Published:Updated:

`வேருடன் பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம்’ - மீட்டு உயிர்கொடுத்த புதுச்சேரி இளைஞர்கள்

ஆலமரம்
ஆலமரம்

புதுச்சேரியில், வேரோடு பிடுங்கியெறியப்பட்ட 50 வருட பழைமையான ஆலமரத்தை மீட்டு, ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் வேறு இடத்தில் மறுபடியும் நட்ட இளைஞர்களுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.

புதுச்சேரி, தவளக்குப்பத்தை அடுத்த தானம்பாளையம் ஆற்றங்கரையோரத்தில் முருகன் என்ற விவசாயிக்குச் சொந்தமான நிலத்தில், சுமார் 50 வருடங்கள் பழைமையான ஆலமரம் ஒன்று வளர்ந்திருந்தது. நீண்ட நாள்களாக பயிரிடப்படாமல் இருந்த அந்த நிலத்தில், விவசாயம் செய்ய முடிவெடுத்திருக்கிறார் முருகன். அதற்காக, நிலத்தை ஆக்கிரமித்து வளர்ந்திருந்த ஆலமரத்தை ஜே.சி.பி இயந்திரத்தின் உதவியுடன் வேருடன் பிடுங்கிப் போட்டிருக்கிறார்.

பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம்
பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம்

அந்தத் தகவலை கேள்விப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், வேரோடு பிடுங்கியெறியப்பட்ட அந்த ஆலமரத்தை மீட்டு, கிரேன் மற்றும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் மீண்டும் வேறு இடத்தில் நட்டு, அதற்கு உயிர் கொடுத்திருக்கின்றனர்.

ஆலமரத்தை மீட்டு வேறு இடத்தில் நட்ட பணியைச் செய்த தனசுந்தராம்பாள், சமூக அமைப்பின் தலைவர் ஆனந்தனிடம் பேசும்போது, ‘‘பிடுங்கியெறியப்பட்ட ஆலமரம், சுமார் 50 ஆண்டுகள் பழைமையானது என்று தாவரவியலாளர்கள் கூறுகிறார்கள். நீண்ட நாள்களுக்குப் பிறகு, அந்த நிலத்தின் உரிமையாளர் விவசாயம் செய்ய நினைத்ததால், அந்த ஆலமரத்தை வேருடன் பிடுங்கியெறிந்துவிட்டார்.

மீண்டும் நடப்பட்ட ஆலமரத்துடன் இளைஞர்கள்
மீண்டும் நடப்பட்ட ஆலமரத்துடன் இளைஞர்கள்

2 நாள்களுக்குப் பின்னர்தான் எங்களுக்கு அந்தத் தகவல் கிடைத்தது. அதை எப்படியாவது மீட்டு, அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க முயற்சிசெய்தோம். அதற்காக, ஓய்வுபெற்ற தாவரவியல் பேராசிரியர் கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தானம்பாளையத்தில் இருக்கும் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மீண்டும் நட்டிருக்கிறோம். சுமார் 15 டன் எடைகொண்ட அந்த மரத்தை கிரேன் மற்றும் ஜே.சி.பி இயந்திரங்களைக் கொண்டு நட்டு பாராமரிக்கிறோம். இந்த மரத்தை எப்படியாவது மீண்டும் வளர்த்துவிட வேண்டும் என்பதுதான் எங்களுடைய குறிக்கோள்’’ என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு