Published:Updated:

`மூணு நாளா மண்ணைத்தான் சாப்பிட்டிருக்கான்'- மனநலம் பாதித்த தாயிடமிருந்து குழந்தையை மீட்ட இளைஞர்!

குழந்தை அசோக்குடன் முகமது அலி
குழந்தை அசோக்குடன் முகமது அலி

மனைவிக்கு காசநோய் இருப்பது தெரிந்ததால், ஊரைவிட்டே ஓடிவிட்டார் கூர்க்கா கணவர். அதனால், மனநலம் பாதிக்கப்பட்டார் மனைவி. 8 மாதக்குழந்தை வீட்டுக்குள் மண்ணைத்தின்று பசியாறி, மயங்கிக்கிடந்தது..!

``பொறந்து எட்டு மாசம்தான் ஆகுது... குழந்தை பசியில கதறி அழுதது இன்னும் மனசை உலுக்குது. மனநலம் சரியில்லாத அம்மாவுக்கு தன் பசியைப் புரியவைக்க அந்தக் குழந்தை எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கும். அந்த அம்மா குழந்தை அழுகிறதைக்கூட உணரமுடியாம, விட்டத்தைப் பார்த்து உட்கார்ந்துட்டு இருந்துச்சு. வீடு முழுக்க குப்பை. புழு வெச்ச தண்ணியைத்தவிர சாப்பிடவோ, குடிக்கவோ வீட்டில ஒரு பொருள் கிடையாது. குப்பைகளுக்கு நடுவில் வீட்டுக்குள்ளயே யூரின் போயி அழுது அழுது சுருண்டு கிடந்துச்சு குழந்தை. குழந்தை உசுரோட இருக்குதா, இல்லையானு தெரிஞ்சுக்கிறதுக்குள்ள மனசு பதறிப்போச்சு..." - சொல்லும்போதே கண்கள் கலங்குகிறது முகமது அலிக்கு.

தென்காசி, குத்துக்கல்வலசை பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயிடம் மூன்று நாள்களாக உணவின்றி தவித்த எட்டுமாத குழந்தையையும், தன்நினைவு இல்லாமல் இருந்த தாயையும் காவல் துறையின் உதவியுடன் மீட்டு கொரோனா சிறப்பு முகாமில் பாதுகாப்பாக தங்க வைத்திருக்கிறார் முகமது அலி.

அசோக்
அசோக்

சாலைகளில் தன்னிலை மறந்து திரியும் ஆதரவற்றவர்களை மீட்டு, சுத்தப்படுத்தி, உணவளித்துப் பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்து பராமரித்து வரும் பணியை கடந்த மூன்றாண்டுகளாகச் செய்து வருகிறார் முகமது அலி. அசோக் என்ற எட்டு மாத குழந்தையையும், மனநலம் பாதிக்கப்பட்ட தாயையும் மீட்டது பற்றி விவரித்தார் முகமது அலி.

``மனநலம் சரியில்லாதவங்க ஆதரவற்ற நிலையில், இருக்காங்க'னு யாராவது தகவல் கொடுத்தா போதும். உடனே நண்பர்களோடு போயி, அவர்களைச் சுத்தப்படுத்தி முதலுதவிகள் செஞ்சு பாதுகாப்பான காப்பகங்களில் தங்க வெப்போம். ஆரம்பத்தில் நானும் என் நண்பன் விக்னேஷும் தான் இதை பண்ணிட்டு இருந்தோம். இதுபத்தி ஃபேஸ்புக்ல எழுதின பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள நண்பர்கள் எங்ககூட சேர்ந்து உதவி பண்ண ஆரம்பிச்சாங்க.

குழந்தை அசோக்குடன் முகமது அலி
குழந்தை அசோக்குடன் முகமது அலி

பத்து நாளைக்கு முன்னாடி குத்துக்கல்வலசை பகுதியிலிருந்து ஒரு போன் வந்துச்சு. `முப்பது வயசுள்ள ஒரு அம்மா மனநலம் பாதிக்கப்பட்டு இருக்காங்க. அவங்க குழந்தை பசியில் அழுதுட்டே இருக்கு. உதவப் போனா மூர்க்கமா நடந்துக்கிறாங்க. அந்தக் குழந்தையைக் காப்பாத்துங்க'னு சொன்னாங்க. உடனே நண்பர்களோட கிளம்பிப் போனோம். அழக்கூட முடியாத நிலையில், குழந்தை சுருண்டு படுத்து இருந்தான். வாய் முழுக்க மண்ணு. அந்த அம்மாவுக்கு தன்னைச் சுத்தி என்ன நடக்குதுனே தெரியல. வீடு முழுக்க காலியான சிப்ஸ் பாக்கெட். கையில காசு இருந்த வரை குழந்தைக்கு சிப்ஸ் பாக்கெட்களை வாங்கி வாங்கி கொடுத்திருக்காங்க. நாங்க வீட்டுக்குள் போனதும் எங்களைத் தாக்க வந்தாங்க. அவங்களை சமாதானப்படுத்தி குழந்தைக்குப் பாலும், அந்த அம்மாவுக்கு சாப்பாடும் வாங்கிக் கொடுத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தோம்.

அவங்க வீட்டுல தேடிப்பார்த்தப்போ அவங்களோட ஆதார் அட்டையும், கணவருடைய ஆதார் அட்டையும் கிடைச்சுது. அதன் மூலமா அவங்க பேரு செல்வி, கணவர் பேரு ஹரேந்திர பகதூர் சிங்குன்னு தெரிஞ்சுது. வட மாநிலத் தொழிலாளர் ஒருத்தரை திருமணம் செஞ்சு அந்த அம்மா இந்த வீட்டில்தான் கடந்த ஒன்றரை வருஷமா வாழ்ந்துட்டு இருந்துருக்காங்க. வீட்டில் இருந்த டைரியில் செல்வியோட அம்மா நம்பர் இருந்துச்சு. அவங்களுக்கு போன் பண்ணி பேசுனப்போதான் செல்வி பத்தி முழுமையான தகவல் கிடைச்சுது.

மனநலம் பாதிக்கபட்ட செல்வி
மனநலம் பாதிக்கபட்ட செல்வி

இது செல்விக்கு ரெண்டாவது திருமணம். முதல் கணவர் இறந்ததுக்கு அப்புறம் வீட்டை எதிர்த்து திருமணம் செஞ்சுட்டு செங்கோட்டையிலிருந்து குத்துக்கல்வலசையில் செட்டில் ஆயிருக்காங்க. அவங்க கணவர் அந்த ஏரியாவில் கூர்க்கா வேலை பார்த்துட்டு இருந்துருக்காரு. குழந்தை பிறந்த கொஞ்ச நாளில் செல்விக்கு கொஞ்சம் உடம்பு முடியாம போயிருக்கு. ஹாஸ்பிட்டலில் போயி பார்த்தப்போ அவங்களுக்கு டி.பி இருக்கிறதா சொல்லிருக்காங்க. அந்த மெடிக்கல் ரிப்போர்ட் அவங்க வீட்டில் இருந்துச்சு" என்று மெடிக்கல் ரிப்போர்ட்களையும் நம்மிடம் காட்டுகிறார் முகமது அலி.

குழந்தைக்கு சிப்ஸ் பாக்கெட்டா வாங்கிக் கொடுத்திருக்காங்க. கையிலிருந்த காசு காலியானதுக்கு அப்புறம் வீட்டை விட்டு வெளியவே வரல. குழந்தை கடைசி சில நாள்களாக தண்ணியையும் மண்ணையும் சாப்பிட்டுட்டு இருந்துருக்கான்.

``செல்வியோட உடல் நிலையை சரிசெய்ய நிறைய செலவழிக்கணுங்கிறதால், அவங்க கணவர் இவங்கிகிட்ட சொல்லாம டிசம்பர் மாசம் கிளம்பி வடமாநிலத்துக்கு போயிட்டாரு. போனையும் சுவிட்ச் ஆப் பண்ணிட்டார். அந்த ஏமாற்றம் அவங்க மனநிலையை ரொம்ப பாதிச்சுருக்கு. கொரோனா ஊரடங்கினால் வீட்டுகுள்ளேயே அடைஞ்சு கிடந்தது கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கு. இப்போதான் யாருனு கூட தெரியாத மனநிலைக்கு வந்துட்டாங்க.

குழந்தை அசோக்குடன் முகமது அலி
குழந்தை அசோக்குடன் முகமது அலி

மூணு மாசத்துக்கு முன்னாடி அரசு கொடுத்த கொரோனா நிதியுதவியை வாங்கிருக்காங்க. அந்தக் காசை வெச்சு தான் குழந்தைக்கு சிப்ஸ் பாக்கெட்டா வாங்கிக் கொடுத்திருக்காங்க. கையிலிருந்த காசு காலியானதுக்கு அப்புறம் வீட்டை விட்டு வெளியவே வரல. குழந்தை கடைசி சில நாள்களாக தண்ணியையும் மண்ணையும் சாப்பிட்டுட்டு இருந்துருக்கான். மயக்கத்தில் இருந்த குழந்தையை எழுப்பி பால், பிஸ்கட் கொடுத்தோம். அவன் சாப்பிட்ட வேகத்தை நினைச்சா இப்போகூட புல்லரிக்குது. பசியை விட கொடுமையானது எதுவும் இல்ல" என்கிறார் முகமது அலி.

``செல்வியோட அம்மாவுக்கு போன் பண்ணி, அவங்க வீட்டுல வந்து குழந்தையையும் செல்வியையும் ஒப்படைக்கிறோம்னு சொன்னோம். ஆனா அவங்க பார்த்துக்க தயாராக இல்ல. அதுக்கு அப்புறம் அம்மாவையும் குழந்தையையும் சுத்தப்படுத்தி ஆதரவற்ற இல்லத்தில் சேர்க்கலாம்னு கூட்டிட்டு போனோம். இப்போ கொரோனா இருக்கிறதால் எங்கையுமே சேர்க்க முடியல. கடைசியா கலெக்டர் அனுமதி வாங்கி, கொரோனா ஆதரவற்றவர்கள் சிறப்பு முகாம்ல தங்க வெச்சுருக்கோம். குழந்தையை டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் செக் பண்ணோம். `சரியான சாப்பாடு இல்லாததால் குழந்தை சோர்வா இருக்கான். இன்னும் ரெண்டு நாள் இதே நிலை நீடிச்சு இருந்தா குழந்தையோட உயிருக்கே பாதிப்பு ஆயிருக்கும்'னு சொன்னாங்க. கடவுள்தான் அந்தக் குழந்தையை காப்பாத்திருக்காரு.

`எனக்கு நேர்ந்தது, யாருக்குமே நடக்கக் கூடாது!'- `மைம் கலைஞன்' வீரமணியின் சமூக சேவை

இப்போ ஒரே இடத்துல அம்மாவும், குழந்தையும் தனித்தனியா இருக்காங்க. செல்வியோட நிலை இப்படியே இருந்தா குழந்தையை யாருக்காவது தத்துதான் கொடுக்கணும். அவங்க அப்பா, அம்மா பண்ண தப்புக்கு அந்தக் குழந்தை என்ன பண்ணுவான் சொல்லுங்க. இப்போ தினமும் குழந்தையை பார்த்துட்டுதான் வர்றேன். முகாமில் இருக்கவங்க அவனை நல்லா பார்த்துக்கிறாங்க. அவனுக்கு பால் பாட்டில், பழங்கள், டிரெஸ் எல்லாம் நாங்க வாங்கிக் கொடுத்துருக்கோம். அந்தக் குழந்தையோட எதிர்காலத்தை நினைச்சாதான் கொஞ்சம் பயமா இருக்கு. அசோக்கின் எதிர்காலத்துக்கு எதாவது செய்தால்தான் மனசு நிம்மதியா இருக்கும். இப்போ அதுக்கான பயணம் தொடங்கியிருக்கு" என்கிறார் முகமது அலி.

அடுத்த கட்டுரைக்கு