கொரோனா பெருந்தொற்றால் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரத்து செய்யப்பட்ட கிராமசபைக் கூட்டம், அக்டோபர் 2-ம் தேதியான நாளை (சனிக்கிழமை) தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ``கிராமசபையால் யாருக்கு லாபம் விவாதிக்கலாம் வாங்க...” என்ற தலைப்பில் கடந்த நேற்று மாலை 6 மணி முதல் 7.30 மணி வரை நேரலைப் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 206 பேர் கலந்து கொண்டனர். தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார்சிவா, நீடித்த வளர்ச்சிக்கான சமூக செயற்பாட்டாளர் இளங்கோவன் மற்றும் திண்டுக்கல் காந்திகிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் பழனிதுரை ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

முதலாவதாகப் பேசிய தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் நந்தகுமார்சிவா, ``கிராமசபைக் கூட்டத்தால் விவசாயிகள், பெண்கள் எனச் சாமானியர்களுக்குத்தான் லாபம் என நினைத்துதான் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
கொரோனா என்ற வார்த்தையை நாம் கேட்பதற்கு முன்னதாக, கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 26-ல் நடந்த கிராம சபைக்குப் பிறகு வரும் அக்டோபர் 2-ம் தேதிதான் மீண்டும் கூட்டம் கூட இருக்கிறது. கொரோனா தொற்றுப் பரவல், பாதிப்பு, உயிரிழப்புகள் எனப் பல இன்னல்களைத் தாண்டிதான் இந்தக் கிராம சபையானது கூட இருக்கிறது.
எனவே, கொரோனா பரவல் மட்டுமல்ல, மழை போன்ற பேரிடர் காலங்களில் எப்படி நடந்துகொள்ள வேண்டும், என்ன மாதிரியான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றிக் குழுவாக இணைந்து செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்க வேண்டும். மாநகராட்சிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 28 பேரூராட்சிகள், நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இப்படியாக நகரமயாமாகும் மாநிலமாகத் தமிழகம் இருக்கிறது. நகரமாதல் அதிகமாவதால் ஏற்படும் சவால்கள் குறித்து நிச்சயம் விவாதிக்க வேண்டும்.

நகராட்சியாகவோ, மாநகராட்சியாகவோ தரம் உயர்த்தப்படும்போது அருகில் உள்ள ஊராட்சிப் பகுதிகள் வலுக்கட்டாயமாக நகராட்சி, மாநகராட்சிகளின் எல்லைக்குள் இணைக்கப்படுகின்றன. இதனால், கிராமங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே போகிறது. நகராட்சி, மாநகராட்சியுடன் இணைய விருப்பம் இல்லாத கிராமங்கள் கிராமசபைக் கூட்டத்தில் இதைத் தீர்மானமாக நிறைவேற்றலாம். நெல்கொள்முதல் நிலையங்களில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வருகின்றன.
நெல் அறுவடை நேரத்தில் மட்டுமே இதைப்பற்றிப் பேசாமல், நமது பகுதிகளில் இருக்கும் நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் பயனுள்ளதாக மாற்ற வேண்டும் என்பது குறித்து விவாதிக்கலாம். மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை டெல்லியில் நடக்கின்ற போராட்டமாகப் பார்க்காமல், அந்தச் சட்டங்களில் உள்ள பாதிப்புகள் குறித்தும், விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் மக்கள் மத்தியில் விளக்கிப் பேசலாம்” என்றார்.

நீடித்த வளர்ச்சிக்கான சமூக செயற்பாட்டாளரும் கிராம தன்னாட்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவருமான இளங்கோவன், ``கேரள மாநிலத்தில் கிராம சபை, வார்டு சபை, தெருச்சபை என உருவாக்கி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த இந்த சபைகளில் அப்பகுதி மக்கள் கலந்துகொண்டு கிராம வளர்ச்சி குறித்து திட்டமிட்டார்கள், விவாதித்தார்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டார்கள். அதில் வெற்றியும் பெற்றார்கள். தமிழகத்தில் கிராமசபையைப் பற்றி தற்போது மக்கள் மத்தியில் அதிக விழிப்புணர்வு உள்ளது.
கிராமசபைக் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடம் மேலோங்கியுள்ளது. கிராமசபையில் அந்தந்தப் பஞ்சாயத்துகளின் வளர்ச்சிக்கான திட்டம் வகுக்க வேண்டும். அந்தந்த கிராமங்களில் கிராமசபை நடத்துவது ஒருபக்கம் இருந்தாலும், ஒன்றுக்கொன்று தொடர்புடைய 6 அல்லது 7 கிராமங்களை ஒன்றிணைத்து, அந்தந்த பஞ்சாயத்து தலைவர்கள், உறுப்பினர்களையும் ஒன்றிணைந்து குறு வட்டமாக்கி 5 ஆண்டுகளுக்குள் வளர்ச்சி அடையச் செல்வதற்கும், முன்மாதிரி பஞ்சாயத்துகளாக மாற்றுவது குறித்தும்கூட விவாதிக்கலாம்” என்றார்.
அடுத்ததாகப் பேசிய திண்டுக்கல், காந்திகிராமிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரான பழனிதுரை, ``இந்தியாவிலேயே சமூக மேம்பாட்டில் முனைப்புடன் செயல்பட்டு வரும் மாநிலம் என்றால் அது கேரளாதான். கல்வி, மருத்துவம் ஆகிய இரண்டும்தான் இதற்கு முக்கியக் காரணம். கிராம சபையைப்பற்றி 25 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் கிராம சபையைப் பற்றி பரவலாகப் பேசுகிறோம்.

ஆனால், நான் நடத்திய ஆய்வுகளில் தமிழகத்தின் மொத்த கிராமங்களில் கிராமசபையைப் பற்றியான புரிதல் தலைவர்களுக்கோ, உறுப்பினர்களுக்கோ 10 சதவீதம் பேருக்கு இருந்தால் அது பெரிய விஷயமாகத் தெரிந்தது. இதுதான் எதார்த்தமான உண்மை. அரசியல் சாசனத்தால் உருவாக்கப்பட்ட மக்களின் பாராளுமன்றம்தான் கிராமசபை. பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டும் தீர்மானங்களை எப்படி மாற்ற முடியாதோ அதைப்போல, கிராமசபைக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ரத்து செய்யவோ, மாற்றவோ முடியாது. கிராமசபை என்பது வெறும் கூடிக்கலையும் கூட்டமல்ல என்ற புரிதல் மக்களுக்கு நிச்சயம் தேவை. மக்களுக்குத் தெரியவில்லை என்றால் அந்தப் கிராமசபையின் தலைவர் அதை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்” என்றார்.