Published:Updated:

``மழை நீரை இப்படியும் சேமித்து பயன்படுத்தலாம்!” - முன்மாதிரியாகத் திகழும் ஆசிரியர்

எல்லோரும் இதைப் பயன்படுத்த தொடங்க வேண்டும். அரசும் இதற்கு நிதி உதவி செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தால் இன்னும் எளிதாக அனைவரையும் சென்றடையும். இதைச் செய்வதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது என்கிறார் இந்த ஆசிரியர்!

அருணன்
அருணன் ( ம.அரவிந்த் )

தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கும்பகோணத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு மழை நீரை சேகரித்து குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகிறார். மழை நீரில் சமைக்கப்படும் உணவு சுவையானதாகவும், அந்த நீரை குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருப்பதாகவும் கூறும் அவர் எல்லோரும் இதைச் செய்தால் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது என்றும் கூறுகிறார்.

அருணன்
அருணன்
ம.அரவிந்த்

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் அருணன் இவர் தாராசுரம் அருகே உள்ள அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பிரபாவதி. இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்தத் தம்பதி தங்களது வீட்டில் மழை நீரைச் சேகரித்து வைத்து அந்த நீரை குடிப்பதற்கும், உணவு சமைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடு பெரிய அளவில் நிலவி வருகிறது. ஒரு குடம் தண்ணீருக்காக பல இடங்களில் மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பே மழை நீரை சேமித்து பயன்படுத்த தொடங்கிய இந்தத் தம்பதியரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இது குறித்து அருணன் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு எங்க பகுதியில் கடும் தண்ணீர்த் தட்டுப்பாடு நிலவி வந்தது. இதனால் நாங்கள் உட்பட எங்க பகுதியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு உள்ளானோம். அந்த சமயத்தில் இப்போதே இப்படி இருக்கிறதே இனி வரும் நாள்களில் தண்ணீருக்காக தமிழகமே தவிக்கின்ற நிலை ஏற்படும் என உணர முடிந்தது. மேலும் தண்ணீர் சேமிப்பின் அவசியத்தை உணரவும் வைத்தது. பின்னர் மழை நீரைச் சேமித்து பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொண்டேன். அதன்படி திருவாரூரைச் சேர்ந்த மழை நீர் சேமிப்பாளர் வரதராஜனின் உதவியாளர் மூலம் எங்க வீட்டில் மழை நீரைச் சேமிக்கக் கூடிய முறையைப் பயன்படுத்தி தொட்டி அமைத்து மழை நீரைச் சேமித்து பயன்படுத்த தொடங்கினோம்.

மழை நீர் சேகரிப்பு தொட்டி
மழை நீர் சேகரிப்பு தொட்டி
ம.அரவிந்த்

முதலில் மழை நீரைச் சேகரிக்கக் கூடிய வகையில் வீட்டின் மேற் கூரையில் தகரச் சீட்டுகள் அமைத்து அதன் மேல் விழும் மழை நீர் குழாய் வழியாக வீட்டிற்குள் சென்று சைடு சிலாப்களில் அமைக்கப்பட்டுள்ள பைபர் டேங்கில் தேங்கி விடும். பின்னர் தேவைப்படும் போது எப்போதும் போல் பைப் மூலம் சேமித்து வைக்கப்பட்ட நீரைப் பயன்படுத்திக் கொள்கின்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 500 லிட்டர் கொள்ளவு கொண்ட 5 குடிநீர்த் தொட்டிகள் வீட்டிற்குள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தத் தொட்டிகளுக்கு அடியில் சுத்தம் செய்யப்பட்ட நிலக்கரித் துண்டுகளைப் பரப்பி வைத்து அதன் மேல் கூழாங்கற்களும் போட்டு வைக்கப்பட்டுள்ளன. இதில் சேமிப்பாகின்ற நீரில் எந்தக் கிருமிகளும் தங்காமல் சுத்தமாக இருக்கும். மேலும் நீர் வரும் குழாய்களில் இடை இடையே வலை அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரோடு சேர்ந்து தூசி, அழுக்கு போன்ற எதுவும் வராமல் தடுத்து விடும்.

மேலும் மழை பெய்கின்ற நேரங்களில் மழை நீர்த் தொட்டிகள் நிரம்பிய பிறகு பின்னர் ஒரு சொட்டு மழை நீர் கூட வீணாகாதபடி மற்றொரு குழாய் வழியாக ஆழ்குழாய் கிணறுக்குச் சென்று சேர்ந்து விடுவது போல் இந்த மழை நீர் சேகரிப்பு தொட்டியை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டமும் உயரும். ஒரு மணி நேரம் மழை பெய்தால் போதும் 500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 5 தொட்டிகளில் நீர் நிறைந்து விடும். இதன் மூலம் 2,500 லிட்டர் தூய்மையான தண்ணீர் கிடைப்பதோடு அவை சுமார் 6 முதல் 8 மாதங்கள் வரை எங்கள் குடும்பத்தில் உள்ள நான்கு பேருக்கும் குடிப்பதற்கும் உணவு சமைப்பதற்கும் பயன்படுகிறது.

மழை நீர் சேகரிப்பு
மழை நீர் சேகரிப்பு
ம.அரவிந்த்

மழை நீரை நாங்கள் ஆய்வகத்திற்கு அனுப்பி சோதனை செய்தோம். அதில் ரொம்பவும் சுத்தமான நீர் எனச் சான்றிதழ் கொடுத்தனர். இது ஒரு மனதிருப்திக்காகச் செய்யப்பட்டது. ஆனால், மழை நீரைப் பயன்படுத்த தொடங்கியதிலிருந்து ஏராளமான நன்மைகள் கிடப்பதை எங்களால் உணர முடிகிறது.

இந்த நீரில் சமைக்கின்ற உணவு மிகவும் சுவையாக இருப்பதோடு நீண்ட நேரம் கெட்டுப் போகாமலும் இருக்கிறது. அதோடு உடம்பிற்கு எந்த நோயும் வருவதில்லை. நாங்க மழை நீரைப் பயன்படுத்த தொடங்கிய பிறகு சிகிச்சைக்காக டாக்டர் கிட்ட செல்வதே கிடையாது. அந்த அளவிற்கு உடலை ஆரோக்கியமாக இருக்க வைக்கிறது. இதன் மூலம் மனமும் நிறைவடைகிறது. மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைதான் நாங்கள் முழுமையாக சமைப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தி வருகி்றோம்.

மழை நீர் சேகரிப்பு
மழை நீர் சேகரிப்பு
ம.அரவிந்த்

ஆண்டுக்கு இரு முறை 2 மணி நேரம் மழை பெய்தால் போதும், ஆண்டு முழுவதும் எங்களுக்கு தேவையான சுத்தமான சுகாதாரமான தண்ணீர் கிடைத்து விடுகிறது. மழை நீரைச் சேமித்து நாங்க 2 ஆண்டுகளுக்கு மேலாகப் பயன்படுத்தி வருகிறோம். இதை அமைப்பதற்கு ரூ.70 ஆயிரம் செலவானது.இந்த முறையைப் பயன்படுத்துங்கள் என நானும் என் மனைவியும் எல்லோரிடமும் சொல்லி வருகிறோம். என் நண்பர்கள் சில பேரும் மழை நீரைச் சேமித்து பயன்படுத்தி வருகின்றனர். நான் பணிபுரியும் பள்ளியிலும் மாணவர்களிடம் மழை நீர் சேமிப்பின் அவசியத்தை அடிக்கடி கூறி வருகிறேன். எல்லோரும் இதைப் பயன்படுத்த தொடங்க வேண்டும். அரசும் இதற்கு நிதி உதவி செய்து மக்களிடம் கொண்டு சேர்த்தால் இன்னும் எளிதாக அனைவரையும் சென்றடையும். இதைச் செய்வதன் மூலம் தமிழகத்தில் தண்ணீர்த் தட்டுப்பாடே இருக்காது. மக்களும் தாகமின்றி வாழலாம். இது அடுத்த தலைமுறைக்காகவும் நாம் நிச்சயமாக செய்ய வேண்டிய ஒன்றாகும்” என்றார்.