Published:Updated:

திருவாரூர்: `இடிந்து விழுந்த கமலாலயக் குளக்கரை சுற்றுச்சுவர்' - ஆதங்கப்படும் சமூக ஆர்வலர்கள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
இடிந்து விழுந்த  குளக்கரை சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த குளக்கரை சுற்றுச்சுவர்

`தமிழக அரசு, வல்லுநர் குழுவை அமைத்து, பாதாள சாக்கடையின் உள்கட்டுமானங்கள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும்' - சமூக ஆர்வலர்கள்

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள பலநூறு ஆண்டுகள் பழமையான சுவர் இடிந்து விழுந்திருப்பது, அப்பகுதி மக்களையும், கோயில் பக்தர்களையும் கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. சுமார் பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கு அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டின் காரணமாகவே, தற்போது இந்த சுவர் இடிந்து விழுந்திருப்பதாக ஆதங்கப்படும் சமூக ஆர்வலர்கள், இது தொடர்பாகத் தமிழக அரசு முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.

இடிந்து விழுந்த  குளக்கரை சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த குளக்கரை சுற்றுச்சுவர்

தொடர் கனமழையின் காரணமாக, கமலாலய குளத்தின் தென்கரை சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், அந்த சுவரின் மற்ற பகுதிகளும் சேதமடையக்கூடிய நிலையில் இருப்பதால், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் காவலர்கள் கமலாலய குளக்கரையில் இடிந்த பகுதியைப் பார்வையிட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகச் சேதமடைந்த பகுதியைச் சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்த காவலர்கள், கும்பகோணம் மார்க்கமாகத் திருவாரூருக்குச் செல்லக்கூடிய கனரக மற்றும் இலகு ரக வாகனங்களை, இ.பி சந்திப்பில் தடுத்து நிறுத்தி, விளமல் பிரதான சாலை வழியாகத் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

தஞ்சாவூர்: காதல் திருமணம்; கவனிக்க ஆள் இல்லை- உதவுவதாக நடித்து குழந்தையை கடத்திய பெண்! நடந்தது என்ன?

இந்த நிலையில், கமலாலய குளக்கரை சுவர் இடிந்து விழுந்தது குறித்து மிகுந்த ஆதங்கத்தோடு நம்மிடம் பேசிய அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் சிலர், ``பல நூறு ஆண்டுகள் பழமையானாலும் இந்த சுவர்கள் வலிமையாகத் தான் இருந்தன. பத்தாண்டுகளுக்கு முன்பு இங்கு அமைக்கப்பட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளின் காரணமாகவே சுவர்கள் பலவீனமடைந்திருக்கிறது. மேற்கு கரையில் உள்ள சுவரின் ஒரு பகுதி, கடந்த 2014-ம் ஆண்டு இடிந்து விழுந்தது. அதையடுத்து, வடகரை சுவரின் ஒரு பகுதியும் இடிந்தது. தற்போது தென்கரை சுவரும் இடிந்து விழுந்திருக்கிறது. இங்குப் பாதாளச் சாக்கடை திட்டத்தின் கட்டுமான பணிகள் தரமற்ற முறையில் நடந்திருக்கிறது. அதன் காரணமாகவே, குளக்கரையின் மூன்று கரைகளிலும் சுவர்களுக்கு அடியில் உள்ள பகுதி பலவீனமடைந்து சுவர்கள் இடிந்து விழுந்திருக்கிறது.

இடிந்து விழுந்த  குளக்கரை சுற்றுச்சுவர்
இடிந்து விழுந்த குளக்கரை சுற்றுச்சுவர்

ஆனால், கோயிலை ஒட்டி அமைந்துள்ள ராஜ வீதி பகுதியில் மட்டும் ஓரளவுக்குத் உட்கட்டுமானம் தரமாக இருப்பதால், அக்கரையில் உள்ள சுவர் மட்டும் தற்போது வரை தாக்குப்பிடித்து நிற்கிறது. எனவே, தமிழக அரசு உடனடியாக, வல்லுநர் குழுவை அமைத்து, பாதாளச் சாக்கடையின் உள்கட்டுமானங்கள் குறித்து முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும். நல்லவேளையாக உயிர்ச் சேதம் ஏற்படவில்லை. இனிவரும் நாள்களில் இந்த நான்கு சுவர்கள் மட்டுமல்லாமல், குளக்கரை படிகள் மற்றும் கரைகளுக்கு அடுத்துள்ள சாலைகளின் தரத்தை உயர்த்தி, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்" என்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு