Published:Updated:

`நின்றுபோன திருவிழாக்கள்; தேங்கிய நேர்த்திக்கடன் பொம்மைகள்!’ - மண்பாண்ட தொழிலாளர்கள் கண்ணீர்

தேங்கிய உருவ பொம்மைகள்
தேங்கிய உருவ பொம்மைகள்

ஊரடங்கால் கோயில்களில் திருவிழாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மண்பாண்டங்கள் தேக்கம் அடைந்துள்ளதால் கண்ணீர் வடிக்கின்றனர் மண்பாண்டத் தொழிலாளர்கள்.

தமிழகத்தில் பங்குனி மாதம் குலதெய்வ வழிபாட்டில் துவங்கி பெரும்பாலான கோயில்களில் தொடர்ச்சியாக திருவிழாக்கள் விமரிசையாக நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் இதுபோன்ற திருவிழாக்களில் வெளியூர்களில் உள்ளவர்கள் குடும்பத்துடன் கலந்துகொள்வார்கள். இதில், தென் மாவட்டங்களைப் பொறுத்தவரையில் தேரோட்டங்கள், அம்மன் கோயில்கள், எல்லைச்சாமிகள், கிராம தேவதைகளுக்கான பூஜைகள் போன்ற திருவிழாக்கள் நடைபெறும்.

பொம்மை தயரிப்பு பணி
பொம்மை தயரிப்பு பணி

இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டதுடன் மக்கள் அதிக எண்ணிக்கையில் கூடுவதைத் தவிர்த்திடும் வகையில் கோயில் திருவிழாக்கள் நடத்திடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற திருவிழாக்களில் பக்தர்கள் விரதமிருந்து, தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறவும், நிறைவேறிய வேண்டுதல்களுக்காகவும் அக்னிசட்டி எடுத்தல், உருவபொம்மைகள் செலுத்துதல், அகல் விளக்குகள் ஏற்றுதல் போன்ற நேர்த்திகடன்களை சுவாமிக்குச் செலுத்துவார்கள். இந்த நிலையில், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக தயாரிக்கப்பட்ட பல லட்சம் மதிப்பிலான மண்பாண்டங்கள் தேக்கம் அடைந்துள்ளன.

பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்
பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில்

இதனால், அரசு நிவாரணம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் மண்பாண்டத் தொழிலாளர்கள். இதுகுறித்து விருதுநகரைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர்கள் சிலரிடம் பேசினோம், ``விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் மாரியம்மன் கோயில் சட்டித்திருவிழாதான் பிரசித்தி பெற்றது. சில பகுதிகளில் திருவிழாவை பொங்கல் திருவிழா, அம்மன் பொங்கல் எனவும் சொல்லுவாங்க.

பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்கள் வரைக்கும் தொடர்ச்சியா கோயில் திருவிழாக்கள் நடக்கும். இதை திருவிழா சீசன்னு சொல்லுவோம். இந்த சீசனில் கல்வி, வேலைவாய்ப்பு, வியாபார அபிவிருத்தி, திருமணம், குழந்தைப்பேறு, கடன் பிரச்னை, தீராத நோய்கள், வழக்குகளில் வெற்றி போன்ற வேண்டுதல்களுக்காக அகல்விளக்கு ஏற்றுதல், அக்கினிச்சட்டி ஏந்தி வருதல், ஆயிரம்கண் பானை எடுத்து வருதல், உருவ பொம்மைகள் எடுத்து வருதல் போன்ற வேண்டுதல்களை நிறைவேற்றுவார்கள் பக்தர்கள். விருதுநகர் மாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழாவில் குறைந்தபட்சம் பத்தாயிரம் சட்டிகள் வரை பக்தர்கள் தூக்கிச் செல்வார்கள்.

பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பெண்கள்
பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டும் பெண்கள்

அந்த ஊர்வலத்தைப் பார்த்தாலே உடம்பு சிலிர்க்கும். பங்குனி மாதம் முதல் செவ்வாய்க்கிழமையில் இருந்து எங்களுக்கு வியாபாரம் சூடு பிடிச்சுடும். இதற்காக, தைப்பொங்கல் முடிஞ்சதுமே சட்டி, விளக்கு, பொம்மை தயாரிப்புல முழுவீச்சுல ஈடுபடுவோம். ராத்திரி, பகல் பார்க்காம உற்பத்தி செய்யுறதை மட்டுமே கவனத்துல நிறுத்துவோம். கூடுதல் உற்பத்திக்காக ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை மாவட்டப் பகுதிகளிலிருந்தும் மண்பாண்டம் செய்யும் தொழிலாளார்களை அழைச்சுட்டு வருவோம்.

மாசி மாதம் 15-ம் தேதிக்குள்ள மொத்த உற்பத்தியையும் முடிச்சுட்டு பங்குனி மாதப் பிறப்புக்காகக் காத்திருப்போம். இந்த வருஷம் உள்ளூர்க் கண்மாய்கள் மட்டுமில்லாம தொலை தூரங்களிலுள்ள கண்மாய்களில் கரம்பை, செவல் மண்ணை எடுத்துவந்து பக்குவப்படுத்தி செய்து வச்ச மண்பாண்ட உற்பத்தி அடுக்காவும், குவியலாவும் பல லட்சம் மதிப்பிலான மண் பொருள்கள் வீடுகளிலேயே தேங்கிக் கிடக்கு.

மாரியம்மன் கோயில்
மாரியம்மன் கோயில்

கோயில் திருவிழாக்களுக்கு மொத்தமா தடை விதிச்சதுனால ஒரு விளக்கு கூட விற்பனை செய்ய முடியலை. இந்த திருவிழா சீசன் மாதங்களில் நடக்கும் விற்பனை பணத்தை வச்சுதான் வாங்கிய கடன்களை அடைப்போம், பெண் பிள்ளைகளைக் கல்யாணம் முடிச்சுக் கொடுப்போம், நகைநட்டுகளை வாங்கிச் சேமிப்போம். இப்போ ஒன்னுத்துக்கும் வழியில்லாமப் போச்சு.

இந்த நிலைமையில மே 3-ம் தேதி வரையிலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருக்கு. ஊரடங்கு முடிஞ்சாலும் திருவிழாக்கள் நடக்குறது சந்தேகம்தான். நேர்த்திக்கடன்களுக்காக தயாரிக்கப்பட்ட மண்பாண்டங்கள் மட்டுமல்ல., இந்தக் கோடைக்காலத்துல அதிகமா விற்பனையாகுற மண் பானைகள், மண்ணில் செய்யப்பட்ட டம்ளர்கள், ஜக்குகள், கூஜாக்கள் போன்றவைகளும் தேக்கம் அடைஞ்சிருக்கு.

மண் பொம்மைகள்
மண் பொம்மைகள்

தமிழகம் முழுவதும் இருக்குற எல்லா மண் பாண்டத் தொழிலாளர்களுக்கும் இதே நிலைமைதான். மற்ற தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைப் போல மண்பாண்டத் தொழிலாளர்களுக்கும் உதவித்தொகை வழங்கிடணும்” என்றனர் வேதனையுடன்.

அடுத்த கட்டுரைக்கு