Published:Updated:

வீல் சேரில் தாயின் சடலம்; அடக்கம் செய்ய 3 கி.மீ தள்ளிச் சென்ற மகன் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

வீல் சேரில் தாயின் சடலத்தைத் தள்ளிச் செல்லும் முருகானந்தம்

விடிவதற்குள் தாயின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துவிட வேண்டுமென, மகன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வீல் சேரில் தாயின் சடலம்; அடக்கம் செய்ய 3 கி.மீ தள்ளிச் சென்ற மகன் - திருச்சியில் அதிர்ச்சி சம்பவம்

விடிவதற்குள் தாயின் சடலத்தை யாருக்கும் தெரியாமல் அடக்கம் செய்துவிட வேண்டுமென, மகன் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:
வீல் சேரில் தாயின் சடலத்தைத் தள்ளிச் செல்லும் முருகானந்தம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை பாரதியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பெரியசாமி (80) - ராஜேஸ்வரி (74) தம்பதி. வயதான இந்த இருவரும் உடல்நலம் சரியில்லாமல், கடந்த சில வருடங்களாகப் படுக்கையிலேயே கிடந்துள்ளனர். இந்தத் தம்பதிக்கு மூன்று மகன்கள் இருக்க, கடைசி மகன் முருகானந்தம்தான் தாய் தந்தையரை கவனித்துவந்திருக்கிறார். கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு ராஜேஸ்வரிக்கு திடீரென பக்கவாதம் ஏற்பட்டு கை, கால்கள் செயலிழந்துபோயின. அதற்கு சிகிச்சை பெற்றுவந்த சூழலில், திடீரென உடல் முழுக்க அலர்ஜியால் அரிப்பு ஏற்பட்டு ஒருகட்டத்தில் உடலே புண்ணாக தகித்திருக்கிறது.

எலெக்ட்ரீஷியன் வேலைக்குப் போய் கிடைத்த பணத்தை வைத்து, முருகானந்தம் தாய், தந்தையரை கவனித்துவந்திருக்கிறார். முழு நேரமும் பெற்றோர் அருகிலேயே இருக்கவேண்டிய சூழலால், ஒருகட்டத்தில் முருகானந்தம் வேலைக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கிடையே, முருகானந்தத்தின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறார். தாய் ராஜேஸ்வரியின் தோல் நோயால், உறவினர்கள் யாருமே எட்டிப் பார்க்காமல் இருந்துள்ளனர். இப்படிப் பல விஷயங்களால் மனம் உடைந்துபோயிருந்த முருகானந்தத்தை, அதிகாலை நடந்த சம்பவம் மேலும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

ராஜேஸ்வரி சடலம்
ராஜேஸ்வரி சடலம்

நேற்று முன்தினம் தாய் - தந்தையருக்கு உணவு கொடுத்துவிட்டு தூங்கியிஉக்கிறார் முருகானந்தம். விடியற்காலை 4 மணிக்கு எழுந்து பார்த்தபோது தாய் ராஜேஸ்வரி பேச்சு மூச்சில்லாமல் படுக்கையிலேயே இறந்துகிடந்திருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்துபோனவர் சில நிமிட யோசனைக்குப் பிறகு, தனியாகவே தாயை அடக்கம் செய்துவிட வேண்டுமென்ற முடிவுக்கு வந்திருக்கிறார். அதையடுத்து, தாய் பயன்படுத்திவந்த வீல் சேரிலேயே அவரது சடலத்தை உட்காரவைத்திருக்கிறார். சடலம் கீழே சரியாமல் இருக்க முதுகுப் பக்கம் தலையணை வைத்தும், தலை கீழே விழாமல் இருக்க தகடு போன்ற பிளேட் ஒன்றையும் வைத்து சேலையால் சடலத்தை இறுகக் கட்டியிருக்கிறார். அதன் பிறகு வீட்டிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள நகராட்சி மயானத்துகு, வீல் சேரில் தாயின் சடலத்தை வைத்து தள்ளியபடியே சென்றிருக்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

மயான வாசலில் தாயின் சடலத்தோடு நின்றிருந்த முருகானந்தத்தைப் பார்த்து, அந்த வழியே சென்ற பொதுமக்கள் அதிர்ந்துபோயுள்ளனர். அதையடுத்து மயான ஊழியர்களுக்குத் தகவல் கொடுக்கப்பட, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ராஜேஸ்வரியின் சடலத்தைப் பெற்று அடக்கம் செய்துள்ளனர். ‘ராஜேஸ்வரியின் தோல் நோய் நமக்கும் பரவிவிடும்’ என அவரின் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என எவருமே எட்டிப்பார்க்காமல் இருந்துள்ளனர். உச்சமாக, அவரின் மற்ற மகன்கள் இருவருமேகூட வீட்டுப் பக்கமே வரவில்லையாம். இதையெல்லாம் மனதில் நினைத்தே ‘எங்க அம்மா உயிரோட இருந்தப்ப எவனும் வரலை. அவங்க செத்த பின்னாடி எவன் வந்து என்ன செய்யப் போறான்... நானே என் அம்மாவைக் கடைசிவரைக்கும் காட்டுல கொண்டுபோய் சேர்த்துடுறேன்’ என முருகானந்தம் இப்படிச் செய்ததாகச் சொல்கின்றனர்.

உயிரிழந்த ராஜேஸ்வரி
உயிரிழந்த ராஜேஸ்வரி

`ஆம்புலன்ஸ் மூலமாக சடலத்தை மயானத்துக்கு கொண்டு வந்தா நிறைய செலவாகும்னு நெனச்சேன். அதனாலதான் விடியறதுக்குள்ள நாமளே யார்கிட்டயும் சொல்லாம, யாருக்கும் தெரியாம அம்மாவை அடக்கம் செஞ்சுடணும்னு நினைச்சேன். எங்க அம்மா செத்ததும் எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை’ என மயானத்தில் இருந்தவர்களிடம் கண்ணீர்விட்டுக் கலங்கியிருக்கிறார் முருகானந்தம்.

முருகானந்தம் செய்த விஷயம் உடனே ஊருக்குள் பரவி பரபரப்பாகியிருக்கிறது. அதற்கிடையே, முருகானந்தம் தன் தாயின் சடலத்தை வீல் சேரில்வைத்து தள்ளியபடியே நடந்துவந்த சிசிடிவி காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவ, பெரும் பரபரப்பானது. இப்படியான சம்பவங்கள் நடப்பதை செய்திகளில் பார்த்துவந்த சூழலில், திருச்சியில் இப்படியொரு சம்பவம் அரங்கேறியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.