை ஏற்படுத்தக் காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மணல் அள்ளிய குழிகள் மரணக்குழிகளாக மாறக்கூடிய அபாயம் உள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஓடும் காவிரியில் மொத்தம் 9 இடங்களில் புதைமணல், சுழல் உள்ளிட்ட ஆபத்துகள் இருப்பதால், அவை குளிப்பதற்குத் தடை செய்யப்பட்ட பகுதியாக, பொதுப்பணித்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ``இது குறைவான எண்ணிக்கை. உண்மையில் கரூர் காவிரியில் நடந்து வந்த கணக்குவழக்கில்லாத மணல் கொள்ளையால், 100-க்கும் மேற்பட்ட இடங்கள் ஆபத்து நிறைந்த பகுதிகளாக மாறியிருக்கின்றன" என எச்சரிக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

காவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்
காவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்

கர்நாடகா தொடங்கி, பூம்புகார் வரை பாயும் காவிரியில், அதிகம் மணல் கொள்ளை நடப்பது கரூர் மாவட்டத்தில் பாயும் காவிரியில்தான். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று கணக்கில்லாமல் கரூர் மாவட்ட காவிரியில் பல இடங்களில் மணலை பல அடி ஆழத்துக்கு சுரண்டி எடுத்துவிட்டார்கள். கரூர் மாவட்டத்தில் காவிரி கிட்டத்தட்ட 70 கிலோமீட்டர் தூரத்துக்கு ஓடுகிறது.

`இந்த 70 கிலோமீட்டர் தூரத்தில், கரூர் மாவட்ட காவிரியில் மணல் அள்ளாத இடங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்' என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். தமிழக அரசே இங்கு பத்து இடங்களில் மணல் குவாரிகள் அமைத்து, மணலை அள்ளியது.

காவிரி
காவிரி
நா.ராஜமுருகன்

இயற்கை ஆர்வலர்கள் பலர் நடத்திய தொடர் போராட்டம் காரணமாக, அந்தக் குவாரிகளை தமிழக அரசு இழுத்து மூடியது. இருந்தாலும், ஆளுங்கட்சியினர் பலர் தொடர்ந்து மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும், இந்தக் கொரோனா வைரஸ் லாக்டௌன் காலத்தில், கணக்கு வழக்கில்லாமல் கரூர் மாவட்ட காவிரியில் மணல் கொள்ளையை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

காத்திருக்கும் ஆபத்து:

காவிரியில் நடந்த தொடர் மணல் கொள்ளையால், பல இடங்களில் பல அடி ஆழத்துக்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. கடந்த 12-ம் தேதி பாசனத்துக்காக காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. கரூர் காவிரியில் இப்போது தண்ணீர் அதிகமாகப் போகிறது. இந்தச் சூழலில், காவிரியில் பலரும் ஆர்வமாக குளிக்க வருகிறார்கள். அவர்களுக்கு, காவிரியில் ஓடும் தண்ணீருக்கு அடியில் இருக்கும் மணல் அள்ளிவிடப்பட்ட குழிகள் அபாயத்தை ஏற்படுத்த காத்திருப்பதாக சொல்லப்படுகிறது. மணல் அள்ளிய குழிகள் மரணக்குழிகளாக மாறக்கூடிய அபாயம் உள்ளது. இதுகுறித்து, நம்மிடம் பேசிய பா.ம.க கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் பாஸ்கரன்,

 பாஸ்கரன்
பாஸ்கரன்

``காவிரியில் முதலை ஆபத்து இல்லை. ஆனால், மணல் அள்ளிய குழிகளால் அங்கே குளிப்பவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. காவிரியில் 3 அடி மட்டுமே மணல் அள்ள வேண்டும் என்ற விதிகள் இருக்கு. ஆனால், அரசே விதிகளை மீறி பல இடங்களில் 40 அடிகள் வரை மணல் அள்ளி குழிகளை ஏற்படுத்திட்டாங்க. அந்தக் குழிகளின் மீது தண்ணீர் போகும்போது, அந்தக் குழியில் லேசான மணல் சூழும். ஆனால், அந்த இடத்தில் கால் வைத்தால், அழுத்தமான தரையாக இருக்காது. கரைகளின் ஓரத்தில் இப்படி குழிகள் இருப்பதால், குளிப்பவர்கள் அங்கே போகும்போது, அந்த புதைமணல் அவர்களை உள்ளிழுத்துக் கொள்கிறது. எவ்வளவு பெரிய நீச்சல் வீரராக இருந்தாலும், இந்தப் புதைமணலில் சிக்கினால், உயிர் பிழைப்பது கஷ்டமே.

`30 அடி ஆழ மரணக்குழி.. உறிஞ்சப்படும் காவிரி நீர்!' - சர்ச்சையில் புகளூர் அரசு காகித ஆலை

இப்படி, கடந்த வருடம் கட்டிப்பாளையம் அருகே 6 பேர் இறந்தாங்க. பெட்டவாய்த்தலையில் ஒரே நேரத்தில் 13 பேர் இறந்தாங்க. கடந்த 20 வருடங்களில், கரூர் மாவட்டத்தில் மட்டும் 500 பேர் இப்படி புதைமணலில் சிக்கி இறந்திருக்காங்க. காவிரியின் அமைப்பு, போக்கைத் தெரிந்த உள்ளூர்வாசிகளின் உயிரையும் காவிரி குடிக்கத் தொடங்கியிருப்பதுதான், அதிர்ச்சியைத் தருது.

காவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்
காவிரியில் மணல் அள்ளப்பட்ட மரணப்பள்ளம்
நா.ராஜமுருகன்

அதுக்கு காரணம், இங்கு நடக்கும் மணல் கொள்ளைதான். இதனால், கரூர் மாவட்ட காவிரியில் மட்டும் குறைந்தபட்சம் 100 இடங்கள் அபாயப்பகுதியாக மாறியிருக்கிறது. ஆனால், காவிரியில் நடக்கும் மணல் கொள்ளையை மறைக்க பொதுப்பணித்துறையினர், 9 இடங்கள் மட்டும் ஆபத்தானவை என்று குறைத்துக் காட்டியிருக்கிறார்கள்.

அதனால், மக்களும், கல்லூரி, பள்ளி படிப்பு படிக்கும் மாணவர்களும் விழிப்புணர்வோடு காவிரியில் ஆபத்தான பகுதிகளில் குளிப்பதை நிறுத்திக்கணும். இல்லைன்னா, இந்த வருடமும் காவிரியில் விபத்துகள் ஏற்பட்டு, உயிர்கள் போவதை தடுக்க முடியாது" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு