Published:Updated:

`பரிதாபமாக சாலையில் அலைந்து கொண்டிருந்தார்!’- மனநலம் பாதித்தவரை மீட்டு நெகிழ வைத்த கரூர் அமைப்புகள்

செல்ஃபி எடுக்கும் மேகலா
செல்ஃபி எடுக்கும் மேகலா ( நா.ராஜமுருகன் )

இந்த மனிதர் அந்தச் சாலையை இஷ்டத்துக்கு இங்கும் அங்கும் கடந்திருக்கிறார். மனிதாபிமானம் கொண்ட வாகன ஓட்டிகள் இந்த மனிதரின் நிலையைப் புரிந்துகொண்டு, தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்கி, இவருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொண்டுள்ளார்கள்.

கரூர் மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையோரங்களில் அரைநிர்வாணமாக அலைந்த மனிதருக்கு முடிவெட்டி, குளிப்பாட்டி, அவருக்கு புதுசட்டை அணிவித்து, அவரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டதோடு, அவரை மனநல காப்பகத்திற்கு அனுப்பிய பெண் உள்ளிட்ட நான்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் கருணை உள்ளம், நெகிழ்வை ஏற்படுத்தியிருக்கிறது.

மனநலம் பாதிக்கப்பட்டருக்கு முடிவெட்டும் மேகலா
மனநலம் பாதிக்கப்பட்டருக்கு முடிவெட்டும் மேகலா
நா.ராஜமுருகன்
``விகடன் செய்தியால், 20 வருஷத்துக்குப் பிறகு தீபாவளி கொண்டாடினோம்!" - நெகிழும் கரூர் பிச்சை

கரூர் மாவட்டத்தில் இயங்கி வருகிறது, இணைந்த கைகள் என்ற சமூகநல அமைப்பு. இந்த அமைப்பைச் சேர்ந்த சாதிக் அலி என்பவர், சில தினங்களுக்கு முன் கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் இன்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்றபோது, மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், வாகனங்களில் விபத்துக்குள்ளாகும் முறையில் சாலையைக் கடந்திருக்கிறார். இதனால், பதறிப்போன அவர், அந்த மனிதரைக் காப்பாற்றியதோடு, அவரைப்பற்றி அக்கம்பக்கம் விசாரித்திருக்கிறார். அப்போது, அங்கிருந்தவர்கள், 'அவர் யாரென்று தெரியவில்லை. ஆனால், பல மாதங்களாக நாமக்கல் மாவட்டம், வேலூரில் மனநலம் பாதிக்கப்பட்டு சுத்திக்கிட்டு இருந்தார்.

மன நலம் பாதிக்கப்பட்டவர்
மன நலம் பாதிக்கப்பட்டவர்
நா.ராஜமுருகன்

கடந்த மூன்று மாதங்களாக கரூர் மாவட்டத்துக்குள் நுழைந்து, இந்தப் பகுதிக்குள் சுத்திக்கிட்டு இருக்கார். பேசவேமாட்டார். அரைநிர்வாண கோலத்தில் அலைவார். யாராச்சும் சாப்பிட கொடுத்தா, வாங்கிச் சாப்பிடுவார். இல்லைன்னா, குப்பை இலையில் இருக்கும் கெட்டுப்போன உணவை சாப்பிடுவார். பாவம்' என்றிருக்கிறார்கள். அப்போதைக்கு அங்கேயே விட்டுட்டு வந்தாலும், அவரை ஏதாவது ஒரு வழியில் சரிபண்ண வேண்டும் என்ற நினைப்புடன் வந்துள்ளார், சாதிக் அலி.

இந்நிலையில், நேற்று காலை அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சாதிக் அலிக்கு போன் செய்து, 'அவரோட நிலைமை இன்னும் மோசமாயிட்டு. கீழே துணியில்லாமல் நிர்வாணமாயிட்டார். மேல மட்டும் அழுக்கான சட்டையைப் போட்டிருக்கிறார்' என்று தகவல் சொல்லி இருக்கிறார். உடனே, கரூரைச் சேர்ந்த மற்றோர் அமைப்பான இளைய தலைமுறை அமைப்பினரோடு சேர்ந்து, அவரை மீட்க நினைத்திருக்கிறார். அப்போதுதான், ஈரோட்டைச் சேர்ந்த சிறகுகள் அமைப்பு பற்றித் தகவல் கிடைக்க, அந்த அமைப்பிடம் உதவி நாடி இருக்கிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மனிதரை மீட்க ஒப்புக்கொண்ட அந்த அமைப்பைச் சேர்ந்த மிலிட்டரி சரவணன் மற்றும் மேகலா ஆகிய இருவரும், உடனடியாகக் கிளம்பி கரூருக்கு வருகைதந்தனர். கூடவே, அட்சயம் என்ற அமைப்பைச் சேர்ந்தவர்களும் உதவ, அனைவரும் சேர்ந்து, அந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர் இருந்த இடத்துக்கு விரைந்தனர்.

 மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட நல் உள்ளங்கள்
மனநலம் பாதிக்கப்பட்டவரை மீட்ட நல் உள்ளங்கள்
நா.ராஜமுருகன்

அந்த மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மேகலா முடிவெட்டிவிட்டார். அனைவரும் சேர்ந்து, அவரை குளிப்பாட்டி, கையோடு கொண்டு போயிருந்த புது உடையை அவருக்கு உடுத்திவிட்டனர். அதன்பிறகு, அவரோடு நின்று செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அவரை, தனது மொபைலில் எடுத்த போட்டோவை, அந்த மனிதரிடம் காட்டினார் மேகலா. தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் காவல்நிலைய உதவி ஆய்வாளரிடம் அனுமதி வாங்கிக்கொண்டு, அந்த மனிதருக்கு மனநல சிகிச்சை அளிக்க அவரை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாந்தி நிலையத்துக்கு அழைத்துப்போனார்கள்.

சிறகுகள் மற்றும் அட்சயம் அமைப்புகளில் இருக்கும் மேகலாவிடம் பேசினோம். "நாங்க இயற்கையை மீட்டெடுப்பது, பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்று சமூகத்துக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான பணிகளை செய்கிறோம். எனது மகளோடு இந்தப் பணிகளில் ஆர்வமா ஈடுபடுகிறேன். அதோடு, இதுபோன்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களையும் மீட்கும் காரியத்திலும் ஈடுபட்டுக்கிட்டு வர்றோம். எங்க அமைப்பு சார்பாக இதுவரை இதுபோன்ற 300 பேரை மீட்டிருக்கிறோம்.

குளிப்பாட்டும் மேகலா
குளிப்பாட்டும் மேகலா
நா.ராஜமுருகன்

நான் தனிப்பட்ட முறையில், எனது மகளோடு சேர்ந்து 50 நபர்களை மீட்டு, மனநல காப்பகத்தில் சிகிச்சையளிக்க வைத்திருக்கிறேன். கரூர் மனிதர் ரொம்ப பரிதாபமான நிலையில் இருக்கிறார். மனநல பாதிக்கப்பட்டவர்கள் பொதுவா வாய்க்கு வந்ததை பேசுவார்கள். ஆனால் இவர், எதையும் பேசாமல், மௌனமாக இருக்கிறார். கன்னியாகுமரி டு காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை எண் - 7 வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலை.

ஆனால், இந்த மனிதர் அந்தச் சாலையை இஷ்டத்துக்கு இங்கும் அங்கும் கடந்திருக்கிறார். மனிதாபிமானம் கொண்ட வாகன ஓட்டிகள் இந்த மனிதரின் நிலையைப் புரிந்துகொண்டு, தங்கள் வாகனங்களை மெதுவாக இயக்கி, இவருக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக்கொண்டுள்ளார்கள்.

போட்டோவைக் காட்டும் மேகலா
போட்டோவைக் காட்டும் மேகலா
நா.ராஜமுருகன்

ஆனால், தொடர்ந்து வாகனங்களால் இவருக்கு ஏதாவது ஆகாமல் இருக்கணுமே என்ற பதைபதைப்பில்தான் இங்குள்ள நல்ல மனிதர்கள் சிலர், சாதிக் அலி மூலமா எங்களுக்கு தகவல் கொடுத்து, அவரை மீட்க வைத்திருக்கிறார்கள். நாங்களும் அந்த மனிதரை மீட்டுட்டோம். அவர் விரைவில் குணமாவார். அவர் பெயர் என்ன, எந்த ஊர் என்கிற விவரமெல்லாம் அப்போதுதான் தெரியவரும்" என்றார், மகிழ்ச்சியாக!

அடுத்த கட்டுரைக்கு